எ.வ.வேலு மீது பொய்யான புகார்: தி.மு.க தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முத்துராமலிங்கம்
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு, வரும் டிசம்பர் 4ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராக மாறன் என்பவரும், அ.தி.மு.க வேட்பாளராக காலம் சென்ற சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி சரோஜாவும் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஏற்காட்டில் முகாமிட்டு தங்கள் கட்சியின் வேட்பாளர் சரோஜாவை வெற்றிபெற செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல, தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 22.11.2013 அன்று, அயோத்தியபட்டணம் ஒன்றியம், காரிப்பட்டி அருந்ததியர் காலனியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த, அ.தி.மு.க, வை சேர்ந்த கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அங்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருடன் வந்திருந்த தி.மு.க கட்சியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் வாக்கு சேகரிப்பதை தடுத்து தகராறு செய்து தாக்க முயன்றதாக கூறி சனிக்கிழமை காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதன்படி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட ஐம்பது தி.மு.கவினர் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முத்துராமலிங்கம்,
இது எங்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் மீது திட்டமிட்டு போடப்படும் பொய் வழக்கு என்றும், தேர்தல் பணியில் சிறப்புடன் செயல்பட்டு, தொகுதி மக்களிடம் அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவோரை மிரட்டுவதற்காக அ.தி.மு.க வினர் பொய்யான புகார்களை கொடுக்கிறார்கள், அதற்கு காவல் துறையினரும் துணை போகிறார்கள், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சம்பவம் நடந்த அன்று வாழப்பாடி ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் காரிப்பட்டிக்கு போகவேயில்லை. அப்படியிருக்க, அவர் அங்கு வந்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியுடன் சண்டைக்கு போனார் என்று சொல்லுவது முற்றிலும் பொய்யான செய்தி.
இதுகுறித்து, என்ன நடந்தது என்று முறையாக விசாரணை செய்யாமல் போலீசார் வழக்கு போட்டுள்ளனர், வரும் 27,ம் தேதி சென்னை உயர் நீதி மன்றத்தில் தி.மு.க சார்பாக போடப்பட்டுள்ள வழக்கை திசை திருப்பி முயற்சியாகும், திமுக வினரும் மோதலில் ஈடுபடுகிரார்கள் என்று கணக்கு காட்டவே போலீசார் முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் புகார் அனுப்பியுள்ளோம் என்று கூறினர்.
No comments:
Post a Comment