தீபாவளி கொண்டாடும் கழகத் தோழர்களே ! தீபாவளி குறித்து,'தலைவர் கலைஞர்' அவர்களின் கருத்தை படியுங்கள் ! தமிழர்களுக்கு பகிருங்கள் !
இந்த சமுதாயம் இன்றைக்கு இந்த அளவிற்குக் கெட்டிருப்பதற்கு என்ன காரணம்? இன்று தீபாவளி கொண்டாடப்போகிறோம்...தீபாவளிக்காக எழுதி வைக்கப்பட்டிருக்கின்ற புராணங்களை-கதைகளை நம்பித்தானே தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஏன் இதை சொல்லுகிறேன் என்றால், தீபாவளிக்காகச் சொல்லப்படுகின்ற கதை என்ன?
திடீரென்று ஒருநாள்-ஒரு அரக்கன்,பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டான்.உடனே விஷ்ணு,வராக(பன்றி) அவதாரம் எடுத்து,கடலுக்குள்ளே நுழைந்து பூமியைத் திரும்பப் பெற்று,அந்த அரக்கனையும் கொன்றுவிட்டு, வெளியே வந்தார்.
உடனே பூமாதேவிக்கு வராக அவதாரமாக இருந்த விஷ்ணுவின் மீது காதல் பிறந்தது.இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.அந்த குழந்தைதான் நரகாசூரன். அவன் பல அக்கிரமங்களை செய்தான்.எனவே பூமாதேவி அந்த நரகாசூரனைக் கொன்று விட்டாள்.
அப்படிக் கொல்லப்பட்டபோது நரகாசூரன்,'நான் இறந்த நாளை எல்லா மக்களும் எண்ணெய் தேய்த்து முழுகி, புத்தாடை உடுத்திக் கொண்டாடவேண்டும்'என்று கேட்டுக்கொண்டான்.தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றி வைப்பதாக பூமாதேவியும் சொன்னாள். அதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
முதலிலேயே கதை அடிபடுகின்றதா? இல்லையா? ஒரு அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டான் என்றால், பூமி என்ன பாயைப்போலவா இருக்கிறது,சுருட்ட?பூமி உருண்டையானது அல்லவா?பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன் எழுதிய புராணம் அது.பூமி, பாயாகச் சுருட்டப்படுகிறது.பூமியில் தானே அந்தக் கடலும் இருக்கிறது?பிறகு எப்படி கடலுக்குள்ளே பூமியை எடுத்துக்கொண்டு போய் ஒளிந்து கொண்டான்?
கடலுக்குள்ளே போய் ஒளிந்துகொண்ட அந்த அரக்கனை வெல்ல மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார்.வராக அவதாரத்தைப் பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள். வராக அவதாரம் என்றால்,பன்றி முகம் உடைய ஒரு மனிதன்.அதைப்பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள்.
இப்படிப்பட்ட கதைகளின் அடிப்படையில் வருகின்ற பண்டிகைகள் ஒரு சமுதாயத்தினுடைய எதிர்காலத்தை- ஏற்றத்தை-முன்னேற்றத்தை முகிழ்க்க விடாமல் பட்டுப்போகச் செய்கின்ற நிலைமையிலே இருக்கின்றக் காரணத்தினாலேதான் அவைகள் மீதெல்லாம் நாம் மறுப்புக் கணைகளைத் தொடுக்க வேண்டியவர்களாக ஆனோம்.
No comments:
Post a Comment