கேள்வி :- ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதி மன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து
அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?
பதில்:- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்
பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதி மன்றம் அபராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே
அவமானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும். நீதியரசர் தனது தீர்ப்பில், """"இந்த வழக்கு ஓராண்டாக
நிலுவையில் உள்ளது. பல முறை விசாரணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு
தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை.
இதனால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தேர்வு வாரியத் தலைவருக்கு 5
ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும்""
என்றெல்லாம் சொல்லி யிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்கு கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே
விதிக்கப்பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.
இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட்களுக்கு முன்பு ஐகோர்ட் நீதிபதிகள், ஜெயச்சந்திரன்,
நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலே கூட தங்கள் வேதனையைத்
தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், """"குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்க்
கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல்
செய்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை
டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரிவாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை
நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறைபாடு களைக்
களைய போலீசாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைப் போலீசார் சரியாகப் பயன்படுத்தவில்லை.
இந்த வழக்கில் போலீசாரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமை யின்மை வெளிப்பட்டுள்ளது.
இதற்கு மேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரியவில்லை.
கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணை முழுவதும் வீணாகி விட்டது. ஐகோர்ட் வைத்திருந்த நம்பிக்கையை போலீசார்
தகர்த்து விட்டனர். தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க போலீசார்
தவறிவிட்டனர். போலீசார் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணர வேண்டும். விசாரணையில்
போலீசார் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் நீதி
தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம்"" என்று காவல் துறை பற்றி நீதிபதிகள்
விமர்சித்திருக்கிறார்கள். கழக ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே """"காவல்
துறைக்குப் பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும்"" என்று
அறிக்கை கொடுத்திருப்பார்கள். ஆனால் இப்போது?
No comments:
Post a Comment