காமன்வெல்த்: இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக சார்பில் பேசிய மு.க.ஸ்டாலின், முதல்–அமைச்சரால் கொண்டு வரப்பட்ட அரசினர் தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்.
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறப் போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் பலமுறை குரல் கொடுத்துள்ளார்.
25–3–13 அன்று நடந்த தி.மு.க. செயற்குழுவிலும், 16–7–13 அன்று நடந்த டெசோ கூட்டத்திலும் இது பற்றி விரிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.
தி.மு.க. மட்டுமல்ல பல்வேறு கட்சிகளும் தமிழ் உணர்வு ஆர்வலர்களும் மட்டுமின்றி முதல்–அமைச்சரும் 17–10–13 அன்றும், 25–3–13 அன்றும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனடா நாட்டின் அகில உலக தமிழர்களும் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிபரே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து எம்.பி.க்களும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழக அளவில் அனைவருமே இதில் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையுடனான உறவை இந்தியா கைவிடாமல் இருந்தால் காமன்வெல்த் நாடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ராஜபக்சே அவைத் தலைவராக வந்து விடும் நிலை ஏற்பட்டு விடும்.
எனவே ராஜபக்சே நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பிக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாகி விடும். இதை கருத்தில் கொண்டாவது இந்தியா காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தும் இந்த கருத்துக்கு ஆதரவாக இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி முதல்– அமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment