'தெருப்பாடகன்' படம் தொடங்கிய நேரத்தில் விஜயகாந்த் என்னிடம், 'ஊரில் எனக்கு பெண் பார்த்து அக்கா முடிவு செய்திருக்கிறார்கள்' என்றார். வாழ்த்து தெரிவித்தேன்.
'எனது திருமணம் மதுரையில் நடக்கிறது. கலைஞர் தலைமை தாங்கி நடத்தித் தரவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள்தான் கலைஞர் சம்மதத்தைப் பெறவேண்டும்' என்றார்.
அன்று மதியமே கலைஞரைப் பார்க்க புறப்பட்டேன். முதல்வர் கலைஞர் அப்போது பைல் பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம் நின்று கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்தவர், 'வாய்யா! என்ன இந்த நேரத்தில்?' என்று கேட்டார்.
'பைல் பார்க்கறீங்க. வேணும்னா அப்புறம் வந்து பார்க்கிறேன்' என்றேன்.
அவரோ, 'முதல்-அமைச்சர்ன்னா எப்பவும் வேலை இருக்கத்தான் செய்யும்' என்றார்.
பைல் விஷயமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சில உத்தரவுகளை பிறப்பித்து அனுப்பியவர், 'இப்ப சொல்லுய்யா' என்றார்.
விஜயகாந்துக்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை கூறி, 'மதுரையில் நடக்கும் திருமணத்தை நீங்கள் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புகிறார்' என்ற தகவலையும் சொன்னேன்.
சற்று நேர மவுனத்துக்குப் பிறகு, 'நாளைக்கு விஜயகாந்தை அழைச்சிட்டு வாப்பா' என்றார்.
சொன்னபடி மறுநாளே விஜயகாந்துடன் போய் கலைஞர் முன்பாக நின்றேன். எங்களுடன் விஜயகாந்தின் நண்பரும், தயாரிப்பாளருமான ராவுத்தரும் வந்திருந்தார்.
விஜயகாந்திடம் கலைஞர் அவரது படங்கள் பற்றி பேசினார். பிறகு எந்த தேதி வேண்டும் என்று கேட்டார். விஜயகாந்த் 3 தேதிகளை சொல்லியதில் ஒரு தேதியை கலைஞர் உறுதி செய்தார். மகிழ்ச்சியுடன் விஜயகாந்த் விடைபெற்றார்.
வெளியே வந்து காரில் ஏறப்போன சமயத்தில் ராவுத்தர், 'அண்ணே! மூப்பனாரை கூப்பிடறது பற்றி தலைவரிடம் கேட்காமல் இருந்துட்டோமே' என்று பதறினார்.
நான் மறுபடியும் கலைஞர் இருந்த மாடி அறைக்கு ஓடினேன். போன வேகத்தில் திரும்பி வந்ததை பார்த்த கலைஞர்
'என்னய்யா? வேறு ஏதாவது விஷயமா?' என்றார்.
'திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் மூப்பனாரையும் அழைக்கலாமா என்று கேட்கிறார்கள்' என்றேன்.
'நான் விரும்பும் தலைவர்களில் மூப்பனாரும் ஒருவர். கண்டிப்பாக அழைக்கச் சொல்' என்றார்.
கலைஞர் சொன்னதை வெளியில் நின்று கொண்டிருந்த விஜயகாந்திடம் சொன்னபோது, அவரது முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.
மதுரை ராஜா முத்தையா ஹாலில் 1990 ஜனவரி 31-ந்தேதி கலைஞர் தலைமையில், மூப்பனார் முன்னிலையில் விஜயகாந்த் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. ஏராளமான கூட்டம்.
'இந்த சந்தோஷத்தை என் ஆயுளுக்கும் மறக்கமாட்டேன்' என்று என்னிடம் தனது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஒருசேர பகிர்ந்து கொண்டார், விஜயகாந்த்.
No comments:
Post a Comment