வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/09/2013


கொலை பயத்தின் கோரப்பிடியில் தமிழகம்!



கழக ஆட்சி நடைபெற்ற போது காவல் துறை சீரழிந்து விட்டது என்று அன்றாடம் அறிக்கை கொடுத்த இன்றைய முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள காவல் துறை எந்த நிலையிலே உள்ளது என்பதை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் தொகுத்துத் தந்துள்ள இந்த விவரங்களிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்வதற்காகவே இந்தக் கடிதம்!

காவல் துறை பற்றி நடந்த சம்பவங்களின் அடிப்படையில் நான் விமர்சனம் செய்தால் எதிர்க்கட்சி விமர்சனம் என்பார்கள். எனவே ஆளுங்கட்சி ஆதரவு வார இதழ் என்று கருதப்படும் ஜூனியர் விகடனில் வந்த செய்திகளையே முதலில் குறிப்பிடுகிறேன்.

"டெல்லியில் மாணவி, மும்பையில் பத்திரிகை யாளர் பலாத்காரம் எனப் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில், வட மாநிலப் போலீசார் விரைவாகக் குற்றவாளிகளைக் கைது செய்தனர். ஆனால், திருச்சியில் எட்டாம் வகுப்பு மாணவி தவ்ஹித் சுல்தானா, தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில், மரணத்துக்கான காரணத்தைக் கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கொடுமை. இதற்காக திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், " ரயில்வே போலீசார், திருச்சி மாநகரப் போலீசார், சி.பி., சி.ஐ.டி. போலீசார் தவ்ஹித் சுல்தானாவின் வழக்கு அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டாலும், சுல்தானாவின் வலது கை, இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திருச்சி காவல் துறை கோமாவில் இருக்கிறது" எனக் காட்டமாகப் பேசினர்.

த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் பேசுகையில், "இந்த வழக்கை முதலில் விசாரித்த ரயில்வே போலீசார், சுல்தானா தற்கொலை செய்து கொண்ட தாக எடுத்த மாத்திரத்திலேயே சொல்லிவிட்டனர். பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டதையும் மறுத்துவிட்டனர். மாநகரப் போலீசார் சுல்தானா தனது நோட்டில் எழுதி வைத்திருந்த இரண்டு செல்போன் எண்களைக் கொண்டு, பொறியியல் கல்லூரி மாணவர்களான ஐந்து பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் உமர் ஃபாரூக் என்பவனை சுல்தானா காதலித்ததாகவும், 13ஆம் தேதி மாலை சுல்தானாவை தனது பைக்கில் இரட்டைமலை கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஃபாரூக் தன் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரப்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் வைத்து விட்டதாகவும் சொன்னார்கள். பிறகு அந்த ஐவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துப் போய் விசாரித்தனர். இது எல்லாப் பத்திரிகையிலும் வெளியானது. ஆனால் இப்போது அந்த ஐந்து பேரையும் விட்டு விட்டு, இது தற்கொலை என்கிறார்கள். ஆடையில்லாத நிலையில் உடல் சிதறிய நிலையில் சுல்தானா கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், யாராவது உடைகளைக் கழற்றி வைப்பார்களா? 

சுல்தானா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் கடந்த 5ஆம் தேதி திருச்சி புங்கனூரைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ராமஜெயம் வழக்கிலும் - அதற்கு முன்பே இறந்துபோன ரியல் எஸ்டேட் அதிபர்கள் துரைராஜ், தங்கவேலு வழக்கிலும் இதுவரை குற்றவாளிகளை சி.பி., சி.ஐ.டி. போலீசார் கைது செய்யவே இல்லை" என்றெல்லாம் கூறியதாகச் செய்தி வந்துள்ளது.

"பெண் கற்பழிப்பு, கொடுமை வழக்குகள் தமிழகத்தில் அதிகரிப்பு"" என்ற தலைப்போடு "தினமலர்" 13-9-2013 அன்று வெளியிட்ட செய்தியில், "தமிழகத்தில், கற்பழிப்பு மற்றும் கணவன் மற்றும் குடும்பத்தாரால் பெண்கள் கொடுமைப்படுத்தப்படும் வழக்குகள், கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி யுள்ளன. கடந்த 2009இல் 3,426ஆக இருந்த பெண் களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 4,306 ஆக உயர்ந்து விட்டது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை, பெண் களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4,287ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது"" என்றெல் லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- கலைஞர் கடிதம் - பாகம் 1

No comments:

Post a Comment


Labels