வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/09/2013


இந்த விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா? : கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங்கே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?
பதில் :- நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யாவும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும் பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்? 
அதுபோலவே அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டா மென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்? எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா?

கேள்வி :- சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் 200 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில் :- பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் ஒன்பது அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறதாம்.
மாற்றுத் திறனாளிகளுக்காக தி.மு.கழக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006ஆம் ஆண்டில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டிருந்தது. 2010-2011ஆம் ஆண்டில் தி.மு. கழக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி 176 கோடி ரூபாய். மாற்றுத் திறனாளிகள் மறந்து விடுவார்களா என்ன?

கேள்வி :- அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 600 ஆசிரியர்கள் காலிப் பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

பதில் :- தமிழக அரசு உடனடியாக அவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு 600 காலிப் பணி இடங்களை நிரப்பாத நிலையில்தான், ஐந்து இடங்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்களைத் திறக்கப்போவதாகவும், அதன் மூலம் வருங்காலத்தில் தொழில் திறன் வாய்ந்த மனித வளம் அதிகரிப்பதற்கு வழிவகை ஏற்படும் என்றெல்லாம் அரசின் செய்திக்குறிப்பிலே தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment


Labels