வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/09/2013

சேது திட்டம்: அப்போது தொடை தட்டியவர்கள் இப்போது பம்முகிறார்கள்- கி.வீரமணி

சென்னை: சேது கால்வாய்த் திட்டமே தங்களால்தான் வந்தது என்று தோள் தட்டி தொடை தட்டிப் புறப்பட்ட ‘வீராதி வீரர்கள்’ தற்போது வாயடைக்கப்பட்டு, மடந்தைகளாக இருப்பது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறி்க்கையில், "சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, திட்டமிட்டே மதவாத சக்திகளும், அரசியல் லாபம் எங்கே தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கும் சென்றுவிடுமோ என்ற உள்நோக்கத்தோடு, சில பொருந்தாக் காரணங்களைக் கூறி, முன்னே கூறியதற்கு முற்றிலும் முரணாக அ.தி.மு.க. போன்ற கட்சியும், பார்ப்பன இந்துத்துவா கட்சிகளும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று
தடையாணை பெற்று, ஐந்து ஆண்டுகளுக்குமுன்பே முடிந்து கப்பல்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டன!

தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் வளர்ச்சி எல்லாம் இதன்மூலம் முடக்கப்பட்டன. ‘ராமர் பாலம்’ என்ற ஒரு கற்பனைக் கதையைக் கட்டிவிட்டு, மிகப்பெரிய தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டத்தைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதே வழித்தடத்தில் நிறைவேற்றிட உறுதிபூண்டு, அமைச்சரவையில் முடிவெடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இப்படி ஒரு பணி மீண்டும் தொடங்கப்பட்டு, முடிவு பெறுவதைத் தடுக்கவே, உச்ச நீதிமன்றத்தில் காலதாமதம் செய்ய சில ‘‘வித்தைகளை’’ மனுதாரர்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது கண்கூடாகத் தெரிகின்றது; மத்திய அரசு இதனைக் கவனத்தில் கொண்டு வழக்கை விரைந்து முடிவு எடுக்க அத்துணை முயற்சிகளையும், வாய்தா வாங்கியே காலங்கடத்தும் வித்தைகளை முறியடித்து முன்னேறவேண்டும்.

ஏனோதானோவென்று இருந்தால் நோக்கம் நிறைவேறாது; மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு மாற்றச் சொல்லும் உரிமை நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று, உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளே தெளிவாய், திட்டவட்டமாய் கூறியுள்ளன. அதைப் பயன்படுத்தி விரைந்து மத்திய அரசு செயல்படவேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

ஆறாம் வழித்தடத்தைத் தேர்வு செய்தது (ஆதாம் பாலம் என்ற மணல் திட்டுக்கு - புதிதாக இராமன் பாலம் என்று கூறப்படும் உடைபடும் வழித்தடம்) பா.ஜ.க. தலைமையில் அமைந்த அரசுதானே தவிர, தி.மு.க.வோ, காங்கிரசோ அல்ல. அது ‘நீரி’ என்ற நாகபுரி சுற்றுச்சூழல், பொறியியல் என்ஜினியர் ஆராய்ச்சி அமைப்பு என்ற நிபுணர்கள் குழுவைக் கொண்ட அமைப்புதான்!

மற்றவைகளையெல்லாம் பரிசீலித்துவிட்டே, இந்த ஆறாம் வழித்தடத்தைத் தேர்வு செய்து, பணிகள் தொடங்கப்பட்டு, முக்கால் பாகத்திற்குமேல் பணி முடிந்துவிட்ட நிலை. ‘லெட்டர்பேடு’ மீனவ அமைப்புகளை உருவாக்கி, மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய் அழுகை,போலிக் கூப்பாடு கிளப்பப்பட்டு வருவதையும், அதன் அரசியல் முகமூடிகளையும் கிழித்தெறியவேண்டும்.

இதைவிடக் கேலிக் கூத்து முன்பு சேதுகால்வாய்த் திட்டமே தங்களால்தான் வந்தது என்று தோள் தட்டி தொடை தட்டிப் புறப்பட்ட ‘வீராதி வீரர்கள்’, சூராதி சூரர்கள் ஏனோ தேர்தல் தொகுதி ஏக்கக் கொழுக்கட்டைகளால் வாயடைக்கப்பட்டு, வாய் திறவா மடந்தைகளாக - திறந்தாலும் பாம்புக்கும் நோகாமல், பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் ஈன சுரத்தில் எதிர்ப்புக் காட்டும் அவலத்தை தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்டிட பிரச்சாரப் பெருமழை பெய்தாகவேண்டும்! தென்மாவட்டங்களில் ஒத்தக் கருத்துள்ளவர்கள் இணைந்த பிரச்சார மேடைகள்; கருத்தரங்க களங்களையும் கட்டவேண்டும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels