டீசல் விலை உயர்வுக்கு கருணாநிதி எதிர்ப்பு; மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வழங்கவும் கோரிக்கை
சென்னை: டீசல் விலை உயர்வுக்கும், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குவதற்கும் திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் மீதான கட்டுப்பாட்டை படிப்படியாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் மேலும் டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும் இன்று செய்தி வந்துள்ளது. டீசல் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் லிட்டருக்கு 5.63 ரூபாய் உயர்த்தப்பட்டது. ''குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டீசல் விலையை சிறிய அளவில் உயர்த்தவோ அல்லது குறைக்கவோ எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை ஒட்டு மொத்தமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி விட்டதாகக் கருதக்கூடாது'' என்று மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் சதுர்வேதி தெரிவிக்கிருக்கிற போதிலும், சிறிய அளவில் டீசல் விலையை உயர்த்தும் அனுமதியைக்கூட மத்திய அரசு எண்ணை நிறுவனங்களுக்கு அளிப்பது தவறான முடிவாகும். மாதந்தோறும் லிட்டருக்கு டீசல் விலை 50 காசு உயரும் என்பதை ஏழை எளிய நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது. டீசல் விலை உயர்த்தப்பட்டால், அது வேறு சில பொருள்களின் விலை உயர்வுக்கும் வழி வகுத்து விடும். மத்திய அரசு டீசல் விலை உயர்வு பிரச்சனையில் மீண்டும் பரிசீலனை செய்து ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தியிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு அந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 என்று உயர்த்த வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது. மானிய விலை சிலிண்டர்களை உபயோகப்படுத்தும் அடி மட்ட நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய அரசு உணர்ந்து சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதன் காரணமாக நிதிச்சுமை ஏற்பட்ட போதிலும், அதனை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க மாதம் ஒரு சிலிண்டர் வீதம் மானிய விலை சிலிண்டர்களை வழங்கியே தீரவேண்டும். அதற்கு மத்திய அரசு உதவிட முன்வர வேண்டும் என்று நான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். எனவே தற்போது மானிய விலை சிலிண்டர்கள் ஆண்டுக்கு 9 என்பதை மீண்டும் பரிசீலித்து மாதம் ஒரு மானிய விலை சிலிண்டர் என்று வழங்கிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
No comments:
Post a Comment