பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும்: சந்திரபாபு நாயுடுவுக்கு கலைஞர் கோரிக்கை
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பத்தாண்டுகளுக்கு முன் ஆட்சி அதிகாரத்தை இழந்த சந்திரபாபு நாயுடு, அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “சீமாந்திரா” மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப் பேற்றுள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற குப்பம் தொகுதிக்கு நான்கு நாட்களுக்கு முன், வருகை தந்த சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது, “குப்பம் தொகுதி வளர்ச்சி பெற அனைத்துப் பணிகளையும் செய்வேன். பாலாற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவேன். இதன் மூலம் ஒரு துளி தண்ணீர் கூட வீணாக்காமல் உங்களுக்கு வழங்குவேன். பாலாற்றில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள “ஜனசக்தி” நாளேடு, “ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்த போது பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யப் பட்டது. இதனால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென்று அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க., பா.ம.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி அணை கட்டும் முயற்சியை ராஜ சேகர ரெட்டி அரசு கைவிட்டது” என்று கழக ஆட்சிக் காலத்தில் மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாலாற்றில் அணை கட்டும் முயற்சியை ஆந்திர மாநில அரசு கை விட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
கழக ஆட்சியின் போது, உச்சநீதிமன்றம் 7-1-2008 அன்று வழங்கிய தீர்ப்பில், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாலாற்றில் அணை கட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு கூட்டம் ஒன்றைக் கூட்டிட அறிவுறுத்தியது.
அதன்படி 11-3-2008 அன்று மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் நடத்திய கூட்டத்தில், மத்திய நீர்வளக் குழுமம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை, ஆந்திர மாநிலம் இத்திட்டத்தைத் தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள வேலுhர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பாலாறு. பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழக மக்கள் குடிதண்ணீருக்குத் தவிக்க நேரிடும்.
சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கிட தெலுங்கு - கங்கை திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கழக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றித் தந்தவர் சந்திரபாபு நாயுடு. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகில் நடைபெற்றது. நானும் சந்திரபாபு நாயுடுவும் தம்பி துரைமுருகன் மற்றும் அமைச்சர்களும் இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கு அவர் காட்டிய அக்கறையையும், முயற்சிகளையும் எடுத்துரைத்ததை என்னால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மனித நேயமும், அண்டை மாநில மக்களின்பால் அன்பும் கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு “பாலாற்றில் அணை கட்டுவேன்” என்று சொன்னார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
“சீமாந்திரா” மாநில முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசும்போது சந்திரபாபு நாயுடு , “விஜயவாடா - குண்டூர் நெடுஞ்சாலையில் மாநிலத்தின் தலைநகரத்தை உலகத்தின் மிகச் சிறந்த முறையில், திட்டமிடப்பட்ட நகரமாக உருவாக்கி, அதில் நவீன வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தித் தருவேன்.
சென்னையிலிருந்து ஐதராபாத் நகருக்கு அதிவேக புல்லட் ரெயில் விடுவதற்கான திட்டம் ஒன்றை நிறைவேற்றிக் காட்டுவேன். இயலாதது என்று எதுவுமில்லை. மாநிலத்தின் புதிய தலைநகரையும், விசாகப்பட்டினத்தையும், திருப்பதியையும் முப்பெரும் நகரங்களாக உருவாக்குவேன்” என்று அறிவித்ததை ஏடுகளின் வாயிலாக அறிந்து பெரிதும் மகிழ்ச்சி யடைந்தேன். எனவே புதிய சீமாந்திரா முன்னேற்றத்திற்கு தன்னுடைய கனவுத் திட்டங்களின் செயலாக்கத்தில் சந்திரபாபு நாயுடு நேரத்தையும் நினைப்பையும் செலவிட வேண்டுமே தவிர, ஒருதரப்பு மக்களுக்கு பால் வார்ப்பதாகச் சொல்லி மற்றொரு தரப்பு மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்துவது அவருடைய நிர்வாகத் திறனுக்கு நிச்சயமாக பெருமை சேர்க்காது.
No comments:
Post a Comment