வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/06/2014

37 இடங்களில் வெற்றி: இனி விலைவாசி உயர்வு பற்றி ஏன் கவலை என்பதுதான் தமிழக அரசின் பதிலா?கலைஞர் கண்டனம்


திமுக தலைவர் கலைஞர் 26.06.2014 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி நாளுக்கு நாள் கொடிய விஷம்போல் ஏறிக்கொண்டே போகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் அளித்துவிட்டார்கள் என்ற மமதையில் அ.தி.மு.க. ஆட்சியினர் மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கவே மறுக்கிறார்கள். அவர்களுக்குள்ள முதல் கவலை பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? மத்தியிலே யாரையாவது பிடிக்கலாமா? யாராவது உதவிட முன் வருவார்களா? அதற்காக என்ன செய்தாலும்பரவாயில்லை என்பது பற்றித்தான்!
தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது விலைவாசி பற்றி எத்தனை அறிக்கைகளை விட்டார்கள்? இப்போது கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை! ஏன், காய்கறி விலையிலே தொடங்கி, எதையெடுத்தாலும் விலை உயர்வு தான். அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இந்த ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுக்க முன் வருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். 14-10-2007 அன்று ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார்.
அந்த அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட், மணல், செங்கல், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்கள் என்ன விலை விற்றன? ஆனால் தி.மு.கழக ஆட்சியில் எந்த அளவுக்கு இவை விலை உயர்ந்துவிட்டன என்றெல்லாம் சுட்டிக் காட்டி, இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஒட்டு மொத்தமாக கட்டுமானத் தொழில் நலிவடைந்து விட்டதோடு, இதையே நம்பி வாழும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டு, அதற்காக 15-10-2007 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார்கள். 
அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்றோ அல்லது யார் நினைவூட்டப் போகிறார்கள் என்றோ அ.தி.மு.க. ஆட்சியினர் இன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஜெயலலிதா அவ்வாறு அறிக்கை விட்டபோது, சிமெண்ட் விலை 270 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விலையைக் குறைக்க கழக ஆட்சியில் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன தெரியுமா? சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்களை எல்லாம் அழைத்துப் பேசினோம். விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதனையேற்று சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 20 குறைக்க ஒப்புக் கொண்டார்கள். அப்போதே அது செய்தியாக வெளிவந்தது.

சிமெண்டைக் கொள்முதல் செய்து, ஒரு மூட்டை சிமெண்ட் சலுகை விலையில் ரூ. 200/- வீதம் விற்பனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. 2007-2008ஆம் ஆண்டில், 31-3-2008 வரை 48,496 மெட்ரிக் டன் சிமெண்டும் - 2008-2009ஆம் ஆண்டில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 955 மெட்ரிக் டன் சிமெண்டும் - 2009-2010ஆம் ஆண்டில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 330 மெட்ரிக் டன் சிமெண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அரசே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை குறைத்து விற்க நடவடிக்கை எடுத்ததால், வெளிச் சந்தையிலும் சிமெண்ட் விலை கணிசமாகக் குறைந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எந்த சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்களா? மது வகைகளின் விலையை உயர்த்திட மறைமுக பேரத்தில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறதே தவிர, சிமெண்ட் விலை உயர்வு பற்றி அவர்களுக்கு என்ன கவலை?
சிமெண்ட் விலை கடந்த பதினைந்து நாட்களில் மட்டும் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 19-6-2014 அன்று வெளியான ஆங்கில இதழில் வந்துள்ள செய்திப்படி மே 31ஆம் தேதி ஒரு மூட்டை சிமெண்ட் 285 ரூபாய் என்பது, 17-6-2014 அன்று 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. 
கடந்த வாரம் ஒரு மூட்டை சிமெண்ட் 310 ரூபாய் என்பது, இந்த வாரத்தில் 340 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். அ.தி.மு.க. ஆட்சியினர் இந்தச் செய்திகள் ஏடுகளிலே வெளிவந்ததைப் பார்க்க வில்லையா? கழக ஆட்சியில் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 200 என்று விற்கப்பட்ட போதே, அதற்காகப் போராட்டம் நடத்தக் கூறி அறிக்கை விட்ட இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 340 ரூபாய் என்றும், 350 ரூபாய் என்றும் விற்கப்படுகின்ற இந்த நேரத்தில் அதைக் குறைக்கவும், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றிடவும் எடுத்த நடவடிக்கை என்ன? இந்த ஆட்சியில் சிமெண்ட் விலை மட்டுமா ஏறியிருக்கிறது?
“கம்பி விலை டன்னுக்கு ரூ.3,300 உயர்வு” என்ற தலைப்பிலே பத்திரிக்கை ஒன்றில் 21-6-2014 அன்று வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த வார நிலவரப்படி கம்பி ஒரு டன் 48,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது 52,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே வாரத்தில், பெரிய நிறுவனங்களின் கம்பிகள் விலை டன்னுக்கு 3,300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானச் செலவு வெகுவாக அதிகரிக்கும் என்று இத்துறையினர் அச்சம் தெரிவித்தனர்” என்று எழுதியுள்ளதை,அ.தி.மு.க. ஆட்சியினர் காணவில்லையா? அல்லது கண்டும்  காணாமல் விட்டுவிட்டார்களா?
கட்டுமானப் பொருள்களின் இந்த விலை உயர்வு பற்றி, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், “கடந்த பத்து நாட்களில் சிமெண்ட், ஜல்லி, செங்கல் போன்ற அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலை 25 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை தற்போது மூட்டைக்கு 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சாதாரணமாக வீடு கட்டுபவர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது. அரசுத் துறை ஒப்பந்தங்களில் குறிப்பாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் இந்த விலை உயர்வுக்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதால், இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள் 19 முதல் 90 சதவிகிதம் வரை அதிகமாகச் செலவு செய்தால் தான் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பணிகளை கடந்த பத்து நாட்களாக தொடர முடியாத தேக்க நிலை உள்ளது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆங்கில இதழில் 19-6-2014 அன்று வந்துள்ள செய்திப்படி, The price of cement has increased on an average by Rs. 60 per bag and that of steel has nearly doubled. “What is shocking is that the price of cement has increased dramatically in less than 10 days all over south India” said Suresh Krishna, Vice-President of Confederation of Real Estate Developers Association of India, Chennai Region.
வீடுகளுக்கான கட்டுமானச் செலவு அதிரடி உயர்வு - பொருள் விலை அதிகரிப்பால் சிக்கல்” என்ற தலைப்பில் 18-6-2014 அன்று வெளி வந்துள்ள பத்திரிகைச் செய்தியில், “சிமெண்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக, வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரே வாரத்தில், சதுர அடிக்கு 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது” என்று இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லிகள் விலை 30 சதவீதமும், மணல் விலை 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு 300 முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் வாங்கும் வீடுகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவிட வேண்டும். சிமெண்ட் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், இங்குள்ள உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உண்ணாவிரதம் முதலான போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளிவந்து எத்தனை நாட்களாகிறது? அரசாங்கம் ஏதாவது இதுபற்றிச் சிந்தித்ததா? அக்கறை செலுத்தியதா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சிமெண்ட் நிறுவன அதிபர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே அழைத்து நான் பேசி, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததுபோல் தற்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க மனம் இல்லையா? மார்க்கம் தெரியவில்லையா?
22-6-2014 அன்று “சிமெண்ட், மணல், ஜல்லி விலை உயர்வால் பணிகள் முடக்கம்: அரசு தலையிட வலியுறுத்தல்” என்ற தலைப்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்தியில், சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது, “சிமெண்ட், மணல், ஜல்லி விலை உயர்வால், அனைத்து வகை கட்டுமானப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கட்டுமானப் பணிக்கான சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பொதுப்பணித் துறை குவாரியில், ஒரு யூனிட் 300 ரூபாடீநுக்கு கொடுக்கப்படும் மணல், அதற்கு அடுத்த நிலையில், 2,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை, கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு வரும்போது, மேலும் அதிகரிக்கிறது. அப்படியே, அதிக விலை கொடுத்தாலும், உரிய நேரத்துக்கு தரமான மணல் கிடைப்பதில்லை. வெளிமாவட்டங் களில் இருந்து எடுத்து வரப்படும் மணல், விற்பனைக்கு வரும்போது, கலப்படம் நிறைந்ததாக இருக்கிறது.
சென்னைக்கும், அதன் சுற்றுப்புறப்பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லோடு ஜல்லி தேவைப்படும். தற்போது, நான்கு இடங்களில் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்துள்ளதால், ஜல்லி விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகள் முற்றிலு மாக முடங்கிவிடும்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறார்களே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா? இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம், இனி விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் பதிலா? “அம்மா” உணவகங்களையும், மருந்தகங்களையும் திறந்துவைத்து, “உப்பு” வியாபாரத்தையும் நடத்திவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறார்களா?

No comments:

Post a Comment


Labels