வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



01/03/2016

நமக்கு நாமே பயணத்தில் திமுகவினர் ஓரம் கட்டப்பட்டனரா? பிறந்த நாளில் மு.க. ஸ்டாலின் வருத்தம்

சென்னை: நமக்கு நாமே பயணத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளித்த வரவேற்புகளை ஏற்க முடியாமல் போனதாக தன்னுடைய பிறந்த நாளில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் (மார்ச் 1) .. வழக்கமாக திமுகவினர் "இளைஞர் எழுச்சி" நாளாக கொண்டாடி அமர்க்களப்படுத்துவர். ஆனால் இந்த ஆண்டு தம்முடைய பிறந்த நாளை கொண்டாடாமல் அதிமுக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார் ஸ்டாலின்.மேலும் தம்முடைய பிறந்தநாளையொட்டி மனைவி துர்காவுடன் கோபாலபுரம் சென்ற ஸ்டாலின் அங்கு தந்தை கருணாநிதி, தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். View Photosஇந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கூறி உள்ளதாவது:அன்பான கழக உடன்பிறப்புகளுக்கு வணக்கம்!கழக தொண்டர்களும், உடன்பிறப்புகளும், நிர்வாகிகளும் என் மீது கடும் கோபத்தில் இருப்பார்கள் என்பது புரிகிறது. "பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்", இதற்கு முன் "நமக்கு நாமே" பயணத்திற்கு வராதே" என்று கட்டளையிடுகிறார் என்றெல்லாம் என் மீது கழக உடன்பிறப்புகள் வருத்தத்தில் இருப்பீர்கள். ஆனால் இரண்டுமே தமிழக மக்களுக்காக- தமிழகத்தின் நலனுக்காக என்பதை கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.மார்ச் 1-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், மக்கள் விரோத அதிமுக அரசின் அவலத்தை மக்கள் மன்றத்திற்கு வீடு வீடாக கொண்டு போக வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளுக்கு அன்புக் கட்டளையிட்டேன். அதே அப்படியே செவ்வனே நிறைவேற்றியிருப்பதைப் பார்த்து, அதிமுக அரசின் அவலத்தை வீடு வீடாக கொண்டு சேர்த்ததைப் பார்த்து உண்மையிலேயே நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதில் கழக தொண்டர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், ஆவேசத்தையும் இந்த பிரச்சாரத்தில் என்னால் உணர முடிந்தது. அதே போல் தலைவர் கலைஞரின் வாழ்த்து பெற்று கன்னியாகுமரியில் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று அய்யன் வள்ளுவர் சிலையில் "நமக்கு நாமே" பயணத்தை துவங்கியதை கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவீர்கள். அப்பயணம் சென்னை தியாகராய நகரில் பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று வெற்றி கரமாக நிறைவு செய்து தலைவர் கலைஞரின் வாழ்த்துக்களைப் பெற்றேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஏறக்குறைய 11 ஆயிரத்து 100 கிலோமீட்டர்கள் சென்று பல தரப்பட்ட மக்களையும் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சந்தித்த இந்த நான்கு கட்ட "நமக்கு நாமே" பயணம் தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது என்ற மனநிறைவைப் பெற்றுள்ளேன். அதற்கு அத்தாட்சியாகத்தான் "நமக்கு நாமே" பயணத்தின் வெற்றி குறித்து, தனது உடன்பிறப்புகளுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கடிதம்!. அந்தக் கடிதம் என் வாழ்நாளில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. View Photosவார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சில சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயமாக நிகழும். கழக பொருளாளர் என்ற முறையில் என் வாழ்வில் அப்படி ஏற்பட்ட நிகழ்வுதான் "நமக்கு நாமே" பயணம். மூன்று கோடி மக்களைச் சந்தித்த அந்தப் பயணம் வெற்றி பெற மிகப்பெரிய ஒத்துழைப்பை உடலாலும், உள்ளத்தாலும், சிந்தனையாலும், செயல்களாலும், நல்கிய கழக உடன்பிறப்புகள், நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐந்தாண்டு காலமாக நடைபெற்று வரும் மக்கள் விரோத அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல- இரண்டல்ல. ஓராயிரம் இன்னல்களை சந்தித்தார்கள். ஆட்சியின் துயரங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளவும், எம் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட "நமக்கு நாமே" பயணத்தின் போது கழகத்தின் அரும்பெரும் சாதனைகளையும் மக்களுக்கு நினைவு படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கழக அரசு அமையும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான அடிப்படை அம்சங்கள் இந்த மக்கள் சந்திப்பு மூலம் கிடைத்தது என்பதில் அகமகிழ்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், பல்துறை வல்லுனர்கள், மகளிர், மாணவ-மாணவியர், இளைஞர்கள், தொழில் முனைவோர், வியாபாரப் பெருங்குடி மக்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஐ.டி. துறையினர், இசைக் கலைஞர்கள், சிற்பிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர், அர்ச்சகர்கள் உள்பட அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, சமூகத்தின் இன்றைய யதார்த்த நிலையையும், சாமானிய மக்களின் எண்ணவோட்டத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக "நமக்கு நாமே" பயணம் அமைந்தது. இப்பயணத்தை வடிவமைத்த போது, 234 சட்டமன்ற தொகுதியிலும் "இந்தப் பயணத்தை நடத்தி முடித்து விட முடியுமா" என்று எனக்கு ஒரு சந்தேகம் உருவானது என்னவோ உண்மை. ஏன் பலரும் கூட இக்கேள்வியை எழுப்பினார்கள். ஆனால் பயணத்தின் துவக்கத்திலேயே கழக உடன்பிறப்புகளும், நிர்வாகிகளும் அளித்த அலைகடல் போன்ற உற்சாகத்தில் "இந்தப் பயணம் நிச்சயம் வெற்றி பெற்றே தீரும்" என்ற எண்ணத்தை கன்னியாகுமரியிலேயே நான் பெற்றேன் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவு படுத்த விரும்புகிறேன்."முடியட்டும்-விடியட்டும்" என்ற இலட்சிய உணர்வை மனத்தில் நிலை நிறுத்தி, ஒரு குறிப்பிட்டக் கால அளவிற்குள், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் பயணித்து, வெற்றிகரமாக மக்களை சந்தித்து முடித்திருக்கிறேன் என்றால் கழக உடன்பிறப்புக்கள் அளித்த அச்சுப்பிசகாத முழுமையான ஒத்துழைப்புதான் அதற்கு மிக முக்கியம் என்பதை பதிவு செய்வதில் பெருமையடைகிறேன். அதனால்தான் இதற்கு முன்பாக மக்களை சந்திக்கும் இப்படியொரு பயணத்தை வேறு யாரும் நடத்தி வெற்றி பெற முடியாத நிலையில், கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட "நமக்கு நாமே" பயணம் தமிழக அரசியல் சரித்திரத்தில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பெற்று புதிய வரலாற்றுச் சாதனையை உருவாக்கியிருக்கிறது. View Photosதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியதன் மூலம், நான் பெற்று வந்துள்ள அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளை, தலைவர் கலைஞர் அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதையெல்லாம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார் தலைவர் கலைஞர். மேலும், எனது பயண விவரங்களை எல்லாம் திரட்டி, தொகுத்து "நமக்கு நாமே - அனுபவப் பதிவு" என்ற பெயரில் தலைவரிடம் அளித்தபோது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்படவுள்ள தேர்தல் அறிக்கைக்கு "நமக்கு நாமே" பயணத்தில் கிடைத்த மக்களின் கருத்துக்கள் துணை நிற்கும் என்று கூறியிருக்கிறார். இதை விட கழகத்தின் தொண்டன் என்ற முறையில் உங்களுக்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?கழகத் தோழர்களே !இந்த பயணத் திட்டம் மகத்தான வெற்றி பெற்று, பொது மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கான அனைத்து பெருமைகளும் முழுக்க முழுக்க உங்களை மட்டுமே சாரும். பல கோடி தமிழக மக்களை நான் சந்தித்து உரையாடும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த சீறும், சிறப்பும் உங்களையே சேரும். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் என்னுடன் நீங்கள் இணைந்து பணியாற்றியதை எல்லாம் இப்போது எண்ணி பார்க்கையில், எனது மனம் மிகுந்த பெருமிதம் அடைவதுடன், உங்களை எல்லாம் ஒவ்வொருவராக நேரில் சந்தித்து ஆரத்தழுவி எனது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. ஆங்காங்கேயுள்ள உங்கள் பகுதிகளுக்கு நான் வருகைத் தந்தபோது, கொடிகள் கட்டக் கூடாது, பதாகைகள் அமைக்கக் கூடாது, வீண் விளம்பரங்கள் செய்யக் கூடாது என்று நான் உங்களிடம் கேட்டுக் கொண்டபோது அது உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் கழகத்திற்குரிய "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்ற கோட்பாட்டினை கடுகளவும் மீறாமல் என் பின்னால் எஃகு கோட்டை போல் நின்ற கழகத் தோழர்களை நினைத்து நினைத்து தினமும் நான் பூரித்துப் போகிறேன். கட்சி சாயல் இல்லாமல் நடைபெற்ற "நமக்கு நாமே" பயணத்தின்போது, வழக்கமான உங்களது உற்சாக வரவேற்புகளைக் கூட பல இடங்களில் என்னால் ஏற்க முடியாமல் போனது. அதற்காக நான் மிகவும் வருத்தமுற்றேன். குறிப்பாக, பல பகுதிகளின் எல்லைகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் என்னை வரவேற்க காத்திருந்த உங்களை எல்லாம் சந்திக்க முடியாத என்னுடைய நிலைமை என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.ஆனால், நடுநிலையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுவான மக்கள் பங்கேற்று மனம் திறந்து பேசும் நிகழ்ச்சிகளில் நாம் இருக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டு, எனது பயணத்தின் நோக்கம் சிதறி விடாமல், தொய்வடையாமல் நடைபெற நூற்றுக்கு நூறு உதவியவர்கள் கழகத் தோழர்கள். இன்றைக்கு ஆளுங்கட்சியினரும், எதிர்தரப்பினரும் வியந்து பாராட்டி, தங்கள் அமைப்பில் இதுபோன்றதொரு "கட்டுப்பாடு மிக்க" நிகழ்வு நடைபெறவில்லையே என்று பொறாமை கொள்ளும் வகையில் கழகத் தொண்டர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை நல்கினீர்கள். கழக நிர்வாகிகளும் அதே மாதிரி ஒத்துழைப்பை நல்கி என் "நமக்கு நாமே" பயணத்தின் வெற்றிக்கு துணை நின்றீர்கள் என்பதை இந்த நேரத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக முதலில் என்னுடைய நன்றிகளை கழக தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் திரும்பவும் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு முறை அல்ல. மீண்டும் மீண்டும்- எத்தனை மீண்டும் வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். அத்தனை முறை உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.அதைப் போலவே, ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது கழக உடன்பிறப்புக்களும், மற்ற தோழர்களும் கூட பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக மிகவும் அன்பு கொண்டு, பாசத்துடன் "தளபதி" என்று அழைக்கும் "உங்களில் ஒருவனான" என்னுடன் அத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் கூட மேலிட்டிருக்கும். அதுமட்டுமல்ல, நான் பயணம் மேற்கொண்ட பல சாலைகளில் கழக உறுப்பினர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், கழகத்திற்காக பல்வேறு தியாகங்களைச் செய்த தோழர்கள் உள்பட பலரின் இல்லங்கள் நிறைந்து இருந்திருக்கும். அங்கேயெல்லாம் நின்று, அனைவருடனும் ஆற, அமர பேச வேண்டும், அவர்களுடன் அலவளாவி, அவர்தம் இல்லத்தவர்களுடன் மகிழ்வுடன் பேசி விட்டுச் செல்ல முடியாத எனது நிலைமையை எண்ணி எண்ணி இப்போதும் வருந்துகிறேன். இவையெல்லாம் கழகத் தொண்டர்களை புறக்கணிக்கும் எண்ணத்தில் நிகழ்ந்தவை அல்ல.பரந்து விரிந்த தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு, என்னால் இயன்ற வரையிலும் விரைந்துப் பயணித்து, அங்கெல்லாம் உள்ள பலதரப்பு மக்களை சந்தித்திடும் பயணத் திட்டத்தின் லட்சியத்தை பூர்த்தி செய்திட வேண்டும் என்ற எனது உத்வேகமே காரணம் என்பதை கழகத் தொண்டர்கள் புந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி.எனவே, இந்த தருணத்தில் எனது பயணத்துக்கு உள்ள ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சிந்தனையாலும், செயலாலும், இன்னும் பல விதங்களில் ஆக்கமும், ஊக்கமும், உற்சாகமும் அளித்து, எனது பயணத்தை மிகப்பெரிய வெற்றி பயணமாக மாற்றிக் காட்டிய, ஒட்டுமொத்தக் கழக தோழர்களுக்கும், தாய் கழகத்தை சார்ந்த பல்வேறு பொறுப்பாளர்களுக்கும், மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, தொ.மு.ச., மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவு அணி, அமைப்புசாரா தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன். "நமக்கு நாமே" பயணம் குறித்த செய்திகளையும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் முன்வைத்த பத்திரிகை-தொலைக்காட்சி நண்பர்களுக்கு என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இப்பயணத்தின் போது ஆக்கமும் ஊக்கமும் அளித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அரசியல் சாராத நடுநிலையாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் அனைவரின் உழைப்பாலும், பொது மக்களின் ஆதரவாலும் மீண்டும் கழக ஆட்சி அமையும்போது, இப் பயணத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உறுதியாக நிறைவேறும் என்பதை உங்கள் சார்பாக பொதுமக்களுக்கு மீண்டும் நான் உறுதியளிக்கிறேன்."முடியட்டும் - விடியட்டும்" என்ற லட்சிய உணர்வோடு நடைபெற்ற "நமக்கு நாமே" பயணத்தின் வெற்றி எனது வெற்றியல்ல. உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் உங்களைச் சார்ந்தவை. என்னைச் சாரும் வெற்றி மாலைகள் அனைத்தும் உங்களுக்கானவை. கழகத்தின் மீதும், என் மீதும் விழக்கூடிய மலர்கள் உங்கள் பொற் பாதங்கள் மீது அர்ச்சனை செய்யப்படும் மலர்கள் !என்னுடைய இந்த பயணத்தின் நோக்கமான, அதிமுகவின் அராஜக ஆட்சி விரைவில் முடிந்து, மக்கள் நலன் சார்ந்த நமது திமுகழக ஆட்சி உடனே விடியும்.மீண்டும் எனது மனமார்ந்த நன்றியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதோடு, அடுத்து அமையவுள்ள நமது கழக ஆட்சிக்கு உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.அதோடு, சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தொடரவுள்ள எனது பயணத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ! வணக்கம் !!இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.      


No comments:

Post a Comment


Labels