வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

04/10/2015

நாட்டு மக்களின் நாடி துடிப்பை அறிந்து வந்துள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் பாராட்டு

திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் ம.தி.மு.க.வின் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய கலைஞர்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் - நாட்டு மக்களுடைய நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்திலே பல நூறு கூட்டங்களிலே  தமிழ்ப் பெருங்குடி மக்களைச் சந்தித்து, இன்று தலைநகரத்திற்கு வந்து, என்னையும் உங்களையும், தமிழ் மக்களையும் மகிழ்வித்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

பொருளாளர் அவர்களோடு ஒத்துழைத்து, அவருடைய பணி சிறக்க நடைபெற்ற சுற்றுப் பயணத்திற்கு ஒத்துழைத்து -- ஒத்துழைத்துக் கொண்டிருக்கின்ற - மீண்டும் தொடர்ந்து ஒத்துழைக்க இருக்கின்ற  பல்வேறு கழக அமைப்புக்களில் உள்ள செயலாளர்களின் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற அருமைத் தம்பிமார்கள், இந்த மாமன்றத்தில் வீற்றிருக்கின்ற கழக முன்னோடிகள்  அனைவருக்கும்  முதற்கண்  என்னுடைய வாழ்த்துக்களை கூறுகின்ற நேரத்தில்  மிக முக்கியமாக   கடந்த சில நாட்களாக  தமிழகத்திலே  காலையிலும், மாலையிலும், இரவென்றும் நள்ளிரவென்றும், மழை என்றும் வெயில் என்றும் பாராமல்  கடமையை  செவ்வனே  ஆற்றி விட்டு, எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகம், வலிமை நிறைந்த ஒரு இயக்கமாக  இருக்கிறது என்றால், அதற்கு  வித்திட்டவர்களில் ஒருவர் என்ற முறையில்  அண்மைக் காலம் வரையிலே உங்களோடு இருந்து கழகக் கொள்கைகளை எல்லாம் விளக்கி, மேலும் விளக்குவதற்கு தொண்டு புரிவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ள கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்திலே  - ஒரு தந்தையின் கடமை என்று மாத்திரமல்ல -  கட்சித் தலைவருடைய பொறுப்பு என்ற முறையில்  -  அவரை இனிய உள்ளத்தோடு  வரவேற்கின்ற  பணியை -  வாழ்த்துகின்ற ஆர்வம் மிகுந்த கடமையை  -  இப்போது நான் ஆற்றுகின்றேன்.   ஏனென்றால்  என்னுடைய  இல்லத்தில், எனக்கு வாய்த்த மக்களில், ஸ்டாலின் பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது  என்று என்னுடைய வீட்டார் கலந்து யோசித்த போது  -  நண்பர்கள் என்னைக் கேட்ட போது  -  நான் "ஸ்டாலின்"  என்ற பெயரை அவருக்குச் சூட்டினேன்.   பல பேருக்கு அது புதிராக இருந்தது.   என்ன நம்முடைய தலைவர் ஸ்டாலின் என்று பெயர் வைக்கிறார் என்று வினாக்குறியை தங்களுடைய  முகத்திலே தேக்கி என்னைப் பார்த்தார்கள்.  நான் அப்போது சொன்னேன்.  ரஷ்யாவிலே தலைவராக இருந்த  ஸ்டாலினுக்கு, ஏன் அந்தப் பெயர் வந்தது என்றால்,  ஸ்டாலின் என்றால்  "இரும்பு மனிதன்"  (கைதட்டல்), அத்தகைய இரும்பு மனிதனுடைய பெயரை, இந்த இயக்கத்திலே  நம்முடைய தம்பி ஸ்டாலினுக்கு அன்றைக்கு நான் பெயராகச் சூட்டுகின்ற அளவுக்கு, எனக்கு அத்தகைய உணர்வை அப்போது ஏற்படுத்தியது.  

ஸ்டாலின் என்று நான் பெயர் சூட்டிய போது, என்னைக் கேட்டார்கள்.  என்ன,  உங்கள் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்,  ஸ்டாலின் என்றால் ரஷ்யாவின் தலைவராக இருந்தவர் அல்லவா?  அவருக்கும், இவருக்கும் என்ன ஒற்றுமை என்றெல்லாம் கூட -  கேட்காவிட்டாலுங்கூட  - பல நண்பர்கள்  அதை மனதிலே நினைத்துக் கொண்டு என்னை ஆவலோடு பார்த் தார்கள்.  அவர்களுடைய பார்வைக்கான பொருளை நான் புரிந்து கொண்ட காரணத்தால்  -  ஸ்டாலின் என்றால்  இரும்பு மனிதன்  -  இவர்  இரும்பு மனிதனா இல்லையா என்பதற்கு  - இன்றல்ல,நேற்றல்ல, இன்னும் பல ஆண்டு களுக்குப் பிறகு, அதற்கான விளக்கத்தை, அவருடைய நடவடிக்கைகளின் மூலமாக நாட்டுக்குத் தருவார், என்னை நம்புங்கள் என்று நான் சொன்னேன்.  நான் சொன்னபடி, ஸ்டாலின்,  ஸ்டாலினாகவே உரு எடுத்திருக்கிறார்.   ஸ்டாலினாகவே நிர்வாகத்தை நடத்துவார், ஸ்டாலி னாகவே  நாட்டு மக்களுக்கு நல்லுதவிகளைச் செய்வார்.  இது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே, மேடையிலே ஸ்டாலினை உட்கார வைத்துக் கொண்டு  இப்படி பேசுகிறேன் என்று யாரும் கருதக் கூடாது. மனதிலே  உள்ள எண்ணங்களை, நினைவுகளை  நான் வெளிப்படுத்துவதற்கு  வாய்ப்பு கிடைத்தது, எனவே அதை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன். அத்தகைய  அருமையான  தம்பிமார்கள் பலரை நான் பெற்றிருந்தாலுங்கூட,  ஒரு மகனையும் அப்படிப் பெற்றிருக்கிறேன் என்பதிலே எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.   இன்று நாம் எல்லாம் அவரை வரவேற்றிருக்கிறோம்.  

காலையிலே நான் அவர் சென்னை வந்து விட்டாரா என்று விசாரித்த போது,  அவர் திருச்சியிலிருந்து காரிலே வந்து கொண்டிருக்கிறார், நேராக உங்களை வந்து சந்திப்பார் என்று கூறி, அவ்வாறே  இன்று காலையில் அவர் என்னை வந்து சந்தித்தார்.   என்னைச் சந்தித்த ஸ்டாலின் அவர்கள்  - நான் அவர்கள் என்று சொல்வது  கொஞ்சம் அதிகப்படி  -  என்ன இருந்தாலும் மகன் தானே?  மகனைப் போய் அவர்கள், இவர்கள் என்றெல்லாம் அழைத்தால்,  இருவருக்கும் இடையே  இடைவெளி அதிகமாக இருப்பதாகத் தெரியும், யாரும் அந்த இடைவெளி இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்,  நினைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.   அவர் எத்தனை கஷ்ட நஷ்டங்களை, இந்த இயக்கத்தினுடைய தியாகச் சரித்திரத்தில்  பொறித்திருக்கிறார் என்பதும்,  அப்படிப்பட்ட ஒருவர் இன்றைக்கு  இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்றிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமை தரக் கூடியவை.  அத்தகைய பெருமைகளோடு தான் நான் அவரை இங்கே பார்க்கின்றேன்.  அவர் உங்களை யெல்லாம் வாழ்த்தவேண்டும்,  வரவேற்க வேண்டும் என்று நானும் கருதிய காரணத்தால் தான், அவரை இங்கே பேசுமாறு கூறியதற்குக் காரணமே அது தான்.   இன்றைக்கு ஸ்டாலினுடைய உருவம், அவருடைய தியாகம், அவர் பட்ட வேதனை, குறிப்பாக அடக்கு முறைக்கு இந்த நாடு  உட்படுத்தப்பட்ட போது,  அராஜகத்தின் காரணமாக அவருக்கு பல இன்னல்களை அப்போதிருந்த அரசுகள் ஏற்படுத்திய போதெல்லாம், அதைத் தாங்கக் கூடிய  திறமை அவருக்கு உண்டா? திறமை என்பதை விட  அது போன்ற சோதனைகளைத் தாங்குவதற்கு திறமை வேண்டும் என்பதல்ல,  சோதனைகளைத் தாங்கக் கூடிய அளவுக்கு  ஆற்றல் உண்டா என்பது தான் முக்கியம்.   அந்த ஆற்றலைப் பெற்ற ஸ்டாலின் இன்றைக்கு இந்த இனிய வரவேற்பு விழாவில், உங்களை யெல்லாம் வரவேற்று மகிழ்கின்ற இந்த நாளில், உங்களை யெல்லாம் வரவேற்று வாழ்த்தியிருப்பது,  நீங்கள் பெற்றிருக்கின்ற அந்த வாழ்த்து  ஒரு "இரும்பு மனிதனுடைய வாழ்த்து"  என்று தான் கூற வேண்டும்.

 எனவே இந்த வாழ்த்தைப் பெற்றிருக்கின்ற நீங்கள் இன்றைக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்  நாம் பெரிதும் விரும்புகின்ற,  பெரிதும் நண்பர்களோடு நெருங்கியிருக்கின்ற ஒரு பகுதியிலிருந்து ஏறத்தாழ  ஐநுhறுக்கு மேல் கழகத்திலே இணைந்திருக்கிறார்கள்.  உங்களை யெல்லாம் எனக்குத் தெரியும்.   ஏற்கனவே பழகியவர்கள் என்றாலும் கூட, இந்தப் பழகியவர்களை யெல்லாம் நம்மிடமிருந்து சிலர் பிரித்தார்கள்.  பிரிக்காமலே கூட  இவர்கள் நம்மிடமிருந்து விலகியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.  குறிப்பாக  கே.சி. பழனிச்சாமி அவர்கள்  - அவர் இப்போது நம்மோடு  தான் இருக்கிறார்  - எனவே அவரைத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.  கரூர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த  பரணி கே. மணி,  குளித்தலை நகரச் செயலாளர் மற்றும் குளித்தலை நகர் மன்றத் தலைவர் வே. பல்லவி ராஜா,  புதுக்கோட்டையைச் சேர்ந்த  வி.என். மணி ஆகியோருடைய தலைமையில்  -  அவர்கள் எடுத்த முடிவு சரியானது தான், தமிழகத்தில் இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால்  - நம்மை, நம்முடைய தமிழர்களை, திராவிடப் பெருங்குடி மக்களை ஒற்றுமைப்படுத்திக் காப்பாற்றக் கூடிய இயக்கத்தைக் காண முடியாது.  அந்த இயக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சில கீறல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அவை அத்தனையையும்  இன்றைக்குச் சமப்படுத்தி,  அத்தகைய கீறல்களையும் சமாளித்து, இந்த ஒரு இயக்கத்தைக் கட்டிக் காத்தால் தான்,  தமிழகத்திலே உள்ள தமிழ் மக்களை, திராவிட மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை யோடு  இத்தனைத் தோழர்களும் இந்தக் கூட்டத்திலே  என்னுடைய கைகளிலே தந்துள்ள இந்தத் தாளின் மூலமாக, நாங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திலே எங்களை ஒப்படைத்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர் கள்.     ஒப்படைத்திருப்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு செய்யப்பட்ட காரியமாக இல்லாமல், ஆழ்ந்து  சிந்தித்து திராவிடத்தைக் காப்பாற்ற, தென்னகத்தைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற அண்ணா வழியில், பெரியார் வழியில் நாம் நடந்து வெற்றிகளைக் குவிக்க வேறு வழியில்லை, நமக்காக அல்ல, ஸ்டாலின் நடத்திய சுற்றுப்பயணத்திற்கு தலைப்பு """"நமக்கு நாமே"" என்றிருந்தாலும்  -  இது நமக்காக அல்ல,  நமக்கு என்பது  நமக்காக என்று விரிந்தாலும்  - அந்த நமக்காக  செய்யப்படுகின்ற காரியங்கள்  - திராவிட மக்களுக்காக நாம் ஆற்றுகின்ற பணிகள்  -  திராவிடச் சமுதாயத்திற்காக நாம் ஆற்றுகின்ற பணிகள்  - அவைகளை யெல்லாம் ஆற்றுவதற்கு இனியும் சலனமற்று, அங்குமிங்குமாக அலைக்கழித்து அவர் அழைத்தார், இவர் அழைத்தார் என்றெல்லாம்  சில காரியங்களைச் செய்து, இறுதியாக  நாட்டின் சமுதாயக் கடமைகளில் ஏற்றத்தை ஏற்படுத்துகின்ற காரியங்களில் ஈடுபட எல்லோரும் இனி ஒருமித்த கருத்தோடு பெரியாரும், அண்ணாவும் எதற்காகப் பாடுபட்டார்கள், இந்தச் சமுதாயத்தைத் துhக்கி நிறுத்தவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்கள்.  நாங்கள் எதற்காக இவ்வளவு நாள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.   இவைகளை யெல்லாம் எண்ணிப் பார்த்து, நாங்கள் சிந்திய ரத்தம், நாங்கள் கொடுத்த விலை என்னென்ன என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அந்த நிலையை  - அ.தி.மு.க.  வினர்  ஏற்படுத்தியுள்ள  வடுக்களை, மாசு மருக்களை,  இனியும் நாம் அனுமதிக்க முடியாது. அவைகளை யெல்லாம் சமப்படுத்தி, சமத்துவம் மலரவும், சமுதாயம் சீர்படவும் இங்கே வீற்றிருக்கின்ற நீங்கள் எல்லாம் ஒருமித்த கருத்தோடு  இங்கே வந்திருக்கிறீர்களோ,  அதைப் போல  ஒருமித்த கருத்தோடு இந்த மேடையில் இருக்கின்ற எங்களில் ஒரு சிலரை மாத்திரமல்ல, எல்லோரையும் உங்களையும் ஒருமித்த கருத்தோடு இணைந்து  இந்த இயக்கத்தை மேலும் வளர்க்க, வலுப்படுத்து  வந்து சேர்ந்திருக்கின்ற  ஐநூறு பேரோ, அறநூறு பேரோ போதாது, இன்னும் அதிகம் பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்த வர வேண்டும்.  அப்படி வருகின்றவர்களை யெல்லாம் வருக, வருக என்று நான் வரவேற்கின்றேன்.

ஏனென்றால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூரிலே திராவிட இயக்கக் கொடியை கையிலே எடுத்தவன் இன்னும் அதை கீழே வைக்க வில்லை.  அந்தக் கொடி நிழலிலே தான் திராவிட இயக்கத்தினுடைய கொடி நிழலிலே தான் சமுதாயத்தை இன்னும் சீர்திருத்த முடியும், சமூக நீதியை உருவாக்க முடியும், ஏழைபாழைகளை வாழ வைக்க முடியும், பணியாற்றுகின்ற, பாடுபடுகின்ற பாமர மக்களுக்கெல்லாம் வழி காட்ட முடியும்.  அப்படி வழிகாட்டுகின்ற இயக்கமாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை மேலும் வலுப்படுத்த நீங்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் பார்த்து வணங்கி, வாழ்த்தி கலைந்து சென்றால் அது மாத்திரமல்ல நம்முடைய பணி  - இந்தப் பணி தொடர வேண்டுமேயானால், அனைவரும் விழிப்புணர்வோடு பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபட்டால் தான் ஏதோ தேர்தல் என்றல்ல, நம்முடைய குறிக்கோள்.  தி.மு.க. என்பது வெறும் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இயக்க மல்ல.   தி.மு. க. என்பது திராவிடத்தை முன்னேற்றுவதற்காக அமைக்கப்பட்ட இயக்கம்.   அந்த எண்ணத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பை நாமெல்லாம் ஏற்க வேண்டும்.  எதிர் காலத்தில் திராவிடத்தையே  மீட்கக் கூடிய ஒரு  பெரும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும். அந்தப் போராட்டம் 144 என்ற சட்டத்தை மீறுவது அல்ல. அந்தப் போராட்டம் சிறைச்சாலை செல்வதல்ல;  சிறைச்சாலைக்கு செல்வது என்றாலும், அதையும் ஏற்றுக் கொண்டு, திராவிடன் திராவிடனாக வாழ வேண்டும் என்ற அந்த இலட்சியத்தை -- அந்தக் கொள்கையை உருப்படியாக நிறைவேற்றி  -  திராவிட சமுதாயம், எந்தச் சமுதாயத்திற்கும் அடி பணியக் கூடிய  சமுதாயம் அல்ல, திராவிட சமுதாயம் எல்லோரையும் சமத்துவமாக கருதுகின்ற சமுதாயத்தை உருவாக்குகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கழகத்தை உருவாக்கிய அண்ணா அவர்களும், அதைக் காப்பாற்ற பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான கழக முன்னணியினரும் என்னுடைய வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியவர்கள்.   அந்த நன்றிக்குரிய நண்பர்களை இயக்கத்திற்காக உயிர் நீத்தவர்களை, இயக்கத்திற்காகப் பணியாற்றியவர்களை, பாடுபட்டவர்களை யெல்லாம் மறவாமல், அவர்களையும் காப்பாற்றி, நம்மையும் காப்பாற்றிக் கொண்டு,  திராவிட உணர்வையும் காப்பாற்றுவதற்கு சூளுரை கொள்வோம்.   அந்தச் சூளுரையை இந்த நாளில் நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த விழா எனக்கு மிக மிக மகிழ்ச்சியைத் தருகின்ற விழா.  அதிலும் குறிப்பாக எனக்குத் தொடர்புடைய இடம் குளித்தலை தொகுதி குளித்தலை என்றதும் எவ்வளவு பாசம் காட்டுகிறீர்கள்? எவ்வளவு நேசம் காட்டுகிறீர்கள்?  அதையெல்லாம் இடைக்காலத்தில் மறந்து விட்டீர்கள். எப்படி மறந்தீர்கள்? யார் உங்களை மறக்கச் செய்தது?  அவர்கள் எல்லாம் இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள்? உங்களுக்கும்  எனக்கும் இடையே  பெரிய பள்ளம் வெட்டியவர்கள் - அந்தப் பள்ளத்திலேயே வீழ்ந்து விடுவார்கள். ஆனால் நாம்  அந்தப் பள்ளம் வெட்டப்பட்ட இடத்திலே உருவான  அந்த மேட்டிலே நின்று கொண்டு,  அந்த மேட்டிலே இருந்து பார்க்கிறோம்.  நாம் உயர மாக இருக்கிறோம். நாம் உயர்ந்ததற்குக் காரணம், அந்தப் பள்ளத்தை நிரப்புவதற்கு நமக்கு உடன் இருந்து பணியாற்றிய என்னுடைய பழைய காலத்து தொகுதி மக்கள் அல்லவா என்று புரிந்து கொண்டு அந்த மக்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களுடைய கடமைகளை யெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.  பணிகளை யெல்லாம், என்னென்ன பணிகள் என்று வகுத்துச் சொல்லி யிருக்கிறேன். அந்தப் பணிகளை மறவாமல், கடமைகளிலிருந்து பிறழாமல், தொடர்ந்து திராவிட இயக்கத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, திராவிட நாட்டுடைய கொள்கைகளுக்கு,  பாடுபடக் கூடிய ஒரே ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற உணர்வோடு பணியாற்றுங்கள், பாடுபடுங்கள், அதற்கு  ஒரு நல்ல முயற்சியாகத் தான் தம்பி ஸ்டாலின் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டல்ல,  முக்கால் பகுதி சுற்றுப் பயணத்தை ஆற்றி விட்டு இங்கே வந்திருக்கிறார்.  இந்த முக்கால் பகுதி சுற்றுப் பயணத்திலேயே  குளித்தலை பகுதியிலே உள்ள நீங்கள் , திராவிட சமுதாயத்தினுடைய பேராதரவைப் பெறுகின்ற அளவுக்கு இங்கே குழுமி யிருக் கிறீர்கள்.  இன்றைக்கு நீங்கள் தந்துள்ள இந்த ஆதரவு  தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும். இதையாரும் இடையிலே கத்தரிக்க முடியாது என்ற உறுதியைத் தெரிவித்து உங்களை யெல்லாம் இந்த அறிவாலயத்திலே சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நீங்களும் அறிவாலயத்தைக் காணுகின்ற வாய்ப்பு பெற்றதற்காக உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைக் கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment

Labels