வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

04/10/2015

ஜெ.ஓய்வு எடுக்கிறார்..
 நான் ஆய்வு செய்கிறேன் - ஸ்டாலின்  பேச்சு - படங்கள்

விவசாயிகளின் கோரிக்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுப்பயண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ என்ற சுற்றுப்பயணத்தை கடந்த 20–ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். தொடர்ந்து அவர் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் நேற்று நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். ஒரு தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். பின் நேற்று காலை 8.45 மணி அளவில் ஓட்டலில் இருந்து பயணத்தை தொடங்கினார். ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலை, அரிஸ்டோ வளைவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மணப்பாறைக்கு காரில் பயணம் செய்தார். செல்லும் வழியில் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களும் சாலையில் ஓரமாக நின்று மு.க.ஸ்டாலினை பார்த்து கையசைத்தனர்.

மணப்பாறையில் திருச்சி சாலை மேம்பாலத்தின் வழியாக வந்த ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். காந்தி சிலை அருகே வந்து வாகனம் நின்றதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்க முடியவில்லை. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் நிற்கட்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின் மக்கள் கூட்டத்தின் நடுவே நடந்து வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து வாகனத்தில் ஏறிய மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேவாலயம் அருகே வரை சென்றார். மண்டிக்கடை பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது சாலையின் இருபுறங்களில் மக்கள் கோரிக்கை மனுக்கள் வைத்திருந்ததை பார்த்த மு.க.ஸ்டாலின் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கினார். அங்கிருந்தவர்களிடம் மனுக்களை பெற்றதோடு நடைப்பயணத்தையும் மண்டிக்கடை பகுதியில் இருந்தே தொடங்கினார். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் என அனைவரும் போட்டி போட்டு கொண்டு அவருக்கு கைகொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கைக்கொடுத்தார்.

தொடர்ந்து மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு விவசாயிகள் வைத்திருந்த காய்கனிகளை எடுத்து பார்த்தார். மழையில்லா காரணத்தினால் விவசாயத்தின் நிலை, விளைச்சல் குறித்தும் கேட்டறிந்தார். பின் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்கெட் பகுதியின் பின்புறம் நடைபயணத்தை முடித்து கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர்குட்டப்பட்டிற்கு வந்தார். நவலூர்குட்டப்பட்டில் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

நான் மக்களோடு வந்து மக்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூருக்கு சென்று ஓய்வெடுக்கிறார். தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திவெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு 1,156 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 2,357 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் தான் டெங்கு காய்ச்சல் முதல் இடத்தில் உள்ளது. ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த இந்த மாவட்டத்திலே இந்த நிலை என்றால் மற்ற மாவட்டங்களில் நிலை எப்படி இருக்கும்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பிரச்சினைகளை பற்றி கேட்கும் போது மின்வெட்டு தான் அதிகம் உள்ளது என்றனர். இங்கு மின்வெட்டு உள்ளதா? (அப்போது அங்கு திரண்டு நின்றவர்கள் ஆமாம் மின்வெட்டு உள்ளது என்றனர்). ஆனால் அமைச்சர் மின்வெட்டு இல்லை என்கிறார். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஜெயலலிதா, செல்போன் வழங்கப்போவதாக கூறினார். இதற்கு சிம்கார்டு, சார்ஜர், பேசுவதற்கு மாதம் தோறும் கட்டண தொகை தருவது யார்? மகளிர் சுய உதவிக்குழுவினர் குறைகளை தெரிவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் செல்போன் எண் கொடுக்கப்படுமா? என கேட்டதற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் செல்போன் கொடுக்க தெரிந்த எங்களுக்கு சிம்கார்டு, சார்ஜர் கொடுக்க தெரியாதா? என கேட்டுள்ளார். நான் கேட்ட பிரதான கேள்வியை அவர் மறந்து விட்டாரா? மகளிர் சுய உதவிக்குழுவினரின் குறைகளை தெரிவிக்க, முதியோர் ஓய்வூதிய தொகை குறித்து தெரிவிக்க முதல்–அமைச்சரின் செல்போன் எண் கொடுக்கப்படுமா? அல்லது அமைச்சர்களின் எண் கொடுக்கப்படுமா? இவ்வாறு அவர் பேசினார்.


அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாய்லர் தொழிற்சாலை வளாக பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் முன்னேற்றசங்க அலுவலகத்தில் தொழிலாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அங்கு திரண்டிருந்த தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

கன்னியாகுமரி மாவட்டதில் தொடங்கி நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் வரை விடியல் பயணத்தை நடத்தி 65 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வந்துள்ளேன். இன்று (அதாவது நேற்று) திருச்சி மாவட்டதில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்வதின் மூலம் 74 சட்டமன்ற தொகுதிகளை என் முதற்கட்ட சுற்றுபயணத்தில் சுற்றி வந்துள்ளேன்.

இந்த பயணத்தில் மூலம் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்னவென்றால் 2016–ம் ஆண்டு பொதுமக்களாகிய நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும், நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் நடக்கும் என்பதற்கான விடை தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறது. மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் பாய்லர் தொழிற்சாலைக்கு ஆதரவாக இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றி தரப்படவில்லை. அதனால் இந்த தொழிற்சாலையை நம்பி இருக்கும் பல ஆயிரக்கணக்கானோர் ஏமாந்து பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

துவாக்குடி முதல் திருச்சி பால்பண்ணை வரை அணுகுசாலை அமைத்து தருவோம் என கூறியவர்கள் கடந்த 4½ ஆண்டுகளாக இதற்காக எதையுமே செய்யவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பாய்லர் ஆலை தொழிற்சாலை தொழிலாளர்கள் பிரச்சினை மட்டுமன்றி அனைத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் தகுந்த நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யப்படும் அணுகுசாலை அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பாய்லர் ஆலை தெ.மு.ச பொது செயலாளர் எத்திராஜ் வரவேற்று பேசினார். ரெயில்வே தொழிற்சங்கத்தின் சார்பாக வீரசேகரன், போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பாக உமாபதி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன், ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி, மாவட்ட பிரதிநிதி கூந்தை தங்கவேல், ஜெயலெட்சுமி குமார், வி.பி குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாய்லர் ஆலையில் முடித்த பின் கீழ வாளாடியில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மு.க.ஸ்டாலின் டீக்குடித்தார். பின் லால்குடியில் ஒரு திருமண மண்டபத்தில் விவசாயிகள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சந்தித்து பேசினார்.

விவசாயிகள் பேசுகையில், ‘‘கடந்த 4½ ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை பல கோடி ரூபாயை வழங்கவில்லை. ரூ.500 கோடி வரை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ளனர். காப்பீட்டு திட்டத்திலும் நஷ்டஈடு கிடைப்பதில்லை. லால்குடி பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மக்கா சோளத்திற்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். 2016–ம் ஆண்டு தேர்தல் விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கட்டும். விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்’’ என்றார்.  அதன்பின் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்த 4½ ஆண்டு காலத்தில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. காவிரியில் கடைமடை வரை தண்ணீர் செல்ல தூர்வார பணி நடக்கவில்லை. புள்ளம்பாடி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் செயல்படாத நிலையில் உள்ளது. இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வருகிற தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உறுதி. டாஸ்மாக் கடைகளை மூட அ.தி.மு.க.விற்கு ஒரு துளி கூட அக்கறை இல்லை. கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, மதுவிற்பனை நேரத்தை குறைக்கவோ அறிவிக்கவில்லை. தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க தி.மு.க.வால் மட்டுமே முடியும். இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அதன்பின் மண்ணச்சநல்லூர், துறையூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்.

இதற்கிடையில் திருவெறும்பூர் கணேசா பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை அருகே அ.தி.மு.க. இளைளுர் பாசறை சார்பில் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் தலையிட்டு சர்ச்சைக்குரிய விளம்பர பதாகையை மறைத்து தி.மு.க. விளம்பர பதாகை வைத்தபின் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திருச்சி–தஞ்சை தேசிய நெடுச்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்டாலின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக திருவெறும்பூரில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ‘‘மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆதரவு எழுச்சியை பார்க்கும் போது பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர் என தெளிவாக தெரிகிறது. நான் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு ஒன்னும் புதுசு இல்ல. ஆட்சியில் இருந்த போதும் வந்திருக்கேன். இல்லாத போதும் வந்திருக்கேன். தேர்தல் நேரத்திலும், தேர்தல் இல்லாத நேரத்திலும் நாங்கள் செய்வோம். மக்களிடம் நாடித்துடிப்பை அறிய நான் ஊர், ஊராக ஆய்வு செய்கிறேன். ஆனால் ஜெயலலிதா சிறுதாவூரில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் எடுப்பது ஓய்வு. நான் செய்வது ஆய்வு. என்னை பற்றி விமர்சனங்களை நான் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை’’ என்றார்.NANDRI  : NAKKHREEN

No comments:

Post a Comment

Labels