வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

31/10/2015

ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து: கலைஞர் அறிக்கை

 
ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 

இன்று, (30-10-2015) ஆங்கில நாளிதழ் ஒன்றின் அதன் முதல் பக்கத்திலும், 7ஆம் பக்கத்திலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று ஆதாரங்களோடு வெளி வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தச் செய்தி வார ஏடுகளில் வெளி வந்து பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது என்ற போதிலும், அந்ந நாளிதழ் ஆதாரங்களோடு தொகுத்து இந்தச் செய்தியை புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது.  

“தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான  எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்” மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய  பதினோறு  திரையரங்குகளையும் ஜாஸ்  சினிமா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள்” என்பது தான் முக்கிய செய்தியாகும்.

அந்தச் செய்தி பற்றி “இந்து” மேலும் அதாவது மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து அந்த இதழுக்குக் கிடைத்த தகவலின்படி, முன்னர்  “ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது “ஜாஸ் சினிமா நிறுவனம்” என்று  பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.  ஹாட்வீல்ஸ் இஞ்கினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். 14-7-2014 அன்று வி.கே. சசிகலா மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் சிறப்புக் கூட்டத்தில் தான் பெயர் மாற்றம் பற்றி முடிவெடுக்கப்பட்டு  நடைமுறைக்கு வந்தது.  பிறகு நடைபெற்ற கூட்டத்திற்கு, ஜெ. இளவரசி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்தார்.
மேலும் பதினோறு திரையரங்குகள் கொண்ட “லக்ஸ்  சினிமா”  என்பது உரிய சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதங்களுக்குப் பிறகு,  கடந்த மார்ச் மாதம் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது என்றும்,  கார்த்திகேயன் கலியபெருமாள்  மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி  ஆகியோர் “ஜாஸ்” சினிமா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றும்,  அவர்கள்  “மிடாஸ்”  நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் ஆவணங்களிலிருந்து தெரிய வருவதாக அந்த நாளேடு விரிவாக எழுதியுள்ளது.  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம்,  இந்த “லூக்ஸ்”  திரைப்பட அரங்குகளை  600 கோடி ரூபாயிலிருந்து  1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது 

இதிலிருந்து  சசிகலா, இளவரசி, கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தப்பார் சத்திய மூர்த்தி ஆகியோரெல்லாம் யார் என்பது ஒரு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.  இதில் சசிகலா என்பவர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்ற அங்கீகாரத்தோடு, அவரது வீட்டிலேயே பல ஆண்டுக் காலமாக வாழ்ந்து வருபவர் என்பதும், இப்போது கூட கோடநாட்டில் ஜெயலலிதாவுடன் அவர் தான் உடன் இருந்து வருகிறார் என்பதும் அனைவருக்கும்  தெரியும்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு, பிரபாவதி, அனுராதா என்று இரண்டு மகள்கள். பிரபாவதியின் கணவர் தான் டாக்டர் கே.எஸ். சிவக்குமார்.  இந்தச் சிவக்குமார் தான் ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர். மற்றொரு இயக்குனரான கார்த்திகேயன் கலியபெருமாள் யார் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் இந்தக் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.  

சென்னை வேளச்சேரியில் “ஃபீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் “லூக்ஸ்” சினிமா என்ற பெயரில்  மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன்  அனுமதி தரவில்லை.  

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை “ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி,  சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே  இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி  இன்று வீதிக்கு வந்து விட்டது.   மேலும் இந்தக் குழுவினர்  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும்  வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.   

தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன.  முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்.  இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels