வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

14/09/2015

சிந்து வெளி நாகரிகம் சிதைந்திடப் பொறுப்பதுவோ? : கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் கடிதம் :

’’இன்று திராவிட இனத்தின் கலங்கரை விளக்கமாம் நமது பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்த நாள்!  55 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதம் 26ஆம் தேதியன்று கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் போது,  “திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் நல்ல வீணை; அதில் நாதம் குறையும் பொழுது அதன் நரம்புகளை, விசைகளைச் சரிபார்த்துக் கொண்டு தொடர்ந்து பயணம் செய்கிறோம்.  எனினும், “இந்த வீணை அறுந்து விடும்” என்று யாராவது கருதுவார்களானால், அவர்கள், அந்த நரம்பின் வலிவையும் அந்த வீணை ஆக்கப்பட்ட விதத்தையும், அது எழுப்பும் இசையையும் நுகர முடியாதவர்களென்று பொருள்” என்று குறிப்பிட்டார்கள். அண்ணா குறிப்பிட்ட வாறே, இந்த வீணை அறுந்து விடும் என்று எதிர்பார்த்து, அறுந்துவிடாதா என்று ஏங்கி நிற்போர் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அறுந்தே விட்டது என்று வாய்ப்பறை கொட்டியே வாழ்க்கை நடத்து வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், நாம் இந்த வீணையின் நரம்புகளை, விசை களை தேவைப்படும் போதெல்லாம்  சரிபார்த்துக் கொண்டு,  தொடர்ந்து இலட்சியப் பயணம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். 

தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழாவினையும், அண்ணா அவர்களின் 107வது பிறந்த நாள் விழாவினையும், நமது கழகத்தின் 67வது பிறந்த நாள் விழாவினையும் இணைத்து வழக்கம் போல இந்த ஆண்டும்  முப்பெரும் விழாவினை இன்று கொண்டாட விருக்கின்ற நேரத்தில், நேற்றையதினம் “இந்து” ஆங்கில நாளிதழில் “முகமது  அலி” என்பார் “சிந்து வெளி நாகரிகம்” பற்றியும், அதன் இன்றைய நிலை பற்றியும், புகைப்படத்துடன் எழுதியுள்ள ஒரு அருமையான கட்டுரையை நான் படித்திட நேரிட்டது. அதைப் படித்த போது, “இன்பத் திராவிடம்” என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தீந்தமிழ்க் கட்டுரையும், பழம்பெரும் கல்வெட்டாராய்ச்சி அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுக் குறிப்புகளும், கோவையில் 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடத்திய  “செம்மொழி” மாநாட்டில், பத்து இலட்சம் ரூபாய் மதிப்பிலான “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை” முதல் முறையாகப் பெற்ற “பின்லாந்து” நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளும் அடுக்கடுக்காக என் நினைவுகளை ஆட்கொண்டன.  
 
அவற்றில் குறிப்பாக பேரறிஞர் அண்ணா அவர்கள் “இன்பத் திராவிடம்” கட்டுரை எழுதும் போது, “இழந்த இன்பத்தை எண்ணிடும்போது, உள்ளம் வேதனைப்படும். இன்பத்தை இழந்ததுடன் துன்பத்திலும் சிக்கிவிட்டால், அந்த வேதனை பன்மடங்கு அதிகமாவதுடன் இழந்த இன்பத்தை மீண்டும் எப்படியேனும் பெற வேண்டுமென்ற எண்ணம் வலுத்துப் பெருத்து வீறிட்டு எழும்.  இதுவே இன்றைய தமிழர் நிலை - திராவிடர் இலட்சியம்.  தமிழ்நாடு என்றுமே தலை வணங்கி வாழ்ந்ததில்லையே!  அசோகர், அக்பர் ஆகிய மன்னாதி மன்னர்கள் காலத் திலும், மண்டியிட்டதில்லை தமிழ்நாடு. அசோகர் கல்வெட்டு, கலிங்கத்தைக் கடும்போரில் அவர் வென்றதைக் காட்டுகிறது.  

அசோகரின் படை பலம் கலிங்கத்துப் போரில், இரத்தக் காடாகப் போரிட்ட வீரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால், மற்றுமென்ன?  இதில் வெற்றி பெறக்கூடிய அசோகர், திராவிட நாட்டை வெல்ல முடியவில்லை என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது.  சேர, சோழ, பாண்டியர்கள் மண்டலாதிபதிகளாக வாழ்ந்தனர் அக்காலத்தில்.  அசோகர் காலத்தில், இவர்கள் அரசுரிமை இழக்காது தமிழ்நாட்டுத் தனிச் சிறப்பைக் காட்டவில்லையோ எனக் கேட்கிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் “தமிழர் என்ற ஆரியரல்லாதார் தனி நாகரிகம்,   தனிமொழி, தனி வரலாற்றுடன், தனி நேஷனாக  வாழ்ந்து வந்தனர்” என்று ஆசிரியர் பார்கீத்தர் கூறியுள்ளார்.

 கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, “திராவிட நாட்டு மன்னர்கள் தங்கக் கொப்பரையில் சந்தனத் தைலத்தை ஊற்றி வைத்துக் கொண்டு வாழ்ந்தனர்” என்று கூறப்பட்டிருக்கிறது. மூன்றாவது நூற்றாண்டில் திராவிட நாட்டின் அமைப்பு பற்றி வரலாற்று நூல்களில் வரையப் பட்டிருக்கின்றன. திருநெல்வேலிக்குத் தென் கிழக்கே 15வது மைலில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து எடுத்தனர். இதேவிதமான  திராவிடச் சிறப்புச் சின்னங்கள், பஞ்சாபில், மண்காமரி ஜில்லாவிலுள்ள ஹாரப்பா என்ற இடத்திலும், சிந்து மாகாணத்தில் மொகஞ்சதாரோவிலும் கண்டெடுக்கப்பட்டன.  எனவே, ஒரு காலத்தில் திராவிட நாகரிகம், திராவிட ஆட்சி,  நெல்லையில் தொடங்கி நெடுக நெடுகச் சென்று சிந்து, பஞ்சாப் வரையிலும், அதற்கு அப்புறமும் சென்றது என்று விளங்குகிறது” என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போதே எழுதி நமது பழம் பெருமையினைப் பாரறியப் போற்றியிருக்கிறார்.

அகழ்வாராய்ச்சி அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறும்போதோ, “சிந்து சமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலச் சொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்” என்று அறுதியிட்டு உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.   இது தொடர்பான தமது சுமார் ஐம்பதாண்டு கால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஓர் ஆய்வுக் கட்டுரையே வெளியிட்டிருக்கிறார். அவரது ஆய்வுக் கட்டுரை யில்,  சிந்து சமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரிய வந்திருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.  சிந்து சமவெளி முத்திரைகள் சொல்லும் செய்திகள், பெயர்கள், பொருள் எல்லாமே முந்தைய திராவிட மொழியின் வேர்கள் என்பதை விவரிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். பண்டைய தமிழகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்குமான விடுபடாத தொடர்பாகவே இந்த சிந்து சமவெளி எழுத்துருக்களை தாம் உணர்வதாகவும் அவர் விளக்கியிருக்கிறார். சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களுடைய குடியேற்றம் நடந்திருக்கலாம் எனவும், இதன் காரணமாகவே சிந்து, திராவிடத்தின் நீட்சி, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுவதாகவும் ஐராவதம் மகாதேவன் தெரிவித்திருக்கிறார்.

அதுபோலவே  செம்மொழி மாநாட்டில் விருது பெற்ற அறிஞர் அஸ்கோ பர்போலோ அவர்கள்  இதே சிந்து வெளி நாகரிகம் பற்றி  தெரிவிக்கும் போது,  “சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹாரப்பா பகுதியில் கி.மு. 1870 மற்றும் 1890க்கும் இடைப்பட்டக் காலத்தில் எந்த மொழி என்று அறுதியிட்டுக் கூற முடியாத கற்களில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.  மேலும் அகழ்வாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகக் காலம் கி.மு. 2600 - 1900 என்பது ஆய்வுகள் மூலம் உறுதியானது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்களும் சேர்ந்து அழிந்து விட்டன. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும் ஹாரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறியவும் உதவியது. வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளிப் பகுதி மக்கள் (ஹாரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சிந்து வெளி நாகரிகம் பற்றி நமது மொழியின்பாலும், நாகரிகத்தின்பாலும்  அக்கறை யோடு தெரிவித்திருக்கின்ற நிலையில், அதற்கெல்லாம் பாதகம் ஏற்படுகின்ற வகையில் தற்போது நிலைமை உள்ளது என்பதைத்தான் “இந்து” ஆங்கில நாளிதழில் முகமது அலி அவர்கள் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

“தி இந்து” ஆங்கில நாளிதழில்  “சிந்து சம வெளி நாகரிகத்தின் ஒரு பகுதியான “ஹாரப்பாவின் தொன்மை” தகர்க்கப்பட்டு, வீடுகள்  கட்டவும், விவசாய நில விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரையில், “உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில் உள்ள 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த “சிந்து சமவெளி”யில் மக்கள் வாழ்ந்த பகுதி தற்போது முறையாகப் பாதுகாக்கப்படாமல், அழிவின் விளிம்பில் உள்ளது.  1957ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் வெளிச்சத்திற்கு வந்த இந்த இடம், இந்தியாவிலேயே  சரித்திர ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் கருதப்பட்டது. கங்கைக்கும் யமுனைக்கும் இடையிலான இந்த இடத்தில் தொன்மைக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன.   ஆனால் தற்போது கிராம விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காக பல நூற்றாண்டுகள் பழைமையும் பெருமையும் வாய்ந்த கட்டிட அமைப்புகளைத் தகர்த்து வருகின்றனர். 


  சிலர் அந்தப் பகுதியில் தங்கள் வீடுகளையும், தங்கள் சமூகத்திற்கான நினைவிடங்களையும், கோயில் போன்ற அமைப்புகளையும் உருவாக்கி வருகிறார்கள்.   ஹாரப்பா கலாச்சாரத்தின் மையமான இந்தப் பகுதி கண்டுபிடிக்கப்பட்ட தற்குப் பிறகு, பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப் பட்டு வந்தது.  ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, சிறிது சிறிதாக அழிந்து வருகிறது.  மிகத்  தொன்மை மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதி ஹாரப்பா கலாச்சாரத்தின் இறுதிக் கட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாகும். நகர்ப்புற வடிவமைப்புக்குச் சிறப்பான முன்னோடி அடையாளமாக விளங்கும் இந்த நாகரிகம்  கி.மு. 3,300 க்கும்  கி.மு. 1,300க்கும் இடைப்பட்ட காலத்தில் மேலோங்கி விளங்கியதாகும். ஆக்கிரமிப்புகளின் காரணமாக, பழைமை வாய்ந்த இந்தப் பகுதி முன்பு இருந்ததில் முக்கால் பங்கு அழிக்கப்பட்டு விட்டது.  மத்திய அரசின் அகழ்வாராய்ச்சித் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது, மாநில அரசுக்கு ஆக்கிர மிப்புகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதிகாரிகள் மத்தியில் தொன்மை வாய்ந்த இந்த இடத்தைப் பற்றிய விழிப்புணர்வு  சிறிதும்  இல்லை” யென்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத் தலைநகரில் முப்பெரும் விழாவினை நாம் எடுக்கின்ற நேரத்தில் நமது கவனத்தைக் கவருகின்ற வகையில் இந்தக் கட்டுரை வெளி வந்துள்ளது நமக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தக் கருத்துகளையெல்லாம் நமது மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று, சிந்து வெளி நாகரிகம் காப்பாற்றப்படவும், மிகப் பழைமை வாய்ந்த ஓர் இனத்தின் அந்த நாகரிகம் தோன்றிய ஆதி காலப் பகுதிகளின் தொன்மை சிறிதும் சிதைந்து  விடாமல் பாதுகாக்கப்படவும்  மத்திய பா.ஜ.க.  அரசும், உத்திரப்பிரதேச மாநில அரசும்   உதவிட வேண்டுமென்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது  பிறந்த நாள் விழாவினைக்  கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 மத்திய அரசும்,  குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களும்  இந்தப் பிரச்சினையில் முக்கிய அக்கறையோடும், சரித்திரச் சிந்தனையோடும்  ஈடுபட்டு, சிந்து வெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்களையும், நாகரிகப் பரப்பையும் காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று மீண்டும்  மீண்டும் வலியுறுத்துகிறேன்.’’

No comments:

Post a Comment

Labels