வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/08/2015

வீறு நடை - வெற்றி நடை போட உன்னை அழைக்கின்றேன்! : கலைஞர் கடிதம் 

உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:

’’உடன்பிறப்பே,
தமிழகச் சட்டமன்றத்  தேர்தல்  2016ஆம் ஆண்டு  மே  திங்களில்  வருகிறது என்பதை நானும், நமது கழகத்தின் காவலர்களும்  அறிந்து  - அந்தத் தேர்தலைச் சந்தித்து  நம்முடைய  திராவிட இயக்கத்தின்  வெற்றிக்குப் பாடுபடவும் - இந்த இயக்கத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நப்பாசையோடு  பொய்யான  செய்திகளை  இட்டுக் கட்டியும்,  அகில இந்திய அளவில் பெற்றுள்ள  செல்வாக்கைப் பயன்படுத்தி  - வலிவு தேடி  -  அந்த வலிவுக்குக் கிடைத்திடும்  பொலிவு பாரீர்  என்று  இங்குள்ள ஆளுங்கட்சி  - அ.தி.மு.க.  -  நாட்டில் குறிப்பாக  நமது  மாநிலத்தில்  ஒரு ஆட்சி இருக்கிறதா?  என்ற  அய்யப்பாட்டை  மக்கள் மனதில் திணித்துள்ள நிலையில்  -  கோடி கோடியாக  பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு;  விலை  கொடுத்துப் பெற்று விடுவோம்  இந்த வெற்றியை""  என வீறாப்பு  பேசிக் கொண்டு  -  தங்களால் ஓரிரு   நீதி மன்றங்களைக் கூட  ஊழல் மன்றங்களாக ஆக்க முடியும்  என்று  மார்தட்டியவாறு  -  மனப்பால் குடிக்கின்ற  மதோன்மத்தர்களின்  மமதையை  எதிர்த்து  மக்களாட்சித்  தத்துவம் வெற்றி பெற வேண்டும்  என்கிற  உயர்ந்த குறிக்கோளோடு  - களத்தில்  நிற்கும்  கழகக் கண்மணிகளை யெல்லாம்  நான் காண்கிறேன்.   அன்றாடம் அவர்கள்  கையில் கிடைத்த பணத்தை அல்லது காசுகளை  என்  கையில் ஒப்படைப்பதற்காக  ஓடோடி வருகின்ற  உத்வேகத்தை  நாள்தோறும் நான் கண்டு கண்டு மகிழ்கிறேன்.

உடன்பிறப்பே,  நீயும்,  உன் போன்ற  உடன்பிறப்புகளும்  உழைத்து உழைத்துப் பெறுகின்ற   சிறு  தொகையை  எத்துணை ஆர்வத்தோடும், அக்கறையோடும்  "இந்த இயக்கம்  வெற்றி பெற வேண்டும் -  இது தான்  எதிர்காலத்தில்  திராவிட இயக்க வளர்ச்சிக்கு  நம்பிக்கை நட்சத்திரம்" என்ற  உறுதியான  எண்ணத்தோடு  எங்கள் கரங்களிலே  ஒப்படைத்து  - அது முறையாக செலவிடப்பட்டு  -  "தி.மு.க. வெற்றி"  என்ற  கோடி  சூரிய உதயத்திற்கு சமமான  ஒளியை  எங்கள் உள்ளங்களில்  பாய்ச்சிட  -  அது கண்டு  மாற்றார் மருளவும்  - உற்றார், ஊரார்  மகிழவும்  -  அந்த எழுச்சி ஞாயிற்றின்  நல்லொளியில்  நான் உன் போன்ற  உடன்பிறப்புகளின்  ஒளி முகங்களைக் கண்டு மகிழும்  நாள்;  சில திங்கள்களிலே  வரவிருக்கிறது.   அதன் பிறகு, "இருட்டறையில் உள்ளதடா இந்த நாடு"  என்று  பெருமூச்சு  விட வேண்டிய நிலை  இல்லை.  இதோ ஒளி மிகுந்த எதிர்காலம்,  தமிழகத்திலே நடைபெறுகின்ற  தி.மு.கழக ஆட்சியினால்  -  இரு வண்ணக் கொடியின் மாட்சியினால்  உலகம்  முழுவதும் பரவிக் கிடக் கின்ற  கோடிக்கணக்கான  தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும்  அந்த நிலையை  நீயும், நானும்,  நம்மோடு  இருக்கின்ற இலட்சக் கணக்கான  திராவிட உடன்பிறப்புகளும்  காணத் தான் போகிறோம்.   அதை ஒரு கனவாகக் கருதத் தேவையில்லை.    இந்த உறுதி,  நமக்கு  -கழகத்திற்கு  மேலும்  மேலும் உரமூட்டி வளர்க்கும்  உறுதியாகும்.  

திராவிட தியாகிகள்  பலர், குருதி கொட்டி வளர்த்த,  இந்த இயக்கத்தின்  கொடி நிழலில்  மலரும் திராவிடத்தை  நாம் காணத் தான் போகிறோம் என்பதில் ஐயம்  சிறிதுமில்லை.   அந்த நம்பிக்கையோடு  -  
நல்லவனே!
வல்லவனே!
அண்ணாவின்  தம்பியே!
பெரியாரின் பேரப் பிள்ளையே!
    மக்களாட்சியின்  மாண்பினை உணர்ந்து,  இந்த மண்ணுக்கு  அதுவே  சிறந்த  துணை என்ற  உறுதியோடு,  ஜனநாயகத்தின்  துhய்மையைப் போற்றி,  வளர்த்து,  அதன் பலனை  கடைக் கோடியில் இருக்கின்ற ஏழையெளிய மக்களுக்கும் கிடைத்திட செய்கின்ற நாள் தான்  நீயும், நானும், நம்மைப் போன்ற உடன்பிறப்பு களும்  மகிழும் நாளாகும்.    அந்த  நாளை  நோக்கி  நடை போட்டு -  அதில் வெற்றி முழக்கமிடத்தான்  -  சுற்றி நிற்கும் பகையை  நெட்டித் தள்ளி  இந்த ஜனநாயகப் போரில் -  அறவழியில்  -  அமைதி வழியில்  -  அண்ணா வழியில்  -  பெரியார்  வழியில்  வீறு  நடை போட வாராய்  என உன்னை அழைக்கின்றேன்.

நீ கையில்  முடிந்து வைத்திருக்கும்  காசுகளை  கழகத்தின் தேர்தல் நிதியாக  தினந்தோறும்  நானிருக்கும்  திசை  பார்த்துக் கொண்டு வந்து கொடுக்கின்றாய்.   அந்தத் துhய தொண்டு  நமது  கழகத்தை நாளும் வளர்த்து  மேலும்  வலு சேர்க்க உதவட்டும்.
அன்புள்ள,
மு.க. ’’

No comments:

Post a Comment

Labels