வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/08/2015

அடக்குமுறை தர்பாரைக்  கைவிடுக! 
அதிமுக அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை!


திமுக தலைவர் கலைஞர், அதிமுக அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை:

’’தமிழகத்திலே  மதுவிலக்கை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு தரப்பினரும்  தன்னெழுச்சியாக நடத்தி வரும் மக்கள் இயக்கத்தை யொட்டி  தே.மு.தி.க. சார்பில்  கோயம்பேடு  முதல்  கோட்டை வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகஸ்ட் திங்கள் 6ஆம் தேதி என்று  முறைப்படி அறிவித்து,  காவல் துறையினரிடமும் அதற்கான அனுமதி கோரிய போது, காவல் துறையினர்  அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.      எனினும்  அந்தக் கட்சியின் சார்பில்,  மனித சங்கிலியில் கலந்து கொள்வதற்காக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர்  விஜயகாந்த், அவருடைய துணைவியார் பிரேமலதா  மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் உட்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும்  கைது செய்து, அழைத்துச் சென்ற போது,  அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று மறியல் போராட்டம் நடத்திய அந்தக் கட்சியினர் மீது  காவல் துறையினர்  தடியடி நடத்தியதைத்  தொலைக் காட்சியில் பார்த்தோம். காவல் துறையினர் எந்த அளவுக்குக் கடுமையாகத்  தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை ஏடுகளில் எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

  இந்த ஆட்சியில் மதுவிலக்கு பிரச்சினைக்காக  கோரிக்கை வைத்து மனித சங்கிலி நடத்துவது  குற்றமா?  மனிதச் சங்கிலி என்பது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போராட்ட முறைகளில் ஒன்று தானே?   அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்   கைது செய்து  மண்டபத்தில் வைத்திருந்து இரவு 8 மணி அளவில் அனைவரையும் விடுதலை செய்து விட்ட போதிலும்,   மகளிரை மாலை 6 மணிக்குப் பின்னரும் விடுதலை செய்யாமல் வைத்திருந்ததும்,  அந்தக் கட்சியினர் மீது  காவல் துறையினர் கண்மூடித்தனமாகத்  தடியடி நடத்தித்  தாக்குதல்   தொடுத்ததும்  வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.    அதுபோலவே  மதுவிலக்குப்  பிரச்சினைக்காகக்  குரல் கொடுத்த மாணவர்களையும்  இந்த அரசின் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கிய தோடு  அவர்களின் பிரதிநிதிகளையும் கைது செய்து புழல் சிறையிலே இன்னமும் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கோரிய ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.   

 சிறையிலே உள்ள மாணவர்கள்  திடீரென உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.  மற்றும் தமிழகத்தில் திருச்சி போன்ற  பல்வேறு நகரங்களில்  மதுவிலக்குப் பிரச்சினைக்காகப் போராடிய மாணவர்களும், மதுவிலக்குக்காக குரல் கொடுத்தவர்களும்   கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார்கள்.  

 மதுவிலக்குக் கோரிக்கையை முன் வைத்து  மாற்றுத் திறனாளிகளும்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  நாளுக்கு நாள் இந்தப் பிரச்சினை  தமிழகம் முழுவதும் வளர்ந்து உக்கிரமடைந்து  கொண்டே போகிறது.   ஆனால்  அதிமுக  ஆட்சியினர் இதுவரை இறங்கி வருவதாகத் தெரியவில்லை.   மிக முக்கியமானதொரு சமூகப் பிரச்சினையை முன்னிறுத்தி,  யாருடைய தூண்டுதலுமின்றி,  தன்னெழுச்சியாக  நடந்து வரும் போராட்டத்தை நசுக்கிட,  கைது,  கண்ணீர்ப் புகை, தடியடி ஆகிய  வன்முறைகளை  மட்டுமே  நம்பியிருப்பதன் நச்சு விளைவுகளை நாளை சந்தித்தே தீர வேண்டும் என்பதை    இந்த ஆட்சியினர் சற்று நினைத்துப் பார்த்து  நியாயமான கோரிக்கைக்காகப் போராடுகின்றவர்கள் மீது எக்காரணம் கொண்டும்  தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்திடவும்,   கைது செய்யப்பட்டுச்  சிறையிலே இருப்பவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி  உடனடியாக விடுதலை செய்திடவும்  வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ’’  

No comments:

Post a Comment


Labels