வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



23/07/2015

திமுகவின் மதுவிலக்கு அறிக்கைக்கு எதிராக குரலெழுப்பும் பாமகவின் கேவலமான அரசியல் : எஸ்.டி.பி.ஐ 

திமுகவின் மதுவிலக்கு அறிக்கைக்கு எதிராக குரலெழுப்பும் பாமகவின் செயல் கேவலமான அரசியல் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுவால் இன்றைக்கு சமூக சீர்கேடுகளும், குற்றங்களும், விபத்துக்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அதிகரிக்கும் அரசு மதுபான கடைகளுக்கு இணையாக குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மதுவிலக்கு ஒன்றே தீர்வு என்பதால், பெரும்பாலான மக்கள், பெண்கள், மாணவர்கள், சமுதாய இயக்கங்கள் என பலரும் மதுவிலக்கினை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் மதுவிலக்கினை ஆதரித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது திமுகவும் மதுவிலக்கினை ஆதரித்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கும் மது பயன்பாட்டை தடுக்க மதுவிலக்கினை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு பெருகியது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பொதுக்கருத்தாக, கோரிக்கையாக மதுவிலக்கு மாறியுள்ளது. இதன் காரணமாக மதுவிலக்கினை அமல்படுத்தப்படுவதற்கு உண்டான அனைத்து வழிகளும் பிரகாசமாக தெரியும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தற்போது கேவலமான அரசியல் அறிக்கை போர்களை நடத்தி வருகின்றது. மதுவிலக்கு கோரிக்கையை முன்வைக்க பாமக மட்டுமே உரிமைச் சான்று பெற்றுள்ளதை போன்றும், மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை போன்றும் அவர்களின் அறிக்கை வெளிவந்து கொண்டிருக்கிறது.

கடந்த 1971-ல் திமுக மதுவிலக்கினை தளர்த்தியதை சுட்டிக்காட்டி அறிக்கைவிடும் அவர்கள், 1974 ஆம் ஆண்டு மது விலக்கினை திமுக அமல்படுத்தியதையும், 2006-ல் 1300 மதுக்கூடங்களை மூடியுள்ளதையும் கவனத்தில் கொள்ளாததேனோ?. தற்போது இதுக்குறித்து அறிக்கை வெளியிட்டு யாதொரு பயனும் இல்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மதுவிலக்கினை எதிர்பார்க்கும் நிலையில், தமிழகத்தை ஆண்ட திமுக தற்போது மதுவிலக்கு குறித்து அறிக்கை அளித்திருப்பதை வரவேற்க வேண்டுமே தவிர, அவர்களின் கடந்தகால செயல்பாடுகளில் குற்றம் கற்பிப்பதை கைவிட வேண்டும்.

பாமகவின் நோக்கம் உண்மையிலேயே மதுவிலக்கு என்பதாக இருக்குமானால், அதற்கு ஆதரவாக பெருகும் குரல்களை தனது கோரிக்கையுடன் இணைத்து வலுச்சேர்க்க வேண்டுமே தவிர இதுபோன்ற கேவலமான அரசியலை அவர்கள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels