வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/05/2015

அதிமுக ஆட்சியின் நான்காண்டு காலத்தில் அதல பாதாளத்தில் தமிழகத்தின் வளர்ச்சி : தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

.










மதுரை : தென்மாவட்ட திமுக சார்பில் மதுரை, யானைமலை ஒத்தக்கடையில், ‘மக்கள் ஓரணி, கேள்வி கேட்கும் பேரணி’ என்ற பெயரில் ‘நம்மை ஏமாற்றிய நான்கு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது பொதுக்கூட்டமா, மாநாடா? உங்களது முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன். தமிழகத்தின் எழுச்சியை, உணர்ச்சியை காண்கிறேன். மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் புனித நகரத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதிமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் புனித காரியத்தை நீங்கள் செய்யவேண்டும். அதற்கு சாட்சியாக இந்த கூட்டம் இருக்கிறது.



இதே மதுரைக்கு திமுக ஆட்சி நடந்தபோது 2010ல் அன்றைய முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வந்தார். அந்த கூட்டத்தில் எம்ஜிஆர் நடித்த ‘தாயகத்தின் சுதந்திரமே செல்வம்.. உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்’ என்ற பாடலை சுட்டிக்காட்டி பேசினார். ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகி விட்டது, மாநிலத்தின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது, இதுதான் ஜெயலலிதாவின் சாதனை. சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா தரப்பைப் பார்த்து ஒன்று சொன்னாரே? ‘நீங்கள் 35 மார்க் தான் வாங்கி இருக்கிறீர்கள் என்று. இது நீதிமன்ற குறிப்பேட்டில் பதிவாகி உள்ளது. அதே நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்தபோது, ‘65 மார்க் வாங்கியவர்களை பெயிலாக்கி 35 மார்க் வாங்கியவர்களை பாசாக்கி விட்டீர்களே’ என்று தலைவர் கருணாநிதி கூறினார். அது நீதிமன்றம். இது மக்கள் மன்றம். நீங்கள் எஜமானர்கள். உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். மேல்முறையீடு 30, 60, 90 நாள் என விரைவில் வந்து விடலாம். கடந்த 2011ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். 

5 வருடத்திற்கு இடையே அப்பீலுக்கு போக முடியாது. இன்னும் ஒரு வருடம் எஞ்சி இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் உங்களைச் சந்தித்து நீதி கேட்க வந்திருக்கிறேன். நான் துணை முதல்வராக இருந்தபோது தொழில்துறைக்கு பொறுப்பு வகித்து, தொழில் கூட்டமைப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி தொழில் புரட்சி உருவாக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தேன்.  இதனால் தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவின் நான்காண்டு கால ஆட்சியில் தொழில்துறை கடைசி இடத்திற்கு போய் இருக்கிறது.

கமிஷன்  ஆட்சி..

திமுக ஆட்சியில் இலவசமாக கலர் டிவி வழங்கும் திட்டத்தில் ரேஷன் அட்டை வைத்திருந்த, எந்த கட்சியினராக இருந்தாலும் அத்தனை பேருக்குமே வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் லேப்டாப், கிரைண்டர், மிக்ஸி எப்படி வழங்குகிறார்கள்? அதற்கு டெண்டர் வெளிப்படையாக வழங்கப்படவில்லை. கட்சிக்காரர்களுக்கே கமிஷன் அடிப்படையில் விடப்பட்டது. குளறுபடிகள் இருந்தன. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு போல் அமைக்கப்படவில்லை. அப்படி குழு அமைத்தால் கமிஷன் பெற முடியாது. இப்போது ஒரு கமிஷன் ஆட்சிதான் நடக்கிறது.

அதிகாரிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்கு பயந்து அதிகாரிகள் தற்கொலை செய்யும் நிலை இருக்கிறது. உதாரணத்திற்கு  வேளாண்மைத்துறை அதிகாரி நெல்லை முத்துக்குமாரசாமி ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். கண் துடைப்பாக அந்த அமைச்சரைக் கைது செய்து, இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். இதே போல் திருச்சி மருத்துவ அதிகாரி வேலு தற்கொலை, சென்னை, திருவாரூர் ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை என நீடித்துக் கொண்டே போகிறது.

ரூ.1 லட்சம் கோடி ஊழல்..

இதேபோல் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை என துறைகளில் டெண்டர் ஊழல்கள் நடக்கின்றன. தாது மணல் கொள்ளையில் ரூ.1 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி, முதலமைச்சரிடம் அறிக்கை கொடுத்தார். இதுவரை வெளியிடவில்லை. கிரானைட் முறைகேடு தொடர்பாக ரூ.16 ஆயிரம் கோடி ஊழலை விசாரிக்கும் சகாயத்திற்கு கொலை மிரட்டல் வந்தது. ரூ.80 ஆயிரம் கோடி மின்சாரத்தில் ஊழல். ரூ.110 கோடி பருப்பு வாங்கியதில், முட்டை வாங்கியதில் ஆண்டுக்கு ரூ.98 கோடி என ஊழல்கள், கலப்பட ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊழல்கள் நடக்கின்றன. இதைச் சொன்னதற்காக என் மீது வழக்குப் போடுங்கள். சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா போல் வாய்தா வாங்க மாட்டேன்.

எத்தனை வழக்கானாலும்...

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. திமுகவை பொறுத்தவரை எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்.

தண்ணீரை விற்கும் ஆட்சி...

இன்று அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், மக்கள்நல பணியாளர்கள் போராடுகின்றனர். மக்களே வீதிக்கு வந்து குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்கின்றனர். இந்த ஆட்சியை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன் என ஜெயலலிதா சட்டசபையில் சொன்னார். வீடுகட்ட ரூ.1 லட்சம் மானியம். ஒரு சென்ட் நிலம் வழங்கப்படும் என்றார். கொடுத்தாரா? உலகத்திலேயே இல்லாத அளவுக்கு மக்களுக்கு குடிநீரை ரூ.10க்கு விற்கும் ஆட்சி பார்த்திருக்கிறீர்களா? இலவசமாக தரக்கூடிய குடிநீரை விற்கக்கூடிய ஆட்சி தான் இன்றைய தமிழகம் பார்க்கிறது.

கோபப்படுவீர்களா...

தமிழகத்தில் ஏதாவது பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறதா? ேமானோ ரயில் திட்டம் 2 லட்சம் கோடியில் அறிவிக்கப்பட்டது. இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளதா? தொடங்க கூடிய அறிகுறிகள் உண்டா? பிரதமருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில் நிதி நிலையில் ரூ.2 லட்சம் கோடி பற்றாக்குறை உள்ளது. நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என சட்டமன்றத்தில் நடந்த நிதிநிலை அறிக்கையிலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் அலறியடித்து ஓடுகிறது. இதற்கு முடிவு கட்ட தமிழகத்தை காப்பாற்ற ஆட்சி மீது நமக்கு கோபம் வந்தாக வேண்டும். வருகிறதா, இல்லையா? கோபப்படுவது குற்றமல்ல. நாம் கோபப்படாமல் இருந்தால்தான் குற்றம். 

கோபப்படுவீர்களா? மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறார்களே கோபப்படுவீர்களா? நாம் கோபப்பட வேண்டாமா? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது, அதற்காக கோபப்பட வேண்டாமா? பொதுமக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா? இதற்கு முடிவுகட்ட தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும். உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன். சர்வாதிகாரம் தாண்டவம் ஆடும் இக்கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த சர்வாதிகார ஆட்சியை கேள்வி கேளுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின்  பேசினார்.

18 ஆண்டாக இழுத்தடித்த வழக்கு : 3 மாதங்களில் முடிந்த மர்மம்


மு.க.ஸ்டாலின் பேசுகையில்,’’சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை  விடுவித்தது சரியா என நியாயம் கேட்க வரவில்லை. அதில் ஜெயலலிதா எப்படி  ஜாமீன் பெற்றார், எப்படி விடுதலை வாங்கிக் கொண்டார்? அதற்காக நீதி கேட்டு  இங்கு வரவில்லை. வழக்கை 18 ஆண்டு காலம் இழுத்தவர், அப்பீல் வழக்கை 3  மாதத்தில் முடித்த மர்மம் என்ன? விரைவில் அது வெளிவரத்தான் போகிறது. ஜெயலலிதா வழக்கில் ஆஜரான சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மேல் முறையீடு செய்ய  தகுதியானது என குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களையும் கர்நாடக அரசுக்கு  எடுத்துச் சொல்லி பரிந்துரை செய்துள்ளார். கர்நாடகா அட்வகேட் ஜெனரல்களும்  வழிமொழிந்துள்ளனர்.

முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா இருமுறை  இறங்கி உள்ளார். 2001ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வர் பதவியில்  இருந்து இறங்கினார். டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை  விதித்து, உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்றம் விடுதலை  செய்தபோது, ஜெயலலிதாவைப் பார்த்து நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?  ‘எந்தத்தவறும் செய்யவில்லை அதனால் உங்களுக்கு விடுதலை’ எனச் சொல்லவில்லை.  அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு முதல்வர் வாங்கியது  தவறு. அதனை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு  தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதா செய்த தவறை அவர் மனசாட்சிக்கே  விட்டுவிடுகிறேன் எனச் சொல்லி விடுதலை செய்தார். அந்த மனசாட்சிக்கு  ஜெயலலிதா பதில் சொல்லி இருக்கிறாரா?

இப்போது சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் விடுதலை வாங்கி இருக்கிறாரே, எப்படி வாங்கினார்?  மனசாட்சியைக் கேட்டு நாட்டு மக்களுக்கு நீதியை தெரிவிப்பார் எனக் காத்திருக்கிறேன், மக்களும் காத்திருக்கின்றனர்’’ என்றும் ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment


Labels