வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

28/04/2015

பவானி சிங் நியமன வழக்கில் நேர்மைக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி: கலைஞர் பேட்டி

பவானி சிங் நியமன வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நேர்மைக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

கேள்வி:- பவானி சிங் அவர்களை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமனம் செய்தது, செல்லாது என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாக தாங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர்:- இதை முதல் வெற்றி என்று மாத்திரமல்ல; மிகப் பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.

கேள்வி:- நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

கலைஞர் :- பொதுவாக நீண்ட காலமாக எதிர்பார்த்த நீதி முழுமையாகக் கிடைத்து விட்டால் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைவது இயற்கை தானே?

கேள்வி:- இது பற்றிய தீர்ப்பு அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் வரவேண்டுமென்றும், மேலும் கால தாமதம் செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஜெயலலிதா தரப்பினர் கால தாமதம் செய்ய முயலுவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறதே?

கலைஞர் :- அப்படியொரு தகவல் உங்களுக்குக் கிடைத்திருக்கலாம். எனக்கு இப்படியொரு தகவலே கிடைக்கவில்லை.

கேள்வி:- தி.மு. கழகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கலைஞர் :- தி.மு. கழகத்திற்கு எத்தனையோ வெற்றிகள் கிடைத்துள்ளன. எனவே இது தான் முதல் வெற்றி என்று சொல்ல முடியாது.

கேள்வி :- இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு 2016ஆம் ஆண்டு வர விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

கலைஞர் :- நாங்கள் இப்போது ஓட்டுக் கணக்கைப் பார்க்கவில்லை. நீதி நிலைக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்த தீர்ப்பை நேர்மைக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Labels