வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/03/2015

அமைதியாக ஆட்சி நடத்த முடியாவிட்டால் ஓடிவிடுங்கள்!- சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு!



சென்னை, மார்ச் 21:
தொடர்ந்து மக்களை வாட்டுவோம் என்று எண்ணாமல் அமைதியாக ஆட்சி நடத்துங்கள். முடியாவிட்டால் முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிவிடுங்கள் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசினார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:
இன்று தமிழ்நாடு முழுவதும் பல நூறு இடங்களில், தி.மு.க.வும், தோழமைக் கட்சிகளும் இணைந்த கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்கள். மக்களுடைய எழுச்சியைக் கண்டு மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் அறிவு பெற வேண்டும், அடக்கம் கொள்ள வேண்டும், அராஜகத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டங்களின் பிரதான நோக்கம்.
ஜார் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் யாருக்கும் அஞ்சமாட்டேன், யாரையும் மதிக்க மாட்டேன் என்று தான் பதுங்கியிருந்த அரண்மனைக்குள்ளே இருந்து மிரட்டல் விடுத்தான். அவனையும், குடும்பத்தாரையும் வேரோடு களையெடுத்து, அந்த நாட்டை சுதந்திர பூமியாக ஆக்கி, சமத்துவபுரியாக ஆக்கிய கைங்கரியத்தை, ஏழையெளிய மக்கள்தான் செய்து முடித்தார்கள். அதேநிலை எந்த ஒரு அரசுக்கும் வரக் கூடாது என்று எண்ணுகிற காரணத்தால்தான் அரசுகளுக்கு எச்சரிக்கைகளை செய்கிறோம்.
அதைப் பொருட்படுத்தாவிட்டால், ஜாரின் கதி, ரஸ்புடீனின் கதி இவர்களுக்கும் ஏற்படும் என்பதை வெளிப்படுத்தி, தி.மு.க. மாத்திரமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கட்சிகளும், இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளும், நடைபெறுகின்ற அக்கிரமத்தை, அராஜகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பாடம் போதிக்க வேண்டுமென்று புஜம் தட்டி நிற்கிற காட்சியை இன்று நாடு காணுகிறது.
மத்திய அரசு நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களை யாருக்கு தரப் போகிறோம், ஏழை எளியவர்களுக்கு தானே தரப் போகிறோம் என்று சிலர் பேசி, எழுதி வருகிறார்கள். நான் அவர்களை கேட்க விரும்புகிறேன், அது உண்மை என்றால், எதற்காக மத்திய அரசினுடைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லி நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள ஒரு அதிகாரியை மிரட்டி, அந்த அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமாக ஆகி இப்படி வேதனைப்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைக்கிறேன்.
மத்திய அரசில், பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை, நியாயமான வாதங்களைப் புறந்தள்ளி விட்டு நிறைவேற்றத் தேவையா என்பதை மத்திய அரசும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக உள்ள நம் மாநில அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வராக இருக்கின்ற மன்னிக்க வேண்டும் அது யார் என்று தெரியவில்லை முதல்வர் ஜெயாவா? பன்னீரா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. அவர்கள் உறுதி அளிக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவுக்கு என்ன காரணம். நாங்கள் இந்தச் சட்டத்தை அது ஏழை எளிய மக்களை வாட்டுவதாக இருந்தாலும் ஆதரித்து வாக்கு அளிக்கிறோம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?
நாங்கள் வாக்களித்தால்தான், எங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை மறைத்து விட்டு எங்களை நீங்கள் விடுவிக்க முடியும், எங்களை விடுவிப்பதாக இருந்தால், இந்த மசோதாவை ஆதரிக்கிறோம், வாக்களிக்கிறோம் என்று ஜெயலலிதா கூறுகிறார் என்றால், நாக்கு ஒன்றா? இரண்டா? கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எந்தச் சட்டத்தை ஜெயலலிதாவின் கும்பல் எதிர்த்ததோ, அதே சட்டத்தை இன்றைக்கு ஆதரித்து வாக்களிக்க வரிந்து கட்டிக் கொண்டு புறப்படுகிறது என்றால், இது தங்களுடைய தனிப்பட்ட சுயலாபத்திற்காகத்தான் என்பதை மறுக்க முடியாது, மறக்க முடியாது.
நாட்டில் இன்றைக்கு நடைபெறுகின்ற அநியாயங்கள் ஒருபுறம் இருந்தாலுங்கூட, பொழுது விடிந்து பொழுது போனால் ஊருக்கு ஒரு கொலை, தெருவுக்கு ஒரு கொள்ளை என்ற நிலை நாட்டில் உள்ளது. அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழன் மாத்திரமல்ல, இந்தியன் ஒவ்வொருவரும் இன்றைக்கு முடிவு கட்டிக் கொண்டு புறப்படுவார்களேயானால், என்ன தான் துப்பாக்கிகள் பீரங்கிகளை பயன்படுத்தினாலும்கூட, எழுச்சியுற்ற இந்த மக்களை யாராலும் எவராலும் அடக்க முடியாது.
எத்தனை சிறைச்சாலைகள் உண்டோ, அத்தனை சிறைச்சாலைகளையும் திறந்து வையுங்கள். சிறைக்கு செல்வதற்கு, சிறைகளை நிரப்புகின்ற போராட்டத்திற்கு, தமிழன் தயாராகி விட்டான். இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் தயாராகி விட்டார்கள். யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாய்? எவரைக் கைது செய்து புரட்சியை அடக்கலாம் என்று கருதுகிறாய்? புரட்சி ஒருநாளும் தோற்றதில்லை. எந்த நாட்டிலும் தோற்காத புரட்சி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவுகின்ற அந்தப் புரட்சி மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க்கின்ற புரட்சி, அந்தப் புரட்சியை அடக்கிவிடலாம் என்று எந்தச் சட்டத்தை திட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், அவைகளுக்கு அடங்கிப் போகாது இந்த எழுச்சி.
நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சிந்தித்துப் பாருங்கள் அந்தச் சிந்தனைகளுக்குப் பிறகு, இந்த நடமாட்டங்களுக்குப் பிறகு நாடு எங்கே போகிறது? எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது? இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும் என்பதை தயவுசெய்து ஆட்சியாளர்களே, நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றவர்களே, தயவு செய்து பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள், பழைய சரித்திரங்கள் கூறுகின்ற பாடம் என்ன அந்தப் பாடங்களைப் படித்த பிறகாவது, அந்த அனுபவங்களை உணர்ந்து பார்த்த பிறகாவது, இனியும் தொடர்ந்து மக்களை வாட்டுவோம் என்று எண்ணாமல், புத்தி புகட்டப்பட்ட நிலைக்கு வாருங்கள். அமைதியாக ஆட்சி நடத்த முடிந்தால், அதற்கு முன் வாருங்கள், முடியாவிட்டால், எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிவிடுங்கள் என்று ஆணவம் பிடித்த ஆட்சியாளர்களுக்கு, தூங்கு மூஞ்சி ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து இந்த மக்கள் கடலுக்கு முன்னால் சபதம் எடுத்துக் கொண்டு விடைபெறுகிறேன்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஜெ.அன்பழன் எம்.எல்.ஏ. பேசினர். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார். சுப.வீரபாண்டியன், பேராயர் எஸ்றா சற்குணம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆற்காடு வீராசாமி, ஜெகத்ரட்சகன், மு.க.தமிழரசு, தலைமை நிலைய செயலாளர்கள் உசேன். சதாசிவம், துறை முகம் காஜா, கு.க.செல்வம், முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், க.தனசேகரன், தாயகம் கவி, கென்னடி, எஸ்.மோகன், தொழிலாளர் அணி நிர்வாகிகள் ரத்தினசபாபதி, செல்வராஜ், பிடிசி.பாலு, ஐ.சி.எப். துரைராஜ், ராஜா குப்புசாமி, வர்த்தகர் அணி காசி முத்துமாணிக்கம், வக்கீல் கணேசன், எல்.எஸ்.எஸ்.மோகன், மு.மனோகரன், வி.எஸ்.ராஜ், ஜெ.கருணாநிதி, அன்புதுரை, ராமலிங்கம், பரமசிவம், த.வேலு, கண்ணன், காமராஜ். அகஸ்டின்பாபு, மதன்மோகன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.சேகர், தவமணி, பூச்சி முருகன், ராபர்ட் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகி கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத் தும் வெயிலை பொருட்படுத்தா மல் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


Labels