வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

05/03/2015

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள்

சென்னையில் திமுக தலைமை செயற்குழு தொடங்கி நடைபெற்றது.  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.   திமுக பொதுச்செயலாலர் க.அன்பழகன், பொருளாலர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இந்தியாவின் கடைசி மாநிலமாக இறங்கி விட்ட தமிழகம்!
2. மத நல்லிணக்கமும் - பா.ஜ.க. நிலையும்!
3. “அ.திமு.க. பேரவை”யாகி விட்ட சட்டப் பேரவை!
4. திருவரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி!
5. சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம், ஒழுங்கு நிலை!
6. அதிபர் மாறியும், மீனவர்கள் மீது மாறாத அட்டூழியங்கள்!
7. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலை!
8. பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள்!
9. காவேரி மேலாண்மை வாரியம் உடனேஅமைக்கப்பட வேண்டும்!
10. மத்திய அரசு கொண்டுவரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 2014ஐ
கைவிடுக!
11. முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும்
சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெறுக!
12. கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை கொடுத்திடுக! 

தீர்மானம் : 1
இந்தியாவின் கடைசி மாநிலமாக இறங்கி விட்ட தமிழகம்! 2011ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பையேற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தரம் தாழ்ந்து தவித்துத் தள்ளாடும் அவலத்தைப் பல நாளேடுகளும் சுட்டிக் காட்டி வருகின்றன.  ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்களை நிறைவு செய்திருக்கிறார். இந்தக் காலம் நிர்வாகக் குழப்பம் மேலும் ஆழமாக வேரூன்றி, முக்கிய முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்பட முடியாத அல்லது ஒத்தி வைக்கப் பட வேண்டிய காலமாகவே இருந்துள்ளது. மாநில அரசின் நிர்வாகத்தை, ஆலோசகர்கள் ஆக்கிரமித்துள்ளதால், பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பதாகவே உணர முடியாத நிலை ஏற்பட்டு நிர்வாகம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதோடு; 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள சிக்கல்களை அகற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கான முயற்சிகளை எடுக்காமலும், கல்வித் துறையிலும், மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் மற்றும் பல துறைகளிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமலும், குறிப்பாக 2014ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டியமாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டினைக் கூட நடத்த முற்படாமலும், மாநில நிர்வாகம் சூறாவளிக் காற்றில் சிக்கிய படகைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் “அம்மா”வுக்காக ஹோமம், யாகம், அர்ச்சனை, மண் சோறு, வேப்பிலை ஆடை, பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் ஆகியவற்றில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுவதிலும், தத்தமது துறைகளில் “வரவு” பார்த்து மூட்டை கட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். 

இன்னும் சொல்லப் போனால் பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு இந்த ஐந்து மாத காலத்தில் ஒரே ஒரு முறைதான் அமைச்சரவைக் கூட்டமே நடந்துள்ளது. முடிவடைந்த திட்டங்களுக்குத் திறப்பு விழா கூட நடத்தாமல், யாரோ ஒருவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டியவர்களாக அமைச்சர்கள் ஆகி விட்டார்கள். உதாரணமாக “மெட்ரோரெயில் திட்டம்” தொடங்கப்படும் நிலையில் இருந்த போதிலும், அதிலே இந்த அரசு அக்கறை காட்டாமல் உள்ளது.

 நடைபெற்று முடிந்த ஆளுநர் உரை, வரும் ஆண்டுக்கான கொள்கை வழிகாட்டுதல் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாமல்,கடந்த நான்காண்டு கால அரசுக்கு, வழக்கமாக வழங்கும் பாராட்டுரையாகவே அமைந்தது. அதன் மீது எதிர்க் கட்சியினர் யாரும் பேரவையில் ஜனநாயக ரீதியில் தங்கள் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்பட வில்லை. அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன் கருதி ஆக்கபூர்வமாக அமையாததின் விளைவாகத் தமிழகம் மிக வேகமாகப் பின்னுக்குச் சென்று கொண்டிருக்கின்றது.

 மத்திய புள்ளியியல் துறை அறிக்கையின்படி, 2012-2013இல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், பீகார்10.73 சதவிகிதம், குஜராத் 7.87 சதவிகிதம், கேரளா 8.24 சதவிகிதம், ஆந்திரா 5.08 சதவிகிதம், தமிழ்நாடு 3.8 சதவிகிதம் (18வது இடம்). தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தி.மு. கழக ஆட்சியில் 2009-2010இல், 20.93 சதவிகிதம். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 2013-2014இல் 1.61 சதவிகிதம். தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி என்று பார்த்தால், தி.மு. கழக ஆட்சியில் 2009-2010இல் 28.18 சதவிகிதம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013இல் 1.31 சதவிகிதம்.
 
தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் கடைசி இடமான 18வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குபவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் பயங்கரமானவை என்றும்;தொழிற்சாலைகள் தொடர்பான விவகாரங்கள், தொழிலாளர் இடையேயான பிரச்சினைகள், இவற்றில் உள்ளூர் ரௌடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகளின் தலையீடுகள் உள்ளன என்றும் ஏடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் ஆகியோர் தம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல், வளர்ந்து கொண்டே  இருக்கின்றன. இலவசமாக வழங்கப்பட்ட மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்கள் ஒரு சில நாட்களிலேயே பழுது பார்க்கும் கடைகளுக்குப்போய் விட்டன; பெரும்பாலானவை காயலான் கடைகளுக்குப் போய் விட்டன; இலவச ஆடு - மாடுகள் வயதானவையாக, தரம் குறைந்தவையாகவே இருந்ததால் வழங்கிய வேகத்திலேயே சந்தைக்குப் போய் விட்டன; மின்சாரவாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களை எல்லாம் சேர்த்தால் தமிழக அரசின் மொத்தக் கடன் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத்தாண்டி விடும் என அபாய அறிவிப்பு செய்யப்பட்டு, அ.தி.மு.க. அரசு,முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, திவால் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது; மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் உரிய காலத்தில் தேவையான கவனம் செலுத்தாததால் அ.தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு தமிழக நிர்வாகம் அனைத்து வகையிலும் சிதைந்து சீர்கெட்டு, “இந்தியாவிலேயே கடைசி மாநிலம்” என்ற அவப்பெயரைத் தமிழகத்திற்குத் தேடித் தந்துள்ளது. இவற்றைக் கருத்திலே கொண்டு, தற்போதைய செயலற்ற, சீர்கேடான நிலைக்குத் தமிழகத்தை உள்ளாக்கிய அ.தி.மு.க. அரசுக்குத் தனது கடுமையான கண்டனத்தை இந்தச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் : 2
 மத நல்லிணக்கமும் - பா.ஜ.க. நிலையும்! 2014ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழையெளிய நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் வரிசையாக நடைமுறைக்கு வரும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள் மற்றும் அவர்களுக்கு அணுக்கமானவர்கள் - இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்றும் - இராமருக்குப் பிறக்காதவர்கள் முறை தவறிப் பிறந்தவர்கள் என்றும் - பகவத் கீதையே தேசிய நுhல் என்றும் - காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே என்றும் - கோட்சேவுக்கு நாடு முழுதும் சிலை அமைக்க வேண்டும் என்றும் - மெக்காவில் ராமர் கோயிலைக் கட்டி விட்டு, அயோத்தியில் மசூதி கட்டட்டும் என்றும் - அடித்தட்டு மக்களுக்கு அன்னை தெரசா அறப்பணியாற்றியது, அவர்களை மதமாற்றம் செய்வதற்கே என்றும் பேசி வருவதும்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பதும் - தொடர்ந்து இந்தியப் பிரதமர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக “இந்தி” மொழியை அலுவலக மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கிடக் காரியமாற்றுவதும் - இந்திய ஒருமைப்பாட்டிலும், சமத்துவக் கொள்கையிலும் நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாக இல்லை. மேலும் மதவாதப் போக்கிற்குத் துணை போகின்ற வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு, அந்த மாநில பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகின்றது.

 இந்திய அரசியல் சட்டத்துக்கெதிரான இத்தகைய காரியங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து மத நல்லிணக்கத்தையும் மொழிகளின் சமன்பாட்டையும் போற்றிப் பாதுகாத்திடும்  வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு முனைகளிலும் கடந்த சில மாதங்களாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுகாறும் அமைதி காத்து வந்த பிரதமர் மோடி அவர்கள், மேதகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது 27-2-2015 அன்று ஆற்றிய உரையில், “இந்தியாவே முதன்மையானது என்பதே எனது அரசின் மதமாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட நுhல் தான் எனது அரசின் ஒரே புனித நூல். தேச பக்தியே எனது அரசின் ஒரே பக்தியாகும். அனைவரது நலன் என்பதே அரசின் பிரார்த்தனை ஆகும். இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில் மத ரீதியில் அபத்தமான கருத்துகள் தெரிவிக்கப் படுவதையும், பாகுபாடு காட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமேயன்றி, ஒற்றுமை யின்மையை ஏற்படுத்தி விடக் கூடாது” என்று விரிவாக எடுத்துரைத்திருப்பது ஒற்றை மதவாதம், ஒற்றை மொழி வாதம் பேசி வருவோர்க்கு வாய்ப்பூட்டு போடுவதாக அமையக் கூடும் என்று நம்புவதால், மோடி அவர்களின் இந்தக் கருத்துக்கு முற்றிலும் முரண்பாடான வகையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் பேசியவை அனைத்தும் கண்டிக்கத் தக்கவை; ஏற்கத்தக்கவையல்ல என்று கழகத்தின் இந்தச் செயற்குழு கருதுகிறது. 

தீர்மானம் : 3
“அ.திமு.க. பேரவை”யாகி விட்ட சட்டப் பேரவை. தமிழகச் சட்டப் பேரவைக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதில் சான்றோர் பலர் தலைவர்களாகப் பொறுப்பேற்று அவையைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். பேரும் புகழும் பெற்ற தமிழகச் சட்டப் பேரவை இப்போது எப்படி நடைபெறுகிறது? எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்யாத நாட்கள் உண்டா? பேரவைத் தலைவர் நடுநிலை தவறி, கட்சிக் கண்ணோட்டக் காழ்ப்புணர்வோடு எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன! பேரவையின் விதிகளைப் பின்பற்றி முறையாகப் பேசினாலும் எந்த எதிர்க் கட்சி உறுப்பினரையாவது பேச அனுமதிப்பதுண்டா? ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியும், முன்னாள் முதலமைச்சரைப் பற்றியும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மனம் போனபடித் தரம் தாழ்ந்து விமர்சிக்கலாம்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் முன்னாள் முதலமைச்சரும், சொத்துக் குவிப்பு வழக்கில் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவருமான ஒருவரைப் பற்றி சட்டமன்ற மரபுக்குட்பட்டு ஏதாவது ஒரு வார்த்தை எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டால் கூட, அமைச்சர்கள் அனைவரும் கும்பலாக எழுந்து கொள்கிறார்கள்! அரசைப்பற்றியோ, ஏதாவது ஒரு துறையைப் பற்றியோ எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆக்க பூர்வமாகப் பேச முற்பட்டாலே போதும், உடனே அந்தத் துறையின் அமைச்சர் எழுந்து பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டுவந்து தன் கையிலே வைத்திருக்கும் குறிப்பையெல்லாம் நேர காலத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படிப்பார்.

ஆனால், அது பற்றிப் பேச எழுந்த எதிர்க் கட்சியின் உறுப்பினர் எதையும் கூறக் கூடாது. இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும், எதிர்க் கட்சித் தலைவரான  விஜயகாந்த் பற்றியும் அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அனுமதிக்கக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்வார்கள். எதிர்க் குரல் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; உடனே வெளியேற்றுவார்கள். எதிர்க் கட்சியான தே.மு.தி.க., வின் உறுப்பினர்களை அண்மையில் அவையிலிருந்து வெளியேற்றிய போது, அந்தத்தண்டனைக் காலத்தை மனிதாபிமானத்தோடு குறைக்க வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் சட்டமன்றக் குழுத் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதைக் கூட, பேரவைத் தலைவர் அரசியல் நோக்கத்தோடு, “யாருடைய வேண்டுகோளையும் ஏற்று தண்டனை குறைக்கப்படவில்லை” என்று விமர்சித்தார் என்றால் தமிழக சட்டப்பேரவை ஜனநாயக வழிமுறைகளுக்குப் புறம்பாக
எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு; அவரது உடல் நிலை கருதி, அதற்கேற்ற இடத்தினை மனிதாபிமானத்தோடு ஒதுக்கித் தரக்கூட முன் வராத அநாகரிகத் தன்மை கொண்ட சட்ட மன்றம் தான் தற்போது நடைபெறுகிறது. பேரவையிலே எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த வரை அவர் தான் 110வது விதியின் கீழே படிப்பார். வேறு எந்த அமைச்சருக்கும் அந்த உரிமையை அவர் வழங்கியதே இல்லை. ஆனால், அந்த 110வது விதியின் கீழே அவர் படித்த அந்த அறிவிப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டனவா? பேரவையில் உறுதி மொழிக் குழு அது பற்றிய தகவல்களைத் தர வேண்டாமா? பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமோ, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமோ கொடுத்தால் அவைகள் முறையாக எடுத்துக் கொள்ளப்படுவதே கிடையாது. பேரவை நடைபெறுகின்ற நாட்களைக் கூடக் குறைத்து, முக்கிய பிரச்சினைகளை எழுப்புவதற்குப் போதுமான நேரமோ, நாட்களோ ஒதுக்குவதில்லை. 

பேரவையின் செயலாளரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர் ஓய்வு பெற்ற பிறகு,
இந்த ஆட்சியினால் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார். அதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் மீது நீதிமன்றம் தண்டனை கொடுத்த பிறகும், அந்தச் செய்தியினை முறையாக அறிவிக்காமல் காலத்தைக் கடத்தி, பின்னர் அதுபற்றிய விமர்சனம் எழுந்த பிறகு தான் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கூட முறையாகச் செய்யாத காரணத்தால், அவரை அந்தப் பதவியிலிருந்தே அனுப்பப் போவதாகச் செய்திகள் எல்லாம் வந்தன. 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், அதற்குப் பிறகும் “ஜெயலலிதா போற்றி”ப் புராணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட ஆஸ்தான மண்டபமாகவே தமிழக சட்டப் பேரவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியிலான விவாதங்களுக்கோ, மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கோ கிஞ்சிற்றும் வாய்ப்பின்றி; சட்டப் பேரவை “அ.தி.மு.க. பேரவை” யாகவே மாற்றப்பட்டிருக்கும் மாபாதகத்தை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. 

 தீர்மானம் : 4
திருவரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி! ஜனநாயக அமைப்பின் அடித்தளமான தேர்தல் களத்தையே தன்னுடைய பண பலம், அதிகார பலம் ஆகியவற்றால் தகர்த்து, தன் கட்சி மட்டுமே
பயணிக்கக்கூடிய ஒரு வழிப்பாதையாக்கிய அலங்கோலமான நிகழ்ச்சிகள்திருவரங்கம் இடைத்தேர்தல் களத்திலும் அ.திமு.க. ஆட்சியினரால் உருவாக்கப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட நாள்முதல் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்களும், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளும், திருச்சி மாவட்டத்திற்குப் புதிதாக மாற்றப்பட்டு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரும், “சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் செல்வாக்கு சேதாரமடைந்திடவில்லை” என்பதை எப்படியாவது நிரூபித்துக் காட்டிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு, அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வெறி உணர்வுடன் சட்டத்தையும், தேர்தல் விதிமுறைகளையும், நன்னடத்தை விதிகளையும் மீறிச் செயல்பட்டனர். இதுவரையிலும் கண்டும் கேட்டுமிராத அளவிற்கு வாக்காளர்களுக்குப் பகிரங்கமாகத் தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடனும், காவல்துறையின் துணையுடனும் ஆளுங்கட்சியினரால் பெரும் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களே, வேறு எந்தப் பணியும் இல்லாத நிலையில், இரவோடு இரவாகத் திருச்சிக்குச் சென்று அங்கே தேர்தல் பணியாற்றிய அ.தி.மு.க. வின் அமைச்சர்களையெல்லாம் சந்தித்து “இரகசியமாக” உரையாடி விட்டு வந்தார்.

தி.மு. கழகம் செய்து கொண்ட முறையீட்டினை உண்மையென ஏற்று; தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தத் தொகுதியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார்கள். அதிலும் ஓர் அதிகாரி ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் தேர்தலிலே போட்டியிட விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்தவர் என்பதும், அப்படிப்பட்ட “விசுவாசம்” மிக்கவரை அங்கே தேர்தல் அதிகாரியாக நியமித்திருந்தார்கள் என்பதும் எந்தஅளவுக்கு அங்கே தவறுகள் நடைபெறுவதற்கான வழிகள் திறந்துவைக்கப்பட்டிருந்தன என்பதற்கான சான்றுகளாகும். தமிழகக் காவல் துறையினரின் முழுமையான ஆதரவோடும், அரவணைப்போடும் நடைபெற்றதிருவரங்கம் இடைத் தேர்தலில், ஆளுங்கட்சியினரின் அராஜகச் சேட்டைகள்,அச்சுறுத்தல்கள், கட்டுப்பாடற்ற தேர்தல் விதி மீறல்கள், ஜனநாயகப் படுகொலை ஆகிய ஏராளமான எதிர்மறை அம்சங்களின் அரங்கேற்றத்திற்குப் பின்னரும், தி.மு. கழக வேட்பாளருக்கு வாக்களித்த 55,044 வாக்காளப் பெருமக்களுக்கும், அங்கே தேர்தல் பணியாற்றிய கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் இந்தச் செயற்குழு இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித் துக் கொள்கிறது. 

தீர்மானம் : 5
சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம், ஒழுங்கு நிலை. ஜெயலலிதா 2011ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது, கேள்வி கேட்பாரற்று அனாதையாகிக் கிடக்கின்றது. ஆளுநர் உரையில் பத்தி 3இல் இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாகவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டு, ஆட்சியினர் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் அதற்குப் புள்ளி விவரத்தோடு தக்க பதிலை “உடன்பிறப்பு மடலில்” எடுத்துரைத்திருந்தார்கள்.

குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்படி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 44 மாதங்களில் 7,805 படுகொலைகளும், 79,305 கொள்ளைகளும், 4,697 கற்பழிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும், அந்த ஆவணத்தில் வந்துள்ள விவரங்கள்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1,489 சொத்துகள்சார்ந்த குற்றங்களும், 1989 வழிப்பறிகளும், 1,678 கொலைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களான பலாத்காரம், பாலியல் தொல்லை, கடத்தல், வரதட்சணை கொடுமை ஆகியவை பற்றி 6,826 வழக்குகளும், பாலியல் வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் 4.254 வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. நீதி மன்றத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த மாதம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுள்ளது. 

நீதிபதிகள் வீட்டிலேயே கொள்ளை நிகழ்வுகள் நடந்துள்ளன. அமைச்சரின் உறவி னரே கொல்லப்பட்ட சம்பவமும் இந்த ஆட்சியிலே நடந்தேறியது உண்டு. இராமனாதபுரம் மாவட்ட நீதிபதி அவர்களின் வீடே தாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கூடங்களும் கொலைக் களங்களாகி விட்ட சம்பவமும் உண்டு. முதியோர், குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு மிகப் பெரிய கேள்விக் குறியாகி விட்டது. கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆட்சியிலே சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்றரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மிக முக்கியமான கொலைகளில் கூட தீவிரப் புலன் விசாரணை மூலம் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.

சட்டம்-ஒழுங்கைச் சரிசெய்து, மக்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டியதை விடுத்து, தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறையை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தி, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவிற்கு இந்த ஆட்சியினரே முழுமுதற் காரணமாக இருந்து வருகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும், நாட்டு நலன் கருதி திர்க்கட்சிகள் எடுத்துரைக்கும் நியாயமான கருத்துகளைக் கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயக மனப்பான்மையும், பக்குவமும் இவர்களுக்குக் கிஞ்சிற்றும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் - கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கூலிப்படையினர் எல்லாம் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி குதுhகலத்துடன் நடமாடும் கோட்டமாகவும்; பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் தங்களுடைய கைவரிசையைக் காட்டும் களமாகவும் தமிழ்நாடு மாறி; பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், மாநிலத்தின் பாதுகாப்புக்குச் சவாலாகவும் இருந்து வருகிறார்கள். இவ்வாறாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிதைந்து, சின்னா பின்னமாகி, உருக்குலைந்திருக்கும் நிலைமையைத் தோற்றுவித்துள்ள அ.தி.மு.க. ஆட்சியினருக்கு இந்தச் செயற்குழு தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் : 6
அதிபர் மாறியும், மீனவர்கள் மீது மாறாத அட்டூழியங்கள். இலங்கையில் தேர்தல் நடைபெற்று அதிபர் மாறியுங்கூட, இன்னமும் தமிழக மீனவர்களின் துயரங்கள் நீங்கிய பாடில்லை. “மீனவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என்ற உறுதிமொழிகள் தான் இந்திய அரசாலும், இலங்கை அரசாலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வருகிறதே தவிர, தமிழக மீனவர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் சென்று மீன் பிடித்துக் கரை சேர்ந்தோம் என்ற நிம்மதி ஏற்படவில்லை. இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றதற்குப் பின், இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நாகை, காரைக்காலைச் சேர்ந்த 5 விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களும் முல்லைத் தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 மீனவர்களும் சிறை
பிடிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், கைது செய்யப்படுவதும், ராஜபக்சே அதிபராக இருந்த போது நடந்ததைப் போலவே நடைபெற்று வருகின்றன.

 எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்களோ, அதற்கு மறுநாளே தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதி விட்டு, அத்துடன் தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டிருந்து விடுகிறார். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசிவிட்டார்கள். எனினும் மீண்டும் வரும் 11-3-2015 அன்று சந்திப்பும் தொடர்கிறது; அதே நேரத்தில் தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் அண்மையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். இலங் கைக் கடற்படையினர் நம்முடைய அந்த மீனவர்களை அடித்துத் தாக்கிய தோடு, அவர்களின் மீன்பிடிச் சாதனங்களையும் கைப்பற்றி கடலிலே  எறிந்திருக்கிறார்கள். அது போலவே குலசேகரப் பட்டினத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடந்த 13ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றிருக் கிறார்கள். கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் அங்கே வந்து இவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையெல்லாம் பறித்துக் கொண்டு, இவர்களை விரட்டியடித்துள்ளார்கள்.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 96 பேரை படகுகளுடன் இலங்கைக் கடற் படையினர் 26ஆம் தேதியன்று கைது செய்திருக்கிறார்கள். மோடி, சிறீசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் செய்தி கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை; காலதாமதம் செய்து வருகிறது.

எனவே, நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும்; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு ஏற்படும் வரையிலாவது தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் இச்செயற்குழு மத்திய, மாநி ல அரசுகளை வற்புறுத்துகிறது. 

தீர்மானம் : 7
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலை! 16-2-2015 அன்று டெல்லியில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஆகிய இருவர் முன்னிலையில் இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. விவசாயம், பாதுகாப்பு, நாளந் தா பல்கலைக் கழகம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒப்ப ந்தங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறிப்பிடத் தக்கது.

 தலைவர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் விளக்கி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு முன் கூட்டியே கடிதம் அனுப்பியிருந்தார். எனினும், இலங்கையில் நடந்த இன அழிப்பைக் குறித்து விசாரிக்க சர்வ தேச அளவில் நம்பகமான சுதந்திரமான விசாரணை பற்றியோ; ஈழத் தமிழர்களுடைய அரசியல் தீர்வுக்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடமும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதைப் பற்றியோ, பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இலங்கை அதிபர் சிறீசேனாவும் விவாதிக்கவில்லை. தமிழக மீனவர் பிரச்சினையைக் கூட அதற்குரிய முக்கியத்துவம் தந்து விவாதிக்கவில்லை.

 இந்தியா இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள பல பில்லியன் உதவித் தொகை சரியாகத் தமிழர்களுக்குச் செலவு செய்யப்பட்டதா என்பது பற்றியும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. இராஜபக்ஷேவை சர்வ தேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும், கச்சத் தீவு பற்றியும் தெளிவான முடிவுகள் மேற்கொண்டதாகச் செய்தி இல்லை. இலங்கையில், தமிழர்கள் பகுதியில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இராணுவத்தைத் திரும்பப்
பெறுவது, தமிழர் நிலங்களைத் தமிழர்களிடம் ஒப்படைப்பது, மீள்குடியேற்றம், மாகாண கவுன்சிலுக்கு அதிகாரங்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும்  தாயகம் திரும்பி அமைதியோடும், கண்ணியத்தோடும் தங்களின் பழைய வாழ்க்கையைத் தொடர்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்தும் மோடியும், சிறீசேனாவும் ஏதும் பேசவில்லை என்று தான் தெரிகிறது.

அது போலவே, ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், பதிமூன்றாவது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று இலங்கை அதிபர் சிறீசேனா வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அடையாளமான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

 ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும், நீண்ட நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கும் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான இந்தப் பிரச்சினைகள் பற்றி பிரதமர் மோடி - அதிபர் சிறீசேனா சந்திப்பின் போது விவாதிக்கப்படவில்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ஈழத் தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும்; பிரதமர் மோடி விரைவில் இலங்கை
செல்லும் போது ஈழத் தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகளை இலங்கையின் புதிய அதிபரோடு விவாதித்து முடிவுகள் காண வேண்டுமென்றும்; இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

 
தீர்மானம் : 8
பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள்! மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற போது, சாதாரண, நடுத்தர
மக்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் ஆட்சி நடத்துவோம் என்று உறுதி கூறினார்கள். தேர்தல் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சலுகை அளிப்போம் என்றார்கள். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் ஏழையெளிய மக்களைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின், 67 சதவிகித மக்களுக்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவு வழங்குவதற்குப் பதிலாக, 40 சதவிகிதம் பேருக்கு மட்டும் உணவுப் பாதுகாப்பு வழங்கி, மானிய அளவை வெகுவாகக் குறைத்து விடலாம் என்று திரு. சாந்தகுமார் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. உரம், பெட்ரோலியப் பொருள்கள் போன்ற மானியத்தைப் பெருமளவுக்குக் குறைத்திட முடிவு செய்திருப்பதைப் போல, உணவுக்கான மானியத்தையும் குறைத்திட மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது. வரிசையாக இப்படி மானியத்தைக் குறைத்து வருவதால், செய்வதால், விவசாயிகளும், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தினரும் தான் பாதிப்புக்காளாவார்கள் என்பதை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

 பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை, தன்னுடைய பொறுப்பிலிருந்து விலக்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றியுள்ள மத்திய அரசு, சமையல் எரிவாயு மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, மானியம் வழங்குவதில் மாற்றம் செய்து வருகிறது. உர மானியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவத் திட்டமிட்டுள்ளது.
 
இந்த ஆண்டு 26ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணத்தை 0.9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அமைச்சர்  உயர்த்தி யிருக்கிறார். இதில் சிமெண்டுக்கு 2.3 சதவிகிதம், நிலக்கரிக்கு 6.3 சதவிகிதம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., மற்றும் இரும்பு உருக்கு ஆகியவற்றுக்கு 0.9 சதவிகிதம், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10
சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்தில் 89 ஒன்றியங்களில் மட்டு மே நடை முறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கல்விக்கான ஒதுக்கீடு ரூ. 51,828 கோடியிலிருந்து ரூ. 39,038 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடு ரூ. 35,163 கோடியிலிருந்து ரூ. 29,653 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி துறைக்கு ரூ. 16,000 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ. 8,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி, தொழிலாளர்கள் இதுகாறும் அனுபவித்து வந்த உரிமைகளைப் பறிப்பது - நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பது போன்ற சாமான்ய மக்களின் வாழ்வுரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

 பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. தேசத்தின் நலனையும், பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்தின் அளவு 48 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்திய அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசு 70
ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பொதுத் துறையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 

பெரிய துறைமுகங் களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னைச் துறைமுகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.  மேலும், இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் என்பது வாரம் ஒரு முறை தொடருகிறது. உதாரணமாக கடந்த 16-2-2015 அன்று தான் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டது. மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 18 பைசா அளவுக்கும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 9 பைசா அளவுக்கும் உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது. இந்த விலை உயர்வினை மார்ச் 1ஆம் தேதியன்றே தலைவர் கலைஞர் அவர்கள் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.

 சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களைப் பாதிக்கும் இத்தகைய கடுமையான நடவடிக் கைகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு முற்றுப்புள்ளி வைத்து, தேர்தலுக்கு முன்பு தாங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முன் வர வேண்டுமென்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் இந்தச் செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
 
தீர்மானம் : 9
காவேரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும்! காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவேரியில் வரும் தண்ணீரை நான்கு மாநிலங்களுக்கிடையே ஒவ்வொரு மாதமும்; ஏன்? ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பிரித்து வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் “காவேரி மேலாண்மை வாரியம்”என்ற அமைப்புக்குக் காவேரி நடுவர் மன்றம் வழங்கியுள்ளது. இந்த மேலாண்மை வாரியத்திற்கு வழிகாட்டி நெறிகளை/அறிவுரைகளை வழங்கு வதற்காக, காவேரி ஒழுங்கு முறைக் குழு என்ற ஒரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

இந்த இரு அமைப்புகளும் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு 20-2-2013 அன்று அரசு கெஜட்டில் வெளியிட்டது. இந்தத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் “காவேரி மேலாண்மை வாரியத்தையும் - காவேரி ஒழுங்கு முறைக் குழுவையும்” மத்திய அரசு 19-5-2013க்குள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை. இது குறித்த அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று 8-4-2013 அன்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

10-5-2013 அன்று ஒரு தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியது. அதாவது, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசுக்கு காலக் கெடுவும், அறிவுறுத்தலும் செய்யாமல், ஒரு அதிகாரமற்ற “காவேரி  மேற்பார்வைக் குழு”என்ற ஒரு குழுவை அமைக்க அறிவுறுத்தியது உச்ச நீதி மன்றம்.

இந்தக் காவேரி மேற்பார்வைக் குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. சட்ட அங்கீகாரமும் கிடையாது. எந்த மாநிலத்தையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் கிடையாது. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே சொல்லி யிருக்கிறார். 3-6-2014ஆம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு விண்ணப்ப மனுவினை அளித்தார். அந்த மனுவில் 5ஆம் பக்கத்தில்,  என்று குறிப்பிட் டிருக்கிறார்.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி“காவேரி மேலாண்மை வாரியமும்” - “காவேரி ஒழுங்கு முறைக் குழு”வும் அமைக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தலாமே தவிர அந்தத் தீர்ப்பை தற்காலிகமாகக் கூட மாற்றுவதற்கு உச்ச நீதி மன்றத்திற்கே அதிகாரம் கிடையாது. ஆனால், உச்ச நீதி மன்றம் நடுவர் மன்றம் சொல்லாத
“காவேரி மேற்பார்வைக் குழு”வை எப்படித் திணித்தது என்று விளங்கவில்லை.

இத்தகைய தீர்ப்பை உச்ச நீதி மன்றம் சொன்ன போது ஜெயலலிதா அரசு சார்பில் அந்த நீதி மன்றத்தில் இருந்த தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி கர்நாடகா மாநிலத்தில், அங்குள்ள முதலமைச்சர் அங்கேயுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்கிறார், அவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிடுகிறார், அது போல தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து ஏன் பேசக் கூடாது என்று தலைவர் கலைஞர் கேட்டதற்கு; பாரதப் பிரதமரிடம் ஜெயலலிதா நேரில் கோரிக்கை அளித்திருப்பதாகவும், பிரதமர் கனிவுடன் கேட்டு ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்றும், தமிழகத்திற்கு உதவும்  எண்ணத்தில் பாரதப் பிரதமர் இருக்கிறார் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவிரி நடுவர் மன்றத்தின் அம்சமாகும் என்றும், அதனைச் செயல்படுத்த மத்திய அரசிற்குச் சிறிய கால அவகாசம் தேவைப்படும் என்றும் ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்தார். அதற்குப் பிறகு மூன்றே நாளில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால், 10ஆம் தேதிய அறிக்கையில் பிரதமருக்குக் கால அவகாசம் தர வேண்டுமென்று அவர் எழுதியதை அவரே மறந்து விட்டார் என்பது தெரிகிறது.

 கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், 14-6-2014 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக விவசாயிகளைத் துயரத்திலிருந்து காப்பாற்றிட காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டு\ மென்று கேட்டுக் கொண்டார். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மூலம் இடைக்காலத் தடை பிறப்பிக்கப்படவில்லை என்பதாலும், நிலுவையில் உள்ள அந்த வழக்குகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குத் தடையாக இருக்காது என்பதாலும் உடனடியாக மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டு மென திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது. 

தீர்மானம் : 10
மத்திய அரசு கொண்டு வரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 2014ஐ கைவிடுக! மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் மோட்டார் வாகனத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய இரண்டு சட்டங்களும் இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன. இதன் மூலம் வாகனப் பதிவு, புதுப்பித்தல், ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவைகளும், அரசின் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் இயங்குவதற்கு வேண்டிய பாதுகாப்பு மற்றும் அனைத்து விதிகளும் இவைகளில் அடங்கியுள்ளன. இதற்கு மாற்றாக “சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் - 2014” எனும் பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கின்றது. இதனை இந்தியாவில் உள்ள  ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் மாநில அரசுகளும் எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனாலும், இச்சட்டத்தின் மூலம், மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொள்கிறது. மோட்டார் வாகனத் துறை செய்து வந்த அனைத்தையும் தனியார் மயமாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் 53 அரசு பொது போக்குவரத்து அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவைகளை அழிக்க முயற்சிப்பதின் மூலம், அதில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உண்டாகும். இன்று அரசு பொதுபோக்குவரத்துத் துறை மூலம் மக்கள் குறைந்த செலவில் பயணம் செய்யும் சலுகைகள் பறி போகும்.

மாநில அரசுகள் வசூல் செய்து வருகின்ற வாகன வரி போன்றவற்றை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதால், மாநில அரசுகளின் உரிமைகள் பறி போகக் கூடிய சூழல் இச்சட்டத்தில் உள்ளது. மேலை நாட்டு நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு போக்குவரத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்காமல், இச்சட்டத்தைக் கொண்டு வருவதால்; ஒட்டுமொத்தமாக அனைத்துவகை வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களையும் பாதிக்கக்
கூடிய தண்டனை முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அனைத்து ஓட்டுநர்களும் சிறைச்சாலைக்குச் செல்லக் கூடிய அபாயம் இக்கொடுமையான சட்ட முன்வடிவில் உள்ளது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள இச்சட்ட முன்வடிவை கைவிட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 

தீர்மானம் : 11
முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக! பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாகச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர முயற்சிப்பதுடன், நூற்றாண்டு காலமாகத் தொழிலாளர்கள் போராடி, ரத்தம் சிந்தி பெற்ற பல சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையெல்லாம் புறந்தள்ளும் வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை இந்திய அரசு திருத்த முயற்சிக்கிறது.

இந்திய தொழிலாளர்களின் வரப்பிரசாதமாகிய வருங்கால வைப்பு நிதி  தொழிலாளர் காப்புறுதித் திட்டம்  இரண்டையும் விருப்பம் போல் மாற்றம்  செய்து கொள்ளலாம் என நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் மூலம் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிலை மிக மோசமாக பாதிக்கக் கூடிய அபாயம், தேசிய அளவிலான சேமிப்பு என்பது இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படும். தொழிலாளர்களுக்கு விரோதமான மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளோடு கொண்டு வந்து உழைக்கும் மக்களைப் பாதுகாத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் : 12
கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை கொடுத்திடுக! அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3000 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட மாநில ஆதார விலை ரூ.650ஐ ஆண்டொன்றுக்கு ரூ.100 வீதம் குறைத்து வந்துள்ளது. இந்தக் குறைக்கப்பட்ட தொகையையும் 2 ஆண்டுகளாக தனியார் ஆலைகள் வழங்காமல் டன் ஒன்றுக்கு ரூ.2,650/- பதிலாக ரூ.2,200/- மட்டுமே வழங்கி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் கூடி வரும் எரிபொருள் விலை, உரங்களின் விலை, உற்பத்திக்கான செலவுகள் இவை அனைத்தையும் ஈடுகட்டுவதற்கு ஏற்ப தனியார் ஆலைகள் மூலம் கிடைக்க வேண்டிய கரும்புக்கான விலை கிடைக்காமல், கிடைக்கின்ற தொகையும் கட்டுப்படியாகாத சூழலில், நாளுக்கு நாள் கரும்பு உற்பத்தி குறைந்து வருகிறது. சர்க்கரை ஆலைகளும் அரசின் ஆதரவு இல்லாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஆலைகளை மூடுகின்ற அபாய நிலை உருவாகியிருக்கிறது. இவற்றை அரசு கண்டு கொள்ளாமலிருப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக சர்க்கரை மற்றும் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமெனவும், கரும்பு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்வகைகளில் சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,410/- என்றும், சன்ன ரகத்திற்கு ரூ.1,470 என்றும் வழங்கி வருகிறது. தற்போதுள்ள நெல் உற்பத்திக்கான செலவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,000/-க்கு குறையாமல் நெல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென இச்செயற்குழுகேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment

Labels