வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/03/2015

பெரம்பலூர் மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை தொடங்காவிட்டால் மறியல் போராட்டம் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!


 


நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிஒதுக்கீடு செய்து மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை தொடங்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், மாவட்ட அவை தலைவர் நடராஜன் தலைமையில், துறைமங்கலத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் குன்னம்ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில கொள்கை பரப்பு அணி துணை செயலாளர் பெருநற்கிள்ளி, வக்கீல் ராஜேந்திரன் பேசினர்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தி.மு.க.வை வளர்க்க வேண்டும்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதனை கருணாநிதியும், ஸ்டாலினும்தான் தீர்மானிக்க முடியும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக என் மீது எவராலும் குற்றம் சாட்ட முடியவில்லை. என்மீதான வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். நாம் அனைவரும் வளர்ந்து தி.மு.க.வை வளர்க்க வேண்டும். சாதாரண சாமானிய தொண்டனுக்கும் தி.மு.க.வில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அண்ணா வழியில் வாழ்ந்து மக்களுக்கு தேவையானதை, மக்கள் விரும்புவதை அவர்களுடன் இருந்து செயல்படுத்தி மக்கள் அங்கீகாரத்தை பெற அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, எறையூர் மதியழகன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டம்

கூட்டத்தில், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அரசு நஷ்டஈடு வழங்காவிட்டால் மாவட்ட விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை செயல்படுத்தாத அ.தி.மு.க அரசை இக்கூட்டம் கண்டிப்பதுடன், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிஒதுக்கீடு செய்து மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபடுவது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலஆண்டுகளாக தொடர்திருட்டு, கொள்ளை வழிப்பறி, சம்பவங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுக்க தவறிய மாவட்ட போலீஸ் நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட போலீஸ் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காலையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட சுமார் 230 பேர் ரத்த தானம் செய்தனர்.



 

No comments:

Post a Comment


Labels