வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/02/2015

பூ சுற்றும் கதை எவ்வளவு நாளைக்கு? :
 கலைஞர் 


திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்:

 ’’தமிழகச் சட்டப்பேரவையில் இன்றைய முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்ட காலக் கொள்முதல் வாயிலாக 4,640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது என்று பொத்தாம் பொதுவாக, குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டும் புள்ளி விபரங்கள் இல்லாமல் அறிவித்திருக்கிறார்.

17-2-2015 அன்று இந்த அரசின் சார்பாக ஆளுநர் ஆற்றிய உரையில், பக்கம் 25இல், “மொத்தமாக
மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் கடந்த நான்காண்டுகளில் 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது” என்று கூறப் பட்டுள்ளது. எதிர்க் கட்சியான தே.மு.தி.க. எம்.எல்.ஏ., திரு.மோகன்ராஜ் இது பற்றிக் கூறும்போது, “தகவல் அறியும் சட்டத்தின்” அடிப்படையில் மின் உற்பத்தி பற்றி விவரம் கேட்டதாகவும், அதற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின் உற்பத்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு புதிய உற்பத்தித் திட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றி, அதன் மூலம் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய வில்லை என்றுஆதாரங்களோடு ஏடுகளும் எழுதி யிருக்கின்றன. ஆனாலும் உண்மை என்ன என்ப தைக் கூற ஆட்சியினர் இதுவரை முன்வரவில்லை.

15-9-2014 அன்று கோவையில் பேசிய செல்வி ஜெயலலிதா, “கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,793
மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில், 4,640 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப் பட்டதாகத் தெரிவித் திருப்பது பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 21-2-2015 அன்று விடுத்துள்ள அறிக்கையில், “இவை எதுவுமே அ.தி.மு.க. அரசால் செயல்படுத்தப் பட்டவை அல்ல. முந்தைய தி.மு.க. ஆட்சியிலும், மத்தியப் பொதுத்துறை மின் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங் களின் பயனாகத்தான் இந்தக் கூடுதல் மின்சாரம் கிடைத்தது” என்று விளக்கியிருக்கிறார். 

அடுத்த சில மாதங்களில் 2,163 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று பன்னீர் செல்வம்  தெரிவித்திருப்பது பற்றிக்கூட, அதற்கும் காரணம் அ.தி.மு.க. ஆட்சியா ளர்கள் அல்ல என்பதே உண்மை என்றும், பன்னீர் செல்வம் பட்டியலிட்டுள்ள திட்டங்களில் பெரும்பா லானவை 2010ஆம் ஆண்டுக்கு முன்பே (தி.மு.கழக ஆட்சியில்) அறிவிக்கப்பட்டவையாகும் என்றும் டாக்டர் ராமதாஸ் பதிலளித்திருக்கிறார். மேலும் அவருடைய அறிக்கையில், “அழும் குழந்தைக்கு வாழைப் பழத்தைக் காட்டி அமைதிப்படுத்துவதைப் போல தமிழகத்தில் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இத்தகைய புள்ளி விவரங்களை அ.தி.மு.க. அரசு கூறிவருகிறது. பெரிய அளவில் மின் திட்டங்களை அறிவிப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு, அதைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்” என்றும் விளக்கியிருக்கிறார். மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது பேச்சில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24-1-2013 அன்று வழங்கப் பட்டது.

கொள்முதல் கட்டுமானப் பணிக்கான தொழில் நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் 15-3-2013 அன்று
திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 12-8-2013 அன்று விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 27-2-2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது” என்றும் சொல்லியிருக்கிறார். 

மத்திய அரசு 24-1-2013 அன்றே அனுமதி வழங்கி, இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் மின் உற்பத்தி தொடங் கப்படாததற்கு என்ன காரணம்? தாமதத்திற்கு இந்த அரசுதானே பொறுப்பு? இந்தத் திட்டம் பற்றி 29-3-2012 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்கள் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமை யிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது. 

இந்த அனல் மின் திட்டம் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். ஆனால் நேற்றையதினம் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அதே சட்டப் பேரவையில் இந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்தான் தற்போது தொடங்கி நடந்து வருவதாகச் சொல்கிறார் என்றால், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் எப்படி இந்தத் திட்டம் மின் உற்பத்தியைத் தொடங்கும்?

ஜெயலலிதா 110வது விதியின் கீழ் பேரவையில் படித்தது பொய்யான தகவல் தானே? மக்களைத் திசை திருப்பி ஏமாற்றும் செயல் தானே? அதைத்தானே இன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் தெளிவாக்கி, “ஜெயலலிதாதான் திட்டத்தை அறிவித்தார், அது இப்போதுதான் கட்டுமானப் பணியைத் தொடங்கு கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதிலே இன்னும் வேடிக்கை, ஜெயலலிதா, 2015இல் இந்தத் திட்டம் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியிட்ட அறிக்கையில், எண்ணூர் அனல் மின் திட்டம் பற்றிக் குறிப்பிட்டு, அந்தத் திட்டம் 42 மாதங்களுக்குப் பிறகு 2018இல் மின் உற்பத்தியைத் தொடங்குமென்று தெரிவித்தார். இன்றைய முதலமைச்சரோ, நமக்கேன் வம்பு என்று எப்போது இந்தத் திட்டம் தொடங்குமென்றே தெரிவிக்காமல், தற்போதுதான் கட்டுமானப் பணி களை நிறுவனம் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். உண்மையைச் சொன்னால்தானே ஒரே மாதிரி யாகச் சொல்ல முடியும்? பொய் சொல்லும்போது முரண்பாடுகள் எழுவது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே? மின்சாரத்தைப் பொறுத்தவரையிலும் கூட, அ.தி.மு.க. ஆட்சியினர் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள். 

மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், 1,600 மெகாவாட் மின் திறன் கொண்ட உப்பூர் மின் திட்டத் திற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்
28-5-2012 அன்று பரிந்துரை செய்தது என்றும், இத் திட்டத்திற்கான திட்ட விளக்க அறிக்கை ஜனவரி 2014
அன்று இறுதி செய்யப்பட்டது என்றும், 2019-2020இல் இந்தத் திட்டம் இயக்கத்திற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார். 

2012இல் மத்திய அரசு அனுமதித்த திட்டம், இன்னும் நான்காண்டுகளுக்குப் பிறகு, 2019-2020இல் இயக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் கூறுகிறார் என்றால், அ.தி.மு.க. அரசுக்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ள முடிகிறதா அல்லவா? அது மாத்திரமல்ல; 29-3-2012 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், “1600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டத்திற்கான முன் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு விட்டன.

 இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு இறுதிக் குள் செயல்பாட்டிற்கு வரும்” என்று பலத்த வரவேற்புக் கிடையே படித்து ஏடுகள் எல்லாம் அதனை கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டன. ஆனால் ஜெயலலிதா அறிக்கை படித்து மூன்றாண்டு காலத்திற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்த உப்பூர் மின் திட்டம் 2019- 2020இல் இயக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாக பேரவையில் சொல் கிறார் என்றால், யாரை ஏமாற்றுவதற்காக இப்படி யெல்லாம் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி நாடகம் நடத்துகிறார்கள் என்று தானே கேட்க வேண்டி யிருக்கிறது.

25-10-2013 அன்று சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, “உறுப்பினர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை, வெகு விரைவில், மிக விரைவில், தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப் படும் என்பதைத் திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைச் சாதித்தே தீருவோம்” என்றார். அதற்கு அடுத்த மாதமே, 28-11-2013 அன்று ஏற்காடு இடைத் தேர்தலில் உரையாற்றிய ஜெயலலிதா, “மத்திய அரசினால்தான் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது; அந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறையைச் சரி செய்து, மின் வெட்டே இல்லாத ஒளிமயமான சுபீட்சமான நிலைமையை விரைவில் உருவாக்கியே தீருவேன்” என்றார். ஜெயலலிதா சொன்ன எதுவும் நிறைவேற்றப்பட வில்லை; ஆனால், நாட்டு மக்களை ஏமாற்றியதும், ஏடுகளின் மூலம் விளம்பரம் கிடைத்ததும் அவருக்கு வரவுதானே?

சூரிய ஒளி மின்சாரம் பற்றியும் பேரவையில் பன்னீர்செல்வம், 2011ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற பின் 112 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள், தனியார் மூலம் நிறுவப்பட்டு, அந்த மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் சூரிய ஒளி மின்சாரம் பற்றி இந்த ஆட்சியினர் என்ன கூறினார்கள் தெரியுமா? சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையிலே இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார். 

சூரிய சக்தி மூலம், 2013இல் ஆயிரம் மெகாவாட், 2014இல் ஆயிரம் மெகாவாட், 2015இல் ஆயிரம் மெகாவாட் என்று மூன்றாண்டுகளுக்குள் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாக பேரவையிலேயே அறிவித்தார். அவ்வாறு 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்ததில்தான் தற்போது 112 மெகாவாட் சூரிய ஒளி மின் சக்தி கிடைப்பதாக பேரவையிலே பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார் என்றால், எப்படி யெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறு சாகசம் செய்து, “வானத்தை வில்லாக வளைப்போம், மணலைக் கயிறாகத்  திரிப்போம்” என்று இயலாதவற்றைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களான வட சென்னை நிலை 2, மேட்டூர் நிலை 3, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின் கழகமும் கூட்டு முயற்சியில் தொடங்கிய வல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய தூத்துக்குடி ஆகிய நான்கு திட்டங்களின் மூலம், 2012ஆம் ஆண்டு இறுதிக்குள் 3,228 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்களே, அந்த நான்கு திட்டங்களை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. ஆட்சி யினர் ஒழுங்காகத் தேவையான அக்கறை காட்டி யிருந்தாலே, மின் வெட்டு என்ற நிலைமையே தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்காது. ஆனாலும், தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப் பட்ட வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 1,200 மெகாவாட், வல்லூர் 1,000 மெகாவாட், மேட்டூர் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் என்று இந்த புதிய அனல் மின் நிலையங்களிலிருந்து 2013ஆம் ஆண்டு முதல் கூடுதலாக சராசரியாக 2,000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த மின் தடை அறிவிப்பை 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விலக்கிக் கொள்வதாக அறிவித் தார்கள். ஆனால் அதன் பிறகு காற்றாலை மின் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அதன் காரணமாக மின் தடை மீண்டும் நடைமுறைக்கு வந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கு 20 சதவிகிதம் மின்வெட்டு செய்யப்பட்டது.

இன்றைய தினம் “தினமலர்” வெளியிட் டுள்ள செய்திப்படி, நேற்றைய மின் தேவை 13,170 மெகாவாட்; ஆனால் மின் உற்பத்தி 12,170 மெகாவாட் தான். அதனால் 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை. இதன் காரணமாக மாநிலம் முழுவதும், குடியிருப்பு களுக்கு அறிவிக்கப்படாமல், இரண்டு முதல், மூன்று மணி நேரம் வரை மின் தடை செய்யப்பட்டது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால், மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் பல மணி நேரம் மின்தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த அபாயத்தை மறைக்க என்னென்ன அறிவிப்பை அ.தி.மு.க. ஆட்சியினர் செய்யவிருக் கிறார்களோ?

25-4-2013 அன்று ஜெயலலிதா சட்டப் பேரவை யில் 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை படித்தார். மீண்டும் 30-4-2013 அன்று, முதலில் படித்த அறிக்கைக்கு விளக்க உரை என்று ஒன்றைப் படித்தார். அதில் நீலகிரி மாவட்டத் தில் 2000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தார். என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்?  அறிவிப்பு களைக் கேட்டதும் அன்று “ஆகா” “ஓகோ” வென விழிகளை அகலத் திறந்தவர்கள், இன்று வாய் புதைத் தல்லவா நிற்கிறார்கள்!

இந்த அறிவிப்புகளையெல்லாம் யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்; நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்பவர்கள் இந்த நானிலத்தில் உண்டோ? என்ற எண்ணத்தோடுதான் தமிழகச் சட்டப்பேரவையில் இன்றைய முதலமைச்சர், “மின் பற்றாக்குறை வெகுவாகக் குறைக்கப்பட்டு மின் தேவையை தன்னிறைவை எய்தும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறி யிருக்கிறார். 

இதே கதையைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதல்வர் பன்னீர் செல்வமும், இந்தத் துறை அமைச்சர் விசுவநாதனும் கடந்த மூன்றரை ஆண்டுக் காலமாக திரும்பத் திரும்பக் கூறித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, அவர்களின் காதுகளில் பூ சுற்றும் காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதே கற்பனைக் கதையை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டுமோ? அ.தி.மு.க. ஆட்சியினர் இருக்கும் வரை கதையும் முடியாது; மின்வெட்டும் தீராது; வேதனையும் மறையாது!’’

No comments:

Post a Comment


Labels