வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/02/2015

ஏன் இந்த இடைத் தேர்தல்? நம்பிக்கை வீண் போகலாமா? கலைஞர் கடிதம்!

தி.மு.க. தலைவர் கலைஞர் 04.02.2015 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

13-2-2015 - திருவரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல்! ஏன் இந்த இடைத் தேர்தல்? அந்தத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்தவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம், நான்காண்டு சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்த காரணத்தால், அவர் வகித்த முதலமைச்சர் பதவியும், ஏன் திருவரங்கம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற தகுதியும் காலியான நிலையில், அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் திணிக்கப்பட்டு நடைபெறுகிறது. அந்தத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனையே, தற்போது அந்தக் கட்சிக்கு மீண்டும் வாக்களித்து ஏமாறக்கூடாது என்பதற்கான தக்க அடிப்படையாக அமைந்திருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்று, தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படுவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், “என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல். சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால் விளைந்திட்ட இடைத்தேர்தல்” என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பைத்தான் ஜெயலலிதா இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள்தான் கவனிக்க வேண்டும். அவருக்குக் கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல; அவரே தன்னிச்சையாகத் தேடிக் கொண்டதே தவிர வேறல்ல!

திருவரங்கம் தொகுதியில் கழகத்தின் சார்பில் நம்முடைய உடன்பிறப்புகள் எந்த அளவுக்கு ஆக்கப் பூர்வமாக ஆர்வத்தோடு பணியாற்றுகிறார்கள் என்பதை அன்றாடம் நான் அறிந்து வருகிறேன். பெரியவர் பக்தவத்சலம் அவர்களாலேயே, “சிங்கிள் டீ குடித்து விட்டு தேர்தல் பணியாற்றக்கூடிய கழகத் தோழர்கள்” என்ற பாராட்டுக்கு உரியவர்கள் அல்லவா நமது உடன்பிறப்புகள். அந்த அளவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் கழகத்தினர் ஓடியாடிப் பணியாற்றுவதை அறிந்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரேயொரு தொகுதி இடைத்தேர்தல் என்பதாலும், என்னுடைய உடல்நிலை காரணமாகவும் நான் நேரடியாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குவர வேண்டாமென்று கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும், கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி, என்னை சிரமப்படக் கூடாது என்று கூறித் தடுத்து விட்டார்கள். நான் அங்கே வரவில்லை என்றாலும், என்னுடைய நினைவு முழுவதும் இந்த இடைத்தேர்தலைப் பற்றியேதான் இருக்கும் என்பதை நீ நன்றாகவே அறிவாய்! நான் நேரில் வராவிட்டாலும், நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் வருகிறார்; தேர்தல் பணிகளை பொருளாளர், தம்பி ஸ்டாலினே நேரில் வந்து தொடங்கி வைத்திருப்பதோடு, தேர்தல் பணி களைத் தொடர்ந்து ஆய்வு செய்து முடுக்கி விட்டு வருகிறார். முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன் அங்கே வந்திருக்கிறார்; துணைப் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ. பெரியசாமி அங்கே பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து மகளிர் அணிச் செயலாளர் கவிஞர் கனிமொழி, எம்.பி., தலைமையில் மகளிர் அணியினர் பிரச்சாரத்தில் அங்கே ஈடுபடவிருக்கிறார்கள். மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இடைத் தேர்தல் பணிகளை முறையே ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கழகத்தைச் சேர்ந்த கலையுலகத்தினர் திருவரங்கத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். பொருளாளர் தம்பி ஸ்டாலின் இறுதிக் கட்டத்திலும் அங்கே பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.திருவரங்கம் தொகுதி இடைத் தேர்தல் பொறுப்பினை ஏற்றிருக்கும் தேர்தல் பணிக்  குழுத் தலைவர், தம்பி கே.என்.நேரு இரவு பகல் பாராமல் பம்பரமாகச் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருவதோடு, அவருக்குத் துணையாகப் பணியாற்றிடும் குழுவினரை யும் நன்கு வேலை வாங்கி வருகிறார் என்பதை பலர் வாயிலாக நான் அறிந்திருக்கிறேன். மற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுபவப்பட்டவர்களும், புதிதாகப் பொறுப்பேற்றிருப்போரும் திருவரங்கத்திலேயே தங்கி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கும்செய்திகளும் எனக்கு அவ்வப்போது வந்து கொண்டே உள்ளன.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அங்கே படை யெடுத்து தாங்கள் தவறான வழியில் சம்பாதித்துக் குவித்திருக்கும் ஊழல் பணத்தை வாரி இறைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. திருவரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பேட்டைவாய்த்தலை கிராமத்தில், தென்னந் தோப்பில் அ.தி.மு.க. சார்பில் மிகப் பெரிய சமையல் அறை, உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு, அங்கே பிரியாணி மற்றும் பல்வேறு வகையான உணவு தயாரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வாக்காளர் களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுவது பற்றியும், அதுபற்றி காவல் துறையினரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் தேர்தல் ஆணையத்திடம் கழகத்தின் சார்பில் புகைப்பட ஆதாரங்களோடு புகார் தரப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சந்தீப் சக்சேனா, இந்தப் புகார் பற்றி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்கும்படி திருச்சி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், வாக்காளர் களுக்கு உணவு வழங்கியிருந்தால், அது குற்றம் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் திருச்சி மாவட்டக் கலெக்டர் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்புதான் மாற்றப்பட்டு அங்கே பொறுப்பேற்றுள்ளார். அவர் ஏற்கனவே, தற்போது முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் எல்லாம் திருவரங்கத்தில் முகாமிட்டிருக்கின்ற காரணத் தால் தலைமைச் செயலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று ஏடு களிலே செய்திகள் வந்துள்ளன. பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, அண்ணா நினைவிடத்திற்கு முதலமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச்சர்களும் வரவில்லை. அந்த நாளில் ஆண்டுதோறும் கோவில் களில் நடைபெறும் சமபந்தி போஜனமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. இன்னும் இடையிலே உள்ள இந்த ஐந்தாறு நாட்களில் ஆளுங்கட்சியினரும், அமைச்சர் களும் என்னென்ன வன்முறைச் சேட்டைகளில் அங்கே ஈடுபடுவார்களோ? அமைச்சர்கள் தேர்தல் பணியிலே ஈடுபட்டிருப்பதால், அந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தரப்பட்ட கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத தால், நம்முடைய கழக வேட்பாளர் தம்பி ஆனந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கழக வழக்கறி ஞர்கள் கிரிராஜன், நீலகண்டன், பரந்தாமன் ஆகியோர் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. கழகத் தின் சார்பில் வாதாடிய நம்முடைய வழக்கறிஞர் தம்பி வில்சன், “வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இறந்தவர்கள், போலி வாக்காளர் கள், ஒரே வாக்காளர் பெயர் இரண்டு முறை வருவது என்பது போன்ற முறைகேடுகள் பரவலாக உள்ளன. போலி வாக்காளர் பட்டியலை நீக்கி விட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, போலி வாக்காளர்களை நீக்கி, திருத்தப்பட்ட கூடுதல் வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு இரண்டு நாட் களுக்கு முன்பு வெளியிட வேண்டுமென்று உத்தரவிட் டிருக்கிறது. கழக வழக்கறிஞர்கள் தேவராஜ், முத்துக்குமார், அருண், அனிதா ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கிறார்கள்.

ஜனநாயக முறைக்கு எதிராக இந்த ஆட்சியினர் தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு ஓர் எச்சரிக்கை, அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டாமா? அதற்காகத் தான் இந்த இடைத் தேர்தல்! இந்தத் தேர்தலிலும் அவர்களையே வெற்றி பெறச் செய்து விட்டால், தங்களை எதிர்க்க யாருமே இல்லை என்ற அகம்பாவத்தோடும், ஆணவத்தோடும் மேலும் மேலும் மக்கள் விரோத - ஜனநாயக விரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு ஆட்டம்போட நேரிடும்.

அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்தான் என்ன? மின் கட்டணம் உயர்ந்து விட்டது - அந்தமின்சாரமும் எப்போது வரும் என்று தெரியாது - ஆட்சிக்கு வந்த நாள் முதல் இனிமேல் மின்
வெட்டு இருக்காது என்ற வாய்ச் சவடால்தான் பல முறை கூறப்படுகிறதே தவிர, ஒழுங்கானமின்சாரத்திற்கு வழியில்லை. அதன் காரணமாக தொழிற்சாலைகள் எல்லாம் மூடு விழா நடத்திக்கொண்டிருக்கின்றன. “நோக்கியா” போய் விட்டது, “பாக்ஸ்கான்” போய் விட்டது, அதைப் பற்றிக்கவலைப்படுகின்ற ஆட்சி தமிழகத்திலே கிடையாது. பால் விலை உயர்வு. ஆவின் பால்நிறுவனத்திலோ ஊழலோ ஊழல். ஆளுங்கட்சியே அதை உணர்ந்து அதற்குப் பொறுப்பேற்ற
அமைச்சரையே வீட்டுக்கு அனுப்பி விட்டது என்றால், எந்த அளவுக்கு ஊழல் அங்கேநடைபெற்றது என்பதை அ.தி.மு.க.வே ஒப்புக் கொண்டு விட்டது என்றுதானே பொருள். பேருந்துக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு. கடந்த மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ 85ரூபாய்க்கு விற்றது, தற்போது 95 ரூபாய்; உளுத்தம் பருப்பு கடந்த மாதம் கிலோ 80 ரூபாய், இந்தமாதம் 90 ரூபாய்; பாசிப் பருப்பு கடந்த மாதம் 105 ரூபாய், இந்த மாதம் 115 ரூபாய்; கடலைப் பருப்புகடந்த மாதம் 45 ரூபாய், இந்த மாதம் 55 ரூபாய்; மலைப் பூண்டு 120 ரூபாயிலிருந்து150 ரூபாயாகவும், நாட்டுப் பூண்டு 90 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.சிமெண்ட் விலை கேட்கவே தேவையில்லை. “அம்மா” சிமெண்ட் என்றெல்லாம் அறிவித்தார்கள். கோவையில் கடந்த நவம்பர் மாதம் ஒரு மூட்டை சிமெண்ட் 330 ரூபாய் முதல் 340 ரூபாய் வரைவிற்றது. கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதியன்று ஒரு மூட்டை சிமெண்ட் விலை370 ரூபாய், 12ஆம் தேதி 375 ரூபாய், 26ஆம் தேதி 380 ரூபாய், ஜனவரி 3ஆம் தேதி 385 ரூபாய்என்று படிப்படியாக உயர்ந்து, நேற்று முன்தினம் முதல் சிமெண்ட் மூட்டைக்கு 10 ரூபாய்உயர்த்தப்பட்டு, 395 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனைக் கடைகளில் 400ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு அனுமதிஇல்லாமல் மணல் கடத்திச் சென்ற 258 லாரிகளை மாநில எல்லையான அத்திப்பள்ளியில்,கர்நாடக வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்திருக்கிறார்கள். தமிழகஅதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டது கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள்இறந்து விட்டார்கள். இதோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை அருகே சிப்காட்தொழிற்சாலை அருகில் பத்து தொழிலாளர்கள் கழிவு நீரில் மூழ்கிச் செத்திருக் கிறார்கள்.முன்னாள் முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த போது நாளேடுகளில் அன்றாடம் தன் பெயரில்அறிவிப்பு வர வேண்டுமென்பதற்காக, பேரவையில் ஒவ்வொரு நாளும் 110வது விதியின் கீழ் ஏதோஒரு அறிக்கையைப் படித்தார். அந்த அறிக்கையிலே அறிவித்த திட்டங்கள் எல்லாம்என்னவாயிற்று? பேரவையிலே அதுபற்றிக் கேட்ட போது, தற்போது முதல்வராகப்பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு சில அறிவிப்புகளைப் பற்றி மட்டும் பதில் அளித்தாரேதவிர எஞ்சிய அறிவிப்புகள் என்னவாயின என்று கூறவில்லை. சட்டம், ஒழுங்கு சந்திக்குச் சந்திசிரிப்பாய்ச் சிரிக்கிறது. செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொள்ளை நடக்காத நாளேஅ.தி.மு.க. ஆட்சியில் கிடையாது. இன்று ஒரு நாளில் மட்டும் வெளிவந்த செய்திகளைப் பார்த்தால்- “தினமலர்” நாளேட்டிலேயே “நேற்றைய செயின் பறிப்பு நிலவரம்” என்ற தலைப்பில் கட்டம் கட்டி,பட்டியலிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் அந்தப் பத்திரிகையில், “70 அலைபேசிகள்,அரிசி மூட்டை, 10 பேன்ட்டுகள் திருட்டு” என்ற தலைப்பில் ஒரு செய்தி! “தினமணி” இதழ்,“ கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு” என்ற தலைப்பில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.“தினத்தந்தி” நாளேடு, “சேலையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணைகட்டிப்போட்டு பத்து சவரன் நகை கொள்ளை” என்ற தலைப்பில், 18 சம்பவங்களை வரிசையாகத்தொகுத்து மூன்று பத்தியாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இது தவிர, மேலும் அந்த இதழில்“மயக்க மருந்து தெளித்து வியாபாரியிடம் ஒன்பதரை லட்சம் ரூபாய் பறிப்பு” என்ற செய்தியும்,“நான்கு கோவில்களில் உண்டியல் உடைப்பு” என்ற செய்தியும், “அயனாவரத்தில் கடைகளில்பூட்டை உடைத்து துணிகரக் கொள்ளை” என்ற செய்தியும், “குரோம்பேட்டையில் பெண்என்ஜினீயரிடம் நகை பறிப்பு” என்ற செய்தியும் அ.தி.மு.க.வின் ஆட்சித் திறமை பற்றி பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. நேற்றையதினம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கடற்கரை சாலையில் காலையில்“வாக்கிங்” சென்றபோது கொள்ளையர் அவரைப் பிடித்துத் தள்ளி கையில் இருந்த“செல்போனை”ப் பிடுங்கிச் சென்றிருக்கிறார்கள்.

ஆவடி, திருமுல்லை வாயல், அண்ணா நகரில் 42 வயதான அன்னலதா என்பவரை வீடுபுகுந்து கொள்ளையர் தாக்கி, அதனால் கோமா நிலைக்குச் சென்ற பெண் நினைவுதிரும்பாமல் நேற்றிரவு இறந்திருக்கிறார். எழும்பூர் நீதிமன்றத்திலேயே சில நாட்களுக்குமுன்பு வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கும்முடிப்பூண்டி அருகே நேற்றைய தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் லட்சுமியும், மகள் நிரோஷாவும் வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகமே பாதுகாப்பற்ற பூமியாக மாறி வரும் இந்தலட்சணத்தில்தான் தமிழகத்திலே அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை! பாவம், அவர்முதலமைச்சராகப் பொறுப்பேற்று 125 நாட்கள் ஆன போதும், இன்னமும் முதலமைச்சர் அறைக்குச்செல்லவே முடியவில்லை, ஏற்கனவே இருந்த நிதித் துறை அமைச்சர் அறையிலேதான்தங்கியிருக்கிறார். கேவலம், இந்த ஆட்சியினரால் வெளியிடப்பட்டுள்ள “காலண்டரில்” கூடமுறைப்படி முதல் அமைச்சர் என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட முடியவில்லை.அனைத்து அரசு அறிவிப்புகளும் “மக்கள் முதல்வர் அம்மா” பெயரில்தானே வெளிவரு கின்றன.குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து வாகனங் களிலும், தண்டனை பெற்றகுற்றவாளியின் படங்கள்தான் பெரிதாகப் போடப்பட்டிருந்ததே தவிர, இன்றைய முதல்வரின் படம்ஒன்று கூடக் காணப்படவில்லை. அண்ணா நினைவு நாள் அஞ்சலி செலுத்தக்கூட, ஒருஅமைச்சர்கூட உடன் வராமல், தனியாக முதல்வர் மட்டும் செல்வது புகைப்படமாகவெளிவந்துள்ளது. முதல்வரே இல்லாத மாநிலமாகத் தான் தமிழகம் காட்சியளிக்கிறது.அதுபற்றியெல்லாம் வார இதழ்கள் பக்கம் பக்கமாக முதலமைச்சர் பற்றியும், இந்த அரசினரைப்பற்றியும் விமர்சித்து எழுதிய போதிலும், ஆளுங்கட்சியினர் அதனைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை; சிறிதும் கவலையோ, நாணமோ கொள்ளவில்லை!

இவற்றுக்கெல்லாம் ஜனநாயக ரீதியாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு நல்வாய்ப்பாக அமைந்திருப்பது தான் திருவரங்கம் இடைத்தேர்தல். எனவே வரும் 13ஆம் தேதிநடைபெறும் திருவரங்கம் இடைத் தேர்தலில் தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்குத் தக்கபாடம் கற்பிக்க, அவர்களும் திருந்தி மிச்ச நாட்களிலாவது மக்களைப் பற்றி அக்கறையோடு நடந்துகொள்வதற்கு ஒரு வாய்ப் பினை வழங்கிட, கழக வேட்பாளர் தம்பி ஆனந்துக்கு உதயசூரியன்சின்னத்தில் வாக்களித்து வெற்றி யினைத் தேடித் தர வேண்டுமென்று திருவரங்கம் தொகுதிவாக்காளப் பெருமக்களையெல்லாம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். “திருவரங்கம்தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி” என்ற செய்தியினை வழங்கிடஅன்புடன் வேண்டுகின்றேன். நிச்சயம் வழங்குவீர்கள் என்று நம்புகின்றேன்! நம்பிக்கை வீண்போகலாமா?

No comments:

Post a Comment


Labels