வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

07/11/2014


கேடு கெட்ட ஆட்சியும்,
 “பஜனை” பாடும் சில ஏடுகளும்! : 
கலைஞர் கடிதம் 

திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்:

’’நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற தமிழக அரசு தேவையான அளவு ஒத்துழைப்பதில்லை என்றகுற்றச்சாட்டு மத்திய அரசால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்ததைப் போலவே, இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த மத்திய புதிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களும் வேதனையோடு கருத்து தெரிவித் திருக்கிறார்.

“மத்திய அரசு தருவதை மாநில அரசு மறுப்பதா?” என்ற தலைப்பில் 14-8-2013 அன்றே; மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போதே, நான் விரிவாகக் கூறியிருந்தேன். 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர் மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

முக்கியமான இந்த நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டம் என்னதான் ஆயிற்று என்று 2013இல் மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், திரு. ஆஸ்கார் பெர்னாண்டஸ் அவர் களிடம் செய்தியாளர்கள் கேட்ட நேரத்தில்,  மாநில அரசு அதன் நிலை பற்றித் தெளிவாகத் தெரிவிக்காததாலும், நில ஆக்கிரமிப்பு களை அகற்றுவதிலே ஏற்படும் தாமதத்தைப் போக்காததாலும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்காக நிதி அளிக்க மறுத்து வருகின்றன என்று சொன்னார்.

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றித் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக் குனர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின், திட்டப் பணிகள் துவங்கப்பட்டன. ஆட்சி மாறிய பின், மாநில அரசின் துறைகளில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

நில ஆர்ஜிதம் மற்றும் பாதிக்கப்பட்டோர்க்கான மறுவாழ்வுப் பணிகளில், மாநில அரசிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு இல்லை. இதற்குக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை. மேம்பாலத் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியினை வெளியிட்ட “தினத்தந்தி” நாளேடே, “சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 1,815 கோடியில் செயல்படுத்தப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட் டுள்ள துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் பறக்கும் சாலைத் திட்டம் முற்றிலும் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதில் உண்டான கால தாமதத்திற்கு காண்ட்ராக்டர் 872 கோடி ரூபாய் அளவுக்கு அதிக இழப்பீடு கேட்பதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் கைவிடப் பட்டால் ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு சென்னைத் துறைமுகத்தின் வருவாய் அடியோடு குறையும். தற்போது ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர்களை தென் மாவட்டங்களிலிருந்து கொண்டு வரும் டிரக்குகள் சென்னை புறவழிச் சாலை, மதுரவாயல், மாதவரம், புழல், நூறடி சாலை வழியாக துறைமுகத்தை வந்தடைகின்றன. அதேபோல் வட மாவட்டங்களில் இருந்து வரும் டிரக்குகள், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரோடு, எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக துறைமுகத்திற்கு வருகின்றன. மீஞ்சூர், மாதவரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த டிரக்கு வண்டிகள் ஊர்ந்தபடிதான் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரிக்கிறது. 

மணலி நெடுஞ்சாலையில் இருந்து துறைமுகத்தை வந்தடைவதற்கு சில நேரங்களில் டிரக்கு வண்டிகளுக்கு இரண்டு நாள்கூட ஆகிவிடுவதுண்டு. இதன் காரணமாகக் கால தாமதம் ஏற்படுவதுடன் எரி பொருளும் வீணாகிறது என்பது டிரக்கு வண்டி உரிமையாளர்களின் தொடர் குற்றச் சாட்டாகும். துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைதான் மேற்கண்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வாக அமையும். இந்தத் திட்டம் கைவிடப்படும் அபாயம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “உகந்த சூழ்நிலை வந்தால் இந்தத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்” என்று “தினத்தந்தி” விரிவாகச் செய்தி வெளியிட்டது.

தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை ஒதுக்குவது பற்றித் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கூறும்போது, “மாநில அரசு தனது ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு, அதன்படி , உதவிட முன்வராத வரையில், மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்க இயலாது” என்று தெரிவிப்பதாகவும் “இந்து” இதழ் எழுதியிருக்கின்றது.

 இந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே. வாசன் அளித்த பேட்டியில், “மதுரவாயல் சாலைத் திட்டம் மாநில அரசினால் தடை செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. துறைமுகத்திற்கும், மாநகரத்திற்கும் அது ஒரு முக்கியமான திட்டம். அந்தத் திட்டத்தை விரைவுபடுத்தும்படி மாநில அரசைப் பலமுறை கேட்டுக் கொண்டோம். அண்மையில் இந்தத் துறையின் மத்திய அரசுச் செயலாளர் மாநில தலைமைச் செயலாளரிடமும் இதுபற்றி விவாதித்தார்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “மதுரவாயல் - துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைப்பதற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய திட்டம். இதைப் பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து வேண்டுமென்றே பாலம் கட்டத் தடை விதித்து வந்துள்ளது. மத்திய அரசுத் தரப்பில் கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். எனவே பறக்கும் சாலை அமைக்கும் பணியைத் தொடர்ந்து செய்யலாம். இந்தப் பாலம் அமைக்கத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் மத்திய கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமிழக அரசு மத்திய அரசுக்கு மேலும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். “இந்திய தேசிய நெடுஞ்சாலை வாரியம் தமிழகத்திலே 1,840 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 407.26 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஐந்து புதிய சாலைத் திட்டங்களை

மேற்கொள்ளத் தயாராக உள்ளது. மேலும் நில ஆர்ஜிதப் பணிகளில் 90 சதவிகிதம் நிறைவடையு மென்றால், இரண்டு நான்கு வழிப் பாதை திட்டங்களைக் கூடுதலாக மேற்கொள்ளவும் உள்ளது. இதில் மாநில அரசுதான் முக்கிய இடத்தை வகிக்க வேண்டும். நாங்கள் சாலைப் பணிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளோம். ஆனால் நில ஆர்ஜிதம், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றில், மாநில அரசிடமிருந்து அதிக ஒத்துழைப்பு வேண்டும்” என்று தேசிய நெடுஞ்சாலை வாரியத் தலைமை மேலாளர்  வி. சின்னப்ப ரெட்டி தெரிவித்திருக்கிறார். தமிழகத்திற்காக மத்திய அரசு அறிவித்துள்ள சாலைத் திட்டங்கள்: திருமயம் - மானாமதுரை 78 கிலோ மீட்டர் நீளம் - மதிப்பு 252 கோடி ரூபாய்; தஞ்சாவூர் - புதுக்கோட்டை 55 கிலோ மீட்டர் நீளம் - மதிப்பு 159 கோடி ரூபாய்; காரைக்குடி - ராமனாதபுரம் 80 கிலோ மீட்டர் நீளம் - மதிப்பு 280 கோடி ரூபாய்; மதுரை - ராமனாதபுரம் 116 கிலோ மீட்டர் நீளம் - மதிப்பு 734 கோடி ரூபாய்; நாகப்பட்டினம் - தஞ்சாவூர் 79 கிலோ மீட்டர் நீளம் - மதிப்பு 415 கோடி ரூபாய். இவை தவிர நான்கு வழிச் சாலைகள் இரண்டு - கன்னியாகுமரிக்கும் காவல் கிணறுக்கும் இடையிலும்; விக்ரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் இடையிலும் நிறைவேற்றும் திட்டம். தமிழக அரசு முறையாக ஒத்துழைப்பு நல்குமானால் இந்தத் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் நிதி உதவியோடு விரைவில் நிறைவேறும்.

இந்த விவரங்களையெல்லாம் தொகுத்து வெளியிட்ட “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, மேலும் இன்று (6-11-2014) அதாவது “அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்குமூடுவிழா நடத்தி விட்டதால் தமிழகத் தின் வளர்ச்சி தள்ளாடுகிறது” என்ற தலைப்பில், தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை பற்றிய அதிர்ச்சி தரும் பல தகவல்களைத் தெரிவித்துள்ளது. அவையாவன :-
25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. (மதுரவாயல் - சென்னைத் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலைத் திட்டம், எண்ணூர் - மணலி வரையிலான நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - தடா நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி பை-பாஸ் திட்டம், கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு செயற்கையான காரணங்களை தமிழக அரசு முன்னிறுத்தி வருவதால் தொடங்கப்படவில்லை)
38 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளன. (660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1,600 மெகாவாட் உடன்குடி அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1200 மெகாவாட் வடசென்னை சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் உற்பத்தித் திட்டம் - 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்க அனல் மின் உற்பத்தித் திட்டம்)
மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், கருத்துரு கட்டத்தையே தாண்டவிடாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. மோதல் போக்கைக் கைவிட்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று தமிழக அரசைப் பல முறை மத்திய அரசு வற்புறுத்திக் கேட்டும்கூட, எவ்விதப் பலனும் ஏற்படவில்லையாம்.

மிகப் பெரிய நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதன் மூலம் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரான போக்கு வெளிப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாததன் காரணமாக கார் தொழிற்சாலைகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, துறைமுகம் மூலம் அனுப்பப்படும் கார்கள் 48 மணி நேரத்திற்கு மேலாக துறைமுகத்திலேயே வீணாகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பண விரயமும், கால விரயமும் ஏற்படுகின்றன.

உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் சராசரி செலவுத் தொகையான 7 சதவிகிதத் திலிருந்து 8 சதவிகிதம் என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை வெறும் 5 சதவிகிதமாகச் சுருங்கி விட்டது.

முக்கியமான இந்தக் காரணத்தினாலேதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 2012-2013ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 4.4 சதவிகிதம் என்பதற்கு மாறாக 3.39 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேவசகாயம், “ஒரு திட்டத்தைத் தமிழகத்தில் தொடங்குவதற்கே எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அரசியல் தலையீடுகளின் காரணமாக மிகவும் அதிகமாகி விட்டது. தொழில் தொடங்குவதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திப்பது என்பதே குதிரைக் கொம்பாக இருந்ததால், எதிலும் முடிவெடுப்பது இயலாத ஒன்றாக ஆகி விட்டது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக உலகம் முழுதும் உள்ள முதலீட்டாளர்களை அக்டோபர் மாதத்திலேயே சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றும் அந்தச் சந்திப்பு இதுவரை நிகழவில்லை. ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை மாநில நிர்வாகத்தை மேலும் முடமாக்கி விட்டது. வேறு முதலமைச்சர் பதவியேற்றிருந்தாலுங்கூட, தொழில் வளர்ச்சிக்கு எந்தவிதமான உந்துதலும் இல்லை.

உடன்பிறப்பே, இந்த விவரங்கள் எல்லாம், முக்கியமான ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்திகளாகும். ஆனால் தமிழ் நாளேடுகள் எல்லாம் இந்தச் செய்திகளை மறைத்து, அ.தி.மு.க. ஆட்சி யையும், அதை நடத்துபவர்களையும் காப்பாற்ற எண்ணி, அவர்கள் மூச்சு விட்டாலும் அதனையும் எட்டு பத்தித் தலைப்பிட்டு பெரிய செய்தியாக்கி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை முடக்கி வைக்கின்றன. தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கின்ற ஆட்சியும் அதற்கு “பஜனை” பாடுகின்ற சில ஏடுகளும் இருக்கின்ற வரையில் இப்படித்தான் நடக்கும்.’’

No comments:

Post a Comment

Labels