வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



24/11/2014

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - 
பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி:- நீங்கள் சட்டசபைக்கு வருவ தில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும் என்றும் ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் பிதற்றி யிருக்கிறாரே?
கலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார்.
ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா? என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன்? முன்னாள் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலேகூட தன்னுடைய காரை நிறுத்த முடியாமல், முதலமைச்சர் என்றே அழைத்துக் கொள்ள முடியாத வெட்கக் கேடான நிலை ஏற்பட்டிருக்கிறதே என்றும்; இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்து, இப்படியெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்கள் தன்னை சங்கடப் படுத்து கிறார்களே என்ற பதற்றம் பன்னீர் செல்வத்தைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.
நான் ஏன் சட்டப்பேரவைக்குச் செல்ல முடிவதில்லை என்ற கேள்விக்கு ஏற்கனவே பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
2013, நவம்பர் மாதத்திலும், 2014 ஜூன் மாதத்திலும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். எனது உடல் நலம் கருதி, சட்டப்பேரவையிலே நான் அமர்வ தற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் முறையான இட வசதி செய்து தராத காரணத்தால், நான் சட்டப்பேரவைக்குச் செல்ல முடிவதில்லை என்று பதிலளித்திருக்கிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை, நான் சட்டப்பேரவைக்கு வந்துவிடக் கூடாது என்று, வேண்டுமென்றே சட்டப்பேரவையில் நான் அமர்வதற்கு ஏற்ற இடவசதி செய்து தரவில்லை.
‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வமாவது எனக்கு உரிய இடவசதி செய்து கொடுப்பதோடு; தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, யாரோ எழுதிக் கொடுத்த கட்டுரையோடு எப்போதாவது அவைக்கு வந்து, கட்டுரையை அப்படியே படித்து விட்டு, அவர் வாசித்த பொய்ப் புகார்களுக்கு தி.மு.கழக ஆட்சியின் சார்பில் அளிக்கும் பதில்களைக் கேட்காமல் பொறுமையிழந்து ஜெயலலிதா வெளியேறிய போதெல்லாம், தி.மு.கழக உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து ஜெயலலிதா படித்த உரையைக் கேட்டார்களே, அப்போது தி.மு.கழக உறுப்பினர்கள் கடைப்பிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என்று உறுதி செய்து கொண்டு, பன்னீர்செல்வம் அறிவிப்பாரானால், சட்டப்பேரவைக்கு நான் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்.
‘பனிப்போரைப்’ பற்றிய பன்னீர்செல்வத்தின் விமர்சனத்திற்கு ஏற்கனவே தம்பி மு.க.ஸ்டாலின் ‘பளிச்’செனப் பதிலளித்திருக்கிறார். “நான் தந்தைக்குக் கட்டுப்பட்ட தனயன்; தலைவரின் கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தொண்டன்” என்று ஸ்டாலின் அளித்த பதிலை, பன்னீர்செல்வம் படித்துப் பார்க்கவில்லை போலும்! தந்தை - தனயன் என்ற பருப்பெல்லாம் இங்கே வேகாது என்பதைப் பன்னீர்செல்வம் புரிந்து கொள்ள வேண்டும். பருப்பு வாங்கும் டெண்டரில் 8000 கோடி ரூபாய் ஊழல் என்றும், அதற்கு சி.பி.ஐ. விசாரணைக்குத் தயாரா என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே? அவருக்குப் பன்னீர்செல்வம் பதில் கூறட்டும்!
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவை எந்த அளவுக்கு ஜனநாயகத்தைப் போற்றி நடத்தப்படுகிறது என்பதை நாடே நன்கு அறியும். அனைத்துத் துறைகளுக்குமான அறிவிப்பு களையும் முதலமைச்சரே 110வது விதியின்கீழ் படித்தல்; வெளிநடப்புகள் அல்லது வெளி யேற்றங் கள்; எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தராமை; ஆளுங்கட்சி பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ எதிர்க்கட்சியினர் யாராவது பேச முற்பட்டால், உடனே குறிப்பிட்ட சில அமைச்சர்கள் குறுக்கிட்டு, அவர்களைப் பேசவிடாமல் செய்தல்; அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட மானியங்களுக்கு பதில் அளிக்கும்போது, முதலமைச்சருக்கு நீண்ட பாராட்டுப் புராணம் படித்தல்; என்னை எந்த அளவுக்கு விமர்சனம் செய்து தாக்கிப் பேசிட முடியுமோ, அந்த அளவுக்கு நாலாந்தர நடையில் பேசுதல்;என்பன போன்ற நடைமுறைகள் தொடரும் வரை தமிழகச் சட்டப் பேரவை ஜனநாயக மரபுகளின்படி நடைபெறுகிறது என்று எவராலும் சொல்ல முடியாது.
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப் பினர்கள் என்றால், அமைச்சர்கள் என்றால், முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமென்றாலும் ஜனநாயக விரோதமாக விமர்சிக்கலாம்; எதிர்க்கட்சிகளை எப்படி வேண்டுமானாலும் இழித்தும் பழித்தும் பேசலாம்; ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆடாமல் அசையாமல், அனைத்தையும் அடக்க ஒடுக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண் டும்; அவைக்கு வராவிட்டாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களை மனம் போனபடி தாறுமாறாகப் பேச வேண்டும்,
நஞ்சு கலந்த அந்த வார்த்தைகளை எல்லாம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவியாறக் கேட்டுக் கொண்டு அச்சடித்த பதுமைகளைப் போல பொறுமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயக முறைப்படி இயங்கும் மன்றமா?

No comments:

Post a Comment


Labels