வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/10/2014

“மனுக்களைத் தொடர்ந்து மனுக்கள்”! சொத்து குவிப்பு வழக்கு குறித்து கலைஞர் கடிதம்!
 
ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்! (2) 
 
(கலைஞர் கடிதம் - 20.10.2014)

உடன்பிறப்பே,

நேற்று தொடங்கி, இன்றைக்கும் தொடருகின்ற இந்தக் கடிதத் தொடர், யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள ஜனநாயக நெறிமுறைகளை - தவறு என்று தெரிந்தே நடத்தப்படும் எதேச்சாதிகார முறைகள் தங்கு தடையின்றி நிறைவேற்றப்படுவதற்கு ஒரு தடைக் கல்லாக விளங்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு - ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற இரு தரப்பிலும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் - பகுத்துணர்ந்து அவர்கள் கடந்து செல்லும் பாதையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டு மென்பதற்காகவும் வெளியிடப்படுகிறதே தவிர - வெறுப்புணர்வோடு, பகைமைப் பாராட்டி, பழி நோக்கோடு வெளியிடப்படுபவை அல்ல என்பதையும் - அரசியலில் கண்ணியம் தவறாத கடமை உணர்வுடன் தமக்கு வாக்களித்த மக்களை வாய்மை தவறாமல் வழி நடத்திட ஆளவந்த வர்க்கத்தினர் அகந்தைக்கு இடம் தராமல், அன்புக்கு - அறவழிக்கு - எடுத்துக்காட்டாக விளங்கிட சிறிதேனும் பயன் படுமாயின், இந்தக் கடிதத்தை எழுதிடுவதால் நாட்டுக்கு நற்தொண்டாற்றினேன் என்ற நிம்மதியுடன் மேலும் தொடருகிறேன். 

நேற்றைய கடிதத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானது என்பது உச்ச நீதிமன்றம் வரை சென்று நிலைநாட்டப்பட்டது என்பது வரை கூறியிருந்தேன். 

அவ்வாறு அமைந்த தனி நீதிமன்றத்தில், ஆதாரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 28.12.1998 முதல் 24.8.2000 வரை நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் தரப்பில் 258 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கிற்கான ஆதாரங்களும், பொருள்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதலமைச்சரானார். அ.தி.மு.க. ஆட்சியில் நீதிபதி ஆர். ராஜமாணிக்கம் முன்னிலையில் ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் மீதான வழக்கு 2002 நவம்பரில் சென்னையில் தொடங்கியது. ஏற்கனவே ஆஜர்படுத்தப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்பட்ட 76 சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியில் அழைத்தனர். அவர்களில் 64 பேர்; தாங்கள் முன்னர் கூறியவற்றிலிருந்து பின்வாங்கி விட்டனர். அவர்களை “பிறழ் சாட்சிகள்” என்று சட்டப்படி அறிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், அவர் அ.தி.மு.க. அரசினால் நியமனம் செய்யப்பட்டவர் என்ற காரணத்தால், அவ்வாறு செய்யவில்லை. 

அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்காமலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டிற்கே சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்ற கொடுமையும் அனுமதிக்கப்பட்டது. நடைமுறைக்கு முற்றிலும் மாறான இந்த முறைகேட் டினை எதிர்த்து ஆட்சேபித்திருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

அப்போதுதான், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் விசாரணையை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் “அந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது என்று தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை சிறிது காலத்திற்கு நிறுத்தப்பட்டது.” ஆனால், பேராசிரியர் தொடர்ந்த அந்த வழக்கில் 18.11.2003 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் உச்சநீதி மன்றம் வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. 

அந்த உத்தரவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.என். வரியவா அவர்களும், எச்.கே. சீமா அவர்களும் கூறும்போது, “ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில்; மனுதாரரான பேராசிரியர் அரசியல் எதிரி என்ற முறையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்ப தாகவும் கூறியிருக்கிறார். இந்த வாதம் ஏற்புடைய தல்ல. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சட்டப் பேரவைக்குள்ளும், வெளியேயும் முக்கியமானதோர் இடம் உண்டு. ஆட்சியிலே இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. 

ஆட்சியிலே உள்ள கட்சியின் தவறான செயல்முறைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்ப்பதுதான் அவர்களுடைய முக்கியமான ஆயுதமாகும். பொதுவாக மக்களுடைய குறைகளை எதிரொலிக்கக் கூடியவர்களே இவர்கள்தான். அந்த நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் மனுதாரர் (பேராசிரியர்) உண்மையில் மாநிலத்தின் அரசு நிர்வாகத்திலும், நீதி நிர்வாகத்திலும் அக்கறை உள்ளவராவார். அப்படிப்பட்டவரிடமிருந்து தாக்கல் செய்யப்படுகின்ற மனு, அரசியல் காரணத்திற்காக போடப்பட்ட ஒன்று என்று கூறி அலட்சியப்படுத்தப் படக் கூடியதல்ல. இந்த வழக்கில் மனுதாரர் (பேராசிரியர்) பல நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான காரணங்களை அதாவது, இதிலே நீதி மறுக்கத்தக்க வகையிலும், ஒருதலைப்பட்சமாகவும் வழங்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்ற வலுவான ஐயங்களை எழுப்பியிருப்பதை எங்கள் கருத்தின் அடிப்படையில் ஒப்புக் கொள்கிறோம். 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் எந்த அளவுக்கு அரசுத் தரப்பினர் இணைந்து செயல்பட்டிருக் கிறார்கள் என்பது தெரிகிறது. ஜெயலலிதா முதலமைச் சராகப் பொறுப்பேற்ற பிறகு, சாதாரணமான ஏதோவொரு காரணத்தைக் கூறி இந்தச் சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதாவின் அரசினால் நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஒன்றே எந்த அளவுக்கு நீதி இந்த வழக்கிலே திசை திருப்பப்பட் டுள்ளது என்பதை நன்றாக விளக்குகின்றது. 

அரசின் புதிய வழக்கறிஞர், குற்றவாளிகளோடு (ஜெயலலிதா குழுவினரோடு) இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகின்றது. 313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களை விட சட்டம் பெரியது. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது. எங்களின் கருத்துப்படி; மனுதாரர் (பேராசிரியர்) நியாயப்பூர்வமான, அர்த்தம் பொதிந்த சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும் பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர், இப்போதல்ல; 2003ஆம் ஆண்டிலேயே அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களூ ருக்கு மாற்றிய போதே, கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை, நாம் ஏதோ பொய் வழக்கு போட்டதாக இன்றைக்குப் பழி சுமத்துபவர்கள் தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டுமென்பதற்காகத்தான், மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளை இங்கே நினைவூட்டியுள்ளேன். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று கர்நாடக அரசு 19.2.2005 தேதியிட்ட அறிவிப்பின்படி தனி நீதிமன்றம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதோடு, அரசுத் தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். 

வழக்கு விசாரணை தொடர்ந்தது பற்றிய ஆவணங்களைப் பார்க்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் “மனுக்களைத் தொடர்ந்து மனுக்கள்” என்ற வகையில் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்தார்கள். வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டுமென்ற அடிப்படையில், அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்குள்ள உரிமை காரணமாக அனுமதிக்கப்பட்டது. பெங்களூரு தனி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு உத்தரவையும் எதிர்த்து கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திற்கும், அதன் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சென்றதன் காரணமாக இந்த வழக்கு விசாரணையில் மிகுந்த கால தாமதம் ஏற்பட நேர்ந்தது என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் 45 சாட்சிகளை குறுக்கு விசாரணைக்காக அழைத்தார். அப்போது சாட்சிகளின் வாக்குமூலங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, புதிதாக சரியான மொழி பெயர்ப்பு செய்யவும், அனைத்து சாட்சிகளையும் வரவழைத்து, புதிதாக வாக்குமூலங்கள் பெறவும் கோரி தனி நீதிமன்றத்தில் 14-7-2010 அன்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்துத் தனி நீதிமன்றம் 22.7.2010 அன்று ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தார். 

குற்றப் புலனாய்வுச் சட்டம் 313ன் கீழ் ஜெயலலிதா மீதான விசாரணை 20.10.2011 அன்று தொடங்கியது. அவர் 1337 கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் 23.11.2011 அன்று எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தையும் தாக்கல் செய்தார். சசிகலா மீதான விசாரணை பாதி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குறிப்பிடப்படாத மற்றும் தாக்கல் செய்யப்படாத ஆவணங்களை வழங்கக் கோரி 29.2.2012ல் தனி நீதிமன்றத்தில் சசிகலா மனுத் தாக்கல் செய்தார். 

3.4.2012 அன்று அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து சசிகலா கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் உச்சநீதி மன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட ஆவணங்களை 21 நாட்களுக்குள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியும் பார்வையிட அனுமதி அளித்து 27.9.2012 அன்று தீர்ப்பளித்தது. அதன்பின் சசிகலா தனக்கு அளிக்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். சுதாகரன் மற்றும் இளவரசியும் விசாரிக்கப்பட்டனர். சுதாகரன் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் ஒன்றை 21.1.2013 அன்று தாக்கல் செய்தார். 

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் 5.8.2013 முதல் 14.8.2013 வரை வாதம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில், அரசு வழக்கறிஞருக்கு உதவி செய்ய அனுமதிகோரி பேராசிரியர் அவர்கள் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு, வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு தேவைப்படும் அளவுக்கு உதவி செய்யும்படியும் கூறப்பட்டது. 

அரசு சிறப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை 23.8.2013 அன்று தொடங்கினார். அவர் வாதம் செய்து கொண்டிருந்த நிலையில், அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பணி யாற்றி வந்த பவானி சிங் அவர்களை கர்நாடக அரசு திரும்பப் பெற்று அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பவானி சிங் அவர்களே அரசு வழக் கறிஞராக நீடிக்க வேண்டுமென்று கோரி ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

ஜெயலலிதா தரப்பினரின் அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசின் உத்தரவு வழக்கை விரைவில் முடிக்க உதவுமா என்பதை பரிசீலிக்குமாறு கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அதை அனுப்பி வைத்தது. இதற்கிடையே செப்டம்பர் 2013 இறுதியில் ஓய்வு பெற இருந்த தனி நீதிபதியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. எனினும் 31.10.2013ல் அவர் ஓய்வு பெற்றதால், நீதிபதி, திரு. குன்ஹா அவர்கள் தனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

இவர் பதவி ஏற்ற பின்னர் சென்னை தனி நீதிமன்றப் பொறுப்பில் இருந்த பொருள்களும், விலையுயர்ந்த சொத்துக்களும் பெங்களூருக்கு கொண்டு வரப்படு வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 7.3.2014 முதல் மீண்டும் வாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் லெக்ஸ் பிராபர்ட்டி மேம்பாட்டு லிமிடெட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பி.லிட், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் பி.லிட்., சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பி.லிட்., ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிட். ஆகிய 5 நிறுவனங்கள், சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத் தலைமை நீதிபதி தங்கள் சொத்துக்களை முடக்கிப் பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும்படி, வேண்டுமென்றே பிரதான வழக்கினை தாமதப்படுத்த வேண்டுமென்று எண்ணத் தோடு, தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளின் வாதங்கள் முக்கிய வழக்குடன் சேர்த்து ஏக காலத்தில் கேட்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 3வது முறையாக வாதம் தொடங்கியது. 

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா பின்வருமாறு தனது தீர்ப்பிலே கூறுகிறார் :- “அரசு சிறப்பு வழக்கறிஞர் விரிவாக எடுத்து வைத்த விவாதத்தை நான் கேட்டேன். அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணைகளைப் படித்த பின் அவர் தனது வாதத்தைத் தொகுத்து வழங்கினார். எதிரிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. குமார் வழக்கின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விவரித்து 80 மணி நேரம் விரிவாக விவாதம் செய்தார். புலனாய்வு அதிகாரி புலனாய்வு நடத்திய முறையையே கடுமையாக எதிர்த்த அவர், அதில் பல தவறுகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். 

அரசு சிறப்பு வழக்கறிஞர் அளித்த சுருக்கமான பதில் விவாதத்தில், தேவையான நடைமுறைகளின் படியே வழக்கு தொடரப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியே நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும், அதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த நிலையில் குற்றவாளி ஆட்சேபணை எதையும் எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள் செய்த மதிப்பீடுகள் சரியானவை என்றும் குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள் 25.6.97ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டபின்தான் உருவாக்கப்பட்டவை என்றும் கூறினார். 

பெங்களூரு தனி நீதிபதி, திரு. குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் தொடர்ச்சியாக இவைகளைக் குறிப்பிட்ட போதிலும், தீர்ப்பின் இறுதிப் பகுதியில் தான் தனது முடிவினைச் சுருக்கமாகத் தொகுத்துக் குறிப் பிட்டிருக்கிறார். அந்தச் சுருக்க வரலாற்றை முதலிலே தெரிவிக்க விரும்புகிறேன். 

“ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 இலட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. ஆனால், அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்பதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடிய வில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களைத் தந்துள்ளனர். 

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது என்றும், வழக்கு தொடுக்கப்பட்டபோது, தன்னுடைய வயது 48 என்றும், அதன்பின் 18 வருடங் களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது என்றும், இப்போது தன்னுடைய வயது 66 என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கின் காரணமாக, தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுவதாகவும், அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

குற்றவாளி தரப்பினர் என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி இவ்வாறு சுருக்கமாகத் தெரிவிக்கும் நீதிபதி அவர்கள், தனது தீர்ப்பாக என்ன சொல்கிறார் என்றால்; “இந்த நீதிமன்றம், ‘நிரஞ்சன் ஹேமச்சல் - மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறது. அந்தத் தீர்ப்பில், “ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடை போடும் போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற் றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கக்கூடியது. அது பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர் களின் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்” என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றினைக் கோடிட்டுக் காட்டியதோடு மேலும் தனது தீர்ப்பிலே என்ன கூறினார் என்பதை நாளை தெரிவிக்கிறேன். 

(தொடரும்) அன்புள்ள,
மு.க.

No comments:

Post a Comment


Labels