வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

14/08/2014

திமுக சார்பில் விரைவில் மாவட்டம் தோறும் இணையதளம் : தளபதி ஸ்டாலின்!குமரி மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மகேஷ் வரவேற்று பேசினார்.  
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை விட மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறோம். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக கருதி உழைக்கும் தொண்டர்களை கொண்ட இயக்கம்தான் தி.மு.க.
வருகிற 2016–ல் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் எந்த முறையில் களம் இறங்குவது என்பதை திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட வேண்டும். அதற்கு நம்மிடையே உள்ள பிளவுகளை மறந்து தேர்தலை சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் நாம் செயல்பட்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. வெற்றிக்கொள்ளவும் இயலாது.
இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். தி.மு.க. சார்பில் விரைவில் மாவட்டம் தோறும் இணையதளம் தொடங்கப்படும். அந்த இணையதளத்தில் தி.மு.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் படத்துடன் இடம் பெறும். இதற்காக மாவட்டந்தோறும் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் சங்கரலிங்கம், ஆஸ்டின், புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, எப்.எம். ராஜ ரெத்தினம், மாவட்ட பொருளாளர் பொன். சின்னத்துரை, கேட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தை தொடர்ந்து 2–வது கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. தி.மு.க.வில் நிர்வாகிகள் யாராக இருந்தாலும் சரி, ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த பணியையும் ஆற்ற முடியவில்லை. எதை பற்றியும் பேச முடியவில்லை. பேசினால் வெளியே அனுப்புகிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை என்று இதை ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
110 விதியின் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அதன்படி, 110 அறிவிப்புகளை முதல்–அமைச்சர் வெளியிடுகிறார். இந்த 3 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடிக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை எந்த பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்று நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி தம்பித்துரை எம்.பி.க்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே, இது சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா–அ.தி.மு.க. கூட்டணிக்கான அச்சாரமா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், ‘உங்கள் ஆருடத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது’ என்றார்.

No comments:

Post a Comment

Labels