வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

21/07/2014

விளக்கமும் கிடையாது; வெங்காயமும் கிடையாது :
 கலைஞர் ஆவேசம்

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு 27-6-2014 அன்றும், 29-6-2014 அன்றும் முறையே “சூட்சமத்தைப் புரிந்து கொள்வாய்” என்ற தலைப்பிலும், “பெரியார் கூறிய கட்டுப்பாடு காத்திட; அண்ணா வழியில் உழைப்போம் வாரீர்” என்ற தலைப்பிலும் இரண்டு உடன்பிறப்பு மடல்களை நான் எழுதியிருந்தேன் அல்லவா; அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மூன்றாவது கடிதம்!
நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதும், இனி அவ்வளவுதான்; திராவிட முன்னேற்றக் கழகத்தால் இனி எழுந்திருக்கவே முடியாது; கழகத்தின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் தி.மு. கழகத்தை விட்டு விலகி விடுவார்கள்; தொண்டர்களோ கேட்கவே வேண்டியதில்லை; ஆயிரக்கணக் கில் நம்முடைய கட்சியிலே வந்து இணைந்து விடுவார்கள் ; தி.மு. கழகத்தின் தலைமை இனி எழுந்திருக்கவே எழுந்திருக்காது என்றெல்லாம் வழக்கம்போல் நம்முடைய எதிரிகள் மனப்பால் குடித்தார்கள்! அவர்களுடைய கற்பனை எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்குகின்ற விதத்திலே கழகத்திலிருந்து அடி மட்டத்திலே ஆணி வேர்களாக உள்ள ஒரு தொண்டன் கூட அசையவில்லை என்பதைப் பார்த்த பிறகுதான், அவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள்.

மாற்றார் நினைப்பையும், ஆசையையும் உள்ளடக்கிச் சில வார ஏடுகளும், நாளேடுகள் ஒன்றிரண்டும் கழக வேட்பாளர்களை, கழக முன்னணியினரே தோற் கடித்தார்கள்; தேர்தலில் தீவிரமாகப் பணியாற்ற வில்லை; மாற்றாரிடம் பணம் பெற்றுக் கொண்டு துரோகம் விளைவித்தார்கள் என்று இட்டுக் கட்டப் பட்ட செய்தியினைத் திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
 மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிலர் குறுநில மன்னர்களாகத் திகழ்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அ.தி.மு.க. என்றால் இந்நேரம் அவர்களையெல்லாம் தூக்கிப் போட்டி ருக்கும் என்றெல்லாம் செயற்கையான செய்திகளை வெளியிட்டார்கள். அவர்களாகவே தி.மு. கழகம் நடவடிக்கை எடுக்கவிருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் பட்டியல் என்று 18 மாவட்டக் கழகச் செயலாளர்களின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார்கள். மற்றொரு ஏடு, “எல்லா மாவட்டக் கழகச் செயலாளர்களையும் எடு” என்ற தலைப்பிலே நீண்ட கட்டுரையே வெளியிட்டது.

உண்மையில் அவர் களுக்கு கழகத்தினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது, எப்படியாவது தி.மு. கழகம் நடவடிக்கை எடுத்தால் அந்தக் கட்சியில் பிளவு ஏற்படாதா, கழகம் உடைந்துவிடாதா, நடவடிக்கை எடுக்கப்படுபவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஓரணியாக கழகத்திலிருந்து விலகிவிட மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் அவர்கள் அவ்வாறு அபாண்டமாகச் செய்தி வெளியிட்டார்கள். 

இதற்குப் பிறகுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழுவினைக் கூட்டி இந்த நடவடிக்கை எடுப்பது பற்றி பேசினோம். அதில் ஒரு உறுப்பினர்கூட என்னைப் பார்த்து, “தலைவர் அவர்களே, நீங்கள் நிச்சயமாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள்; ஏனென்றால் உங்கள் மனம் இளகியது; யார் மீதும்


நடவடிக்கை எடுக்க உங்கள் மனம் வராது” என்றார். நடவடிக்கை எடுப்ப தற்கு நீண்ட நேரம் ஆகாது. அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் சட்டப்பேரவையில் கூறியிருப்பதைப் போல - அவர் வெளியிலே செல்லும்போது பதவியை இழக்கக் கூடிய நிலை அந்தக்கட்சியிலே ஏற்படலாம், ஆனால் தி.மு.க.வில் அப்படியல்ல என்று கூடச் சொல்லியிருக்கிறார்.
கொலு பொம்மைகளை நினைத்தவாறு இடம் மாற்றி வைப்பதைப் போல தி.மு.கழகத்திலே சர்வாதி காரம் கிடையாதுதான். குற்றவாளிகள் தண்டிக்கப் படலாம்; ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாதல்லவா? எனவே தி.மு. கழகத்தில் நடவடிக்கை என்றால், அதற்காக விளக்கம் கேட்டு, அதிலே என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பரிசீலித்து அதற்குப் பிறகு ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கிறோம்.

விளக்கமும் கிடையாது, வெங்காயமும் கிடையாது, அம்மா நினைத்தால் அவ்வளவுதான்; இன்றைக்கு சசிகலாவையும் அவருக்கு வேண்டியவர்களையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்புவோம், நாளைக்கு சேர்த்துக் கொள்வோம், நினைத்தால் அவருடைய கணவரையே பிடித்துப் பலமுறை சிறையிலே அடைப்போம் என்றெல்லாம் சொல்வார்கள்.
அந்த வகையில்தான் கழக வேட்பாளர்களின் தோல்விக்கு கழகத் தோழர்கள், முன்னணியினர் யாராவது காரணமாகச் செயல்பட்டார்களா என்று அந்தந்த வேட்பாளர்களிடமே அறிக்கை கேட்டுப் பெற்றோம்.
அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் தலைமைக் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களிடமும் தனியாக அறிக்கை கேட்டுப் பெற்றோம். அந்த அறிக்கைகளில் உள்ள புகார்களில் அதிக அளவுக்கு யார் யார் மீது குற்றச்சாட்டுகள், புகார்கள் கூறப்பட்டிருந்தனவோ, அவர்களை யெல்லாம் தற்காலிகமாக நீக்கி வைத்து, அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அவர்கள் பதிலளிக்காவிட்டால், அவர்கள் பதில் கூறுவதற்கு எதுவும் இல்லை என்று கருதி சட்டதிட்டங்கள்படி நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

கழகத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகாவது - நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. ஒரு இடத்திலே கூட வெற்றிபெற முடியாத அளவுக்கு தோற்றுவிட்டது, இனி இங்கே இருந்து பயனில்லை, பழுத்த மரத்தைத் தேடிச் செல்லலாம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்ட 33 பேரில், ஒருவரைத் தவிர வேறு யாரும் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.
அந்த ஒருவரும் கூட, அங்கிருந்து வந்தவர்தான்; அவரை நாம் தான் தூக்கி வைத்து அமைச்சர் பதவி கூடக் கொடுத்துப் பார்த்தோம். ஆனால் அவர் தன் குணத்தைக் காட்டிவிட்டார்.விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, கழகத் தலைமையைத் தாக்கி பதில் அளித்திருந்தார். அவரைத் தவிர மற்றவர்கள் அளித்த விளக்கங்களை நான் பலமுறை படித்தேன். அதில் ஒன்றிரண்டை இங்கே சுருக்கமாகக் கூறுகிறேன். 

சீனி.அண்ணாதுரை :- எனது தந்தையார் ஆர். சீனிவாசன் முதல் மறைந்த என் சகோதரர் மாவீரன் சீனி.பன்னீர்செல்வம் அவர்களைத் தொடர்ந்து நானும், எனது குடும்பமும் கழகமே உயிர் மூச்சாகக் கருதி கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனது கடமையை  எப்பொழுதும்போல் கழகத்தின் வெற்றிக்காக ஓய்வின்றி பணியாற்றியுள்ளேன். கழக விரோத மற்றும் துரோக நடவடிக்கைகளில் நான் ஈடுபட்ட தில்லை. எக்காலத்திலும் ஈடுபடமாட்டேன்.
கழகமே எனது உயிர் மூச்சு. நோ.வை. முத்துகுமாரசாமி:- நான் கழகத்திற்கு எவ்வித துரோகமும் செய்தது கிடையாது. கழகத்தால் தான் எனக்குப் பெருமை. நான் தி.மு.க.காரன் என்று சொல்லிக் கொள்வதில்தான் மகிழ்ச்சி.
குறிப்பாகக் கழகத் தலைவர் அவர்களின் உடன்பிறப்பு என்பதிலும், கழகப் பொருளாளர் தளபதியார் அவர்களின் தம்பி என்பதில்தான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.தங்கள் கட்டளைக்கு காத்திருப்பவரில் நானும் ஒரு கடைநிலை ஊழியர்.
 என்மீது ஏதாவது குற்றச்சாட்டு இருக்கும் என தலைமைக் கழகம் கருதுமானால் அதற் காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்.
கோழிக்கடை ந. கணேசன் :- வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு வந்த போது மாபெரும் வரவேற்பு அளித்தேன். இதனால் காவல்துறை, ஒன்றியச் செயலாளரான என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
நான் எந்தக் காலத்திலும் கழகத்திற்கு ஒரு துளி அளவு கூட துரோகம் செய்ய நினைக்காதவன்.கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டுமென்னும் ஆர்வம் மிக்கவன். ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
கோ.செயபால் :- நான் தந்தை பெரியாரின் சுயமரி யாதை கொள்கையை ஏற்றுக் கொண்டவன். தலைவர்தான் என் உயிர், கழகம்தான் என் மூச்சு என்று செயல்பட்டு வருகிறேன். இதுநாள் வரையில் கழகத்திற்கோ தலைவருக்கோ எந்த ஒரு எதிரான செயலிலும் ஈடுபடாமல் செயல்பட்டு வருகிறேன்.
நான் ஏதேனும் தவறு செய்துள்ளதாகக் கருதினால் என்னை மன்னித்து தொடர்ந்து கழகப் பணி ஆற்றிட வாய்ப்பு வழங்குமாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

க. மாரியப்பன் :- அய்யா அவர்களே! நான் 2003இல் இருந்து கட்சிக்காகப் பாடுபட்டு வருகிறேன்.எனக்கு நினைவு வந்த வயதிலிருந்து கலைஞர் கட்டிக் காத்த தி.மு.க. ஒன்றுதான் என் உயிர். அப்படிப்பட்ட கழகத் திற்கு நான் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன். நான் என்றும் தலைவர் கலைஞர், பேராசிரியர், தளபதியார் வழியில்தான் என் உயிர் உள்ளவரை கழகத்திற்காகப் பாடுபடுவேன்.
தென்றல் செல்வராஜ் :- 1980இல் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டது முதல் இன்றுவரை நடைபெற்ற தேர்தல்களில் கழகம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவருக்கும் உண்மையாக உழைத்ததோடு மட்டுமல்லாமல் கழகமே என் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படுபவன் நான். தற்போது என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன்.வெட்கி தலைகுனிகிறேன்.
என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாங்கள் தரும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறேன். நான் எந்தச் சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் நம்முடைய கழகத்திற்கு துரோகம் செய்யமாட்டேன். உண்மைத் தொண்டனை கழகமும், தலைவரும் என்றென்றும் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

எஸ்.எம். போஸ் :- எனது 47 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ மாறாக நான் எதிரிக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்ததில்லை. இயக்கம்தான் எனது மூச்சு.என்னால் இந்த இயக்கத் திற்கு துரோகமோ, தலைமைக்கு துரோகமோ செய்ய என் இதயம் இடம் கொடுக்காது.
 தெரிந்தோ, தெரியா மலோ தவறுகள் ஏற்பட்டிருந்தாலும் என்னை மன்னித்து இயக்கப் பணியாற்றிட அனுமதி கொடுக்க வேண்டு கிறேன். உடன்பிறப்பே, இந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகத்திற்கு வந்த அனைத்துக் கடிதங்களின் சுருக்கங் களையும் வெளியிட விரும்பினாலும், அனைத்தும் இதே பாணியில்தான் எழுதப்பட்டுள்ளன. கழகத் தலைமை

இந்த விளக்கங்களையெல்லாம் அப்படியே முழுவதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு, இவர்கள் மீது தரப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்ற முடிவுக்கும் வந்துவிடவில்லை.
ஒரு மாபெரும் இயக்கத்தில் - ஒரே இயக்கத்தில் இருந்தாலும் ஆங்காங்கு ஓரிருவரிடையே கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை உணராதவன் அல்ல நான். நம்மைப் பிடிக்காதவர்கள் வேண்டு மானால் இதையே ஒரு காரணமாக வைத்து ஒன்றைப் பத்தாக்கி, துரும்பைத் தூணாக்கி, சிறு கீறலைக் கூட மிகப் பெரும் பிளவு என்று கூற முன்வருவார்கள். நமது இயக்கம் ஜனநாயக இயக்கம். சர்வாதிகார இயக்கங்களில் வேண்டுமானால் இன்று நீ மந்திரி, நாளை எந்திரி என்றும், இன்று நீ மாவட்டக் கழகச் செயலாளர், நாளை இன்னொருவர் மாவட்டக் கழகச் செயலாளர் என்றும் அறிவிப்புகளைத் தன்னிச்சையாகச் செய்யக் கூடும். 

அந்தச் செய்திகளை ஒரு நாளோடு முடித்துக் கொள்கின்ற ஏடுகள், நம்முடைய இயக்கத்திலே எப்போதோ ஒரு சிறு மாற்றம் என்றாலும், அதுபற்றி பத்து நாட்கள் கற்பனைக் கதைகளையெல்லாம் வெளியிடுவார்கள்.

புகார்கள் வந்தவைகளில் ஒருசில உண்மையாகக் கூட இருக்கலாம். அந்த ஒருசிலர், நான் மட்டுமா தவறு செய்தேன்; மற்றவர்கள் எல்லாம் தவறே செய்யவில்லையா? அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை; நாங்கள் மாத்திரம் பலிகடாவா என்று நினைக்கலாம். 

ஓரிருவர் மீது சொல்லப்பட்ட புகார்களில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்ட நேரத்திலே கூட, என்னையும் மீறி, கடந்த காலத்தில் அவர்கள் கழகத்திற்காக உழைத்த உழைப்பு, பட்டபாடு, அனுபவித்த கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் என் நினை விலே வருகின்றன. கடந்த காலத்தில் கழகத்திலே இருந்த ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தில்லையா? அப்போது அதை நீ ஏற்றுக் கொள்ளவில் லையா? என்ற கேள்விகள் வரலாம். கழகம் அவ்வாறு நடவடிக்கை எடுத்ததும் உண்டு. அப்போது என் மனம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்பதை என்னை உணர்ந்தவர்கள்தான் அறிவார்கள். 

தி.மு.கழகம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும். பலர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கும். அதனால் ஏராளமானவர்கள் கழகத்தை விட்டு மாற்றுக் கட்சிக்குச் சென்று விடுவார்கள். தி.மு. கழகம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு கதைதான் என் ஞாபகத்திற்கு வருகிறது. 

மருத்துவன் ஒருவன் பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம். ஒரு நாள் காலை - அந்த ஊர் மக்க ளிலே பலர் காலை வெயிலில் வயலில் வேலை செய்து கொண்டிருக்கக் கண்டான். அதைப் பார்த்ததும் மருத்துவனுக்கு மகிழ்ச்சி. காலை வெயில் பித்தத்தை ஏற்படுத்தும். இந்த ஊர் மக்கள் காலை வெயிலில் பணியாற்றுகிறார்கள். 

நிச்சயமாக பித்தம் சம்பந்தப் பட்ட நோய் உண்டாகும். நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும். ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி யடைந்து தன் ஊர் சென்று மருந்து மூட்டைகளுடன் மாலையிலே வந்தான். வந்ததுமே மகிழ்ச்சி போய் விட்டதாம். கவலை வந்துவிட்டதாம். காரணம் என்னவென்றால், அந்த ஊர் மக்கள் எல்லாம் மாலை வெயிலிலே காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டா னாம். மாலை வேளையில் அந்த வெயில் உடலில் பட்டால் பித்தம் போய்விடும் என்பது மருத்துவ உண்மை. மருத்துவன் என்ன செய்வான்? அந்த ஊர் பயன் இல்லை என்று எண்ணி வேறு இடம் நாடினா னாம். அதைப்போல கழகத்திலே பிளவு ஏற்படும் என்று எண்ணி வாய் பிளந்து, மனப்பால் குடித்த வர்கள் எல்லாம் கழகத்தின் நடவடிக்கை காரணமாக ஏமாந்து போய் விட்டார்கள்.
 தற்காலிக நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்டபோது, யாரும் விளக்க மளிக்க முன்வர மாட்டார்கள், அவ்வளவு பேரும் கழகத்தைவிட்டு வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தவர்கள், அய்யோ நடவடிக்கை ரத்தா? கழகம் மீண்டும் ஒன்றாகி விடுகிறதா? என்றெல்லாம் எண்ணக் கூடும்.
கழகம் கண்ணாடிக் குடுவை அல்ல; கண்ணாடி உடைந்தால் ஒட்ட வைக்க முடி யாது; கழகம், மாபெரும் நீர்த் தேக்கம்; நீரடித்து நீர் விலகாது! நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண் ணம் கொண்டவர்கள் வருத்தம் அடையலாம். அவர் களுக்கெல்லாம் ஆறுதலாகத்தான் விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகரத் தேர்தல்கள் வரவிருக் கின்றன.
அந்தத் தேர்தலில் உண்மையிலேயே தவறு செய்தவர்களை, கழகத் தோழர்களே தோற்கடிக்கச் செய்வார்கள். அதையும் மீறி தவறுகள் தொடரு மேயானால், புகார்கள் தொடர்ந்து வருமேயானால், பெரியார் கூறிய கழகக் கட்டுப்பாடுதான் முக்கியம் என்பதைத் தவிர வேறு வழியில்லை. கழகக் கட்டுப்பாடே, கழகத்தின் உயிர் மையம்! குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! ’’

No comments:

Post a Comment

Labels