வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



30/07/2014

திமுக உறுப்பினர்கள் உண்மையிலேயே அவை நடவடிக்கைகளுக்கு
 இடையூறு செய்தார்களா? : கலைஞர்

திமுக தலைவர் அறிக்கை:

’’கடந்த 22-7-2014 அன்று தமிழaகச் சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் ஓர் அறிவிப் பினைச் செய்தார். அந்த அறிவிப்பில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்து கொண்டு நான்காவது முறையும் வெளியேற்றப்பட்டதால், தி.மு.க. உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது என்று ஆணை பிறப்பித்தார்.
தி.மு. கழக உறுப்பினர்கள் உண்மையிலேயே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய் தார்களா? சட்டப்பேரவை என்பது ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டிய ஓர் இடம். அங்கே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்றால், அமைச் சர்கள் என்றால், முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமென்றாலும் ஜனநாயக விரோதமாக விமர்சிக்கலாம். எதிர்க்கட்சிகளை எப்படி வேண்டுமானாலும் இழித்தும் பழித்தும் பேசலாம். ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைத் தையும் கேட்டுக் கொண்டு அடக்கமாக இருக்க வேண்டும். அவைக்கு வராவிட்டாலும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை மனம் போனபடி தாறுமாறாகப் பேச வேண்டும். அதை யெல்லாம் செவியாரக் கேட்டுக் கொண்டு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அச்சடித்த பதுமைகளைப் போல், பொறுமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்குப் பெயர் சட்டமன்றமா? 
தி.மு. கழக உறுப்பினர்கள் ஆளுங்கட்சியின் சார்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளைப் பற்றியோ, அமைச்சர்களும், உறுப்பினர்களும் பேசும்போது முதல் அமைச்சரை வானளாவப் புகழ்ந்து பாராட்டுப் பத்திரம் படிக்கிறார்களே, மானியங்களிலே அப்படிச் சொல்லப்பட்டிருக் கிறது, இப்படிச் சொல்லப்பட் டிருக்கிறது என்றெல்லாம் இட்டுக்கட்டித் தெரிவிக்கிறார்களே, அப்போது அவையிலே எழுந்து தாங்களாகவே குறுக்கிடுகிறார்களா?

தேவையில்லாமல் வீண் வம்புக்கு இழுக்கின்ற முயற்சியிலே இறங்கி, தி.மு. கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ அநாகரிகமாக, அருவருக்கத்தக்க வகையிலே பேசினால், அப்போதுகூட தி.மு. கழக உறுப்பினர்கள் மரக்கட்டைகளைப் போல அமர்ந் திருக்க வேண்டுமென்றால் அது எப்படி இயலும்? அதற்குப் பெயர்தான் இந்த ஆட்சியிலே சட்டமன்ற ஜனநாயகமா? தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது, கழகத்தைச் சேர்ந்த யாராவது, உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இவ்வாறு தேவையில்லாமல் அ.தி.மு.க.வைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ விமர்சிப்பது உண்டா? பேரவைத் தலைவர்தான் அதற்கு அனுமதி கொடுப்பாரா? 
தமிழகச் சட்டப்பேரவை இந்த முறை ஜூலை 10ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஜூலை 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெற்ற 9 நாட்களில் கழக உறுப்பினர்கள் 9 முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். என்ன காரணம் தெரியுமா? தொகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு, தரப்படாத காரணத்தால்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். 
கழக உறுப்பினர்கள் பேசுவதற்கு சட்டப்பேரவை விதிகளின்படி உரிய வாய்ப்பு தரப்படாத அதே நேரத்தில், ஆளுங்கட்சி யின் அமைச்சர்கள் என்றால் எதை வேண்டு மானாலும் பேசலாம் என்ற நிலையில் பேசவில்லை, மாறாக சகட்டுமேனிக்கு ஏசுகிறார்கள். அதையெல் லாம் கேட்டுக் கொண்டு எதிர்க்கட்சிகள் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமென்றால், அது ஜனநாயகத்தில் சாத்தியமானதா? வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிக்காரர்களை “ஓடுகாலிகள்” என்று ஒரு அமைச்சர் கேவலமாகக் கூறலாமா? பேரவைத் தலைவர் இத்தகைய பண்பாட்டுச் சிதைவை அனுமதிக்கலாமா? முதலமைச்சரோ, அவை முன்னவரோ அவையின் கண்ணியத்தைக் காத்திடும் நோக்கில், அந்த எண்ணம் இருந்தால், அதைத் தடுக்க வேண்டாமா?

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழகத்திலே சுனாமி பேராபத்து ஏற்படுவதற்கு இரண்டு நாட் களுக்கு முன்பே எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே இருந்தேன்.
 சோனியா காந்தி அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் மருத் துவமனைக்கே வந்து என்னைப் பார்த்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து, சுனாமி ஆபத்து ஏற்பட்ட போது நான் வேண்டுமென்றே மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டேன், பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கவில்லை என்று பேரவையில் முதலமைச் சரும், வேறொரு அமைச்சரும் பேசுவதுதான் அரசியல் நாகரிகமா? 
இதற்குப் பதிலளிக்க, விளக்கமளிக்க கழக உறுப்பினர்கள் முயன்றால் அதற்கு அனுமதி யில்லை என்று கூறி அவை நடந்த இந்த ஒன்பது நாட்களில் மூன்று முறை வெளியேற்றப்பட்டிருக் கிறார்கள். 
பேரவை நிகழ்ச்சிகள் முடிவுற்ற பிறகும், வெளியேற்றப்பட்ட பிறகும் கழக உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து நடைபெற்ற நிகழ்ச்சிகளைச் சொல்வது வழக்கம். அப்போது அவர்கள் “பேரவையிலேயே எங்களால் அமர முடியவில்லை. வேண்டுமென்றே ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு சில அமைச்சர்கள் தங்கள் மனம் போனபடி, முதலமைச்சர் தங்களை அமைச்சர் பொறுப்பிலே இருந்து விலக்கி விடாமல் இருக்க வேண்டு மென்பதற்காகவே தேவையில்லாமல் உங்களைப் பற்றி கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள்.
 எங்களைத் தரம் தாழ்த்திப் பேசினால்கூட நாங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கத் தயார். ஆனால் உங்களைப் பற்றி விஷமத்தனமாக விமர்சனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கொண்டு நாங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்?” என்று மிகுந்த கவலையோடு கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் சமாதானம் கூறுவதைப் போல பேரவைத் தலைவர் “நீங்கள் அவைக்கே வர வேண்டாம், நாங்களே நடத்திக் கொள்கிறோம்” என்று மறைமுகமாக உணரும்படி அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்புக்குப் பிறகுதான், தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் என்னுடைய தலைமையில் 22-7-2014 அன்று மாலையிலே அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று, அதில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 31-7-2014 அன்று சென்னை மாநகரில் நானும், கழகப் பொருளாளர் தம்பி தளபதியும், துணைப் பொதுச் செயலாளர் தம்பி துரைமுருகனும் தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன் தலைமையில் உரையாற்றவிருக்கிறோம். 
ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் தமிழகத்தின் மற்ற நகரங்களில் நம்முடைய பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும், ஏனைய சட்டப்பேரவை உறுப்பினர்களும், கழக முன்னணிப் பேச்சாளர் களும் கலந்து கொண்டு “தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பிலே பொது மக்களுக்கு விளக்கிடும் வகையில் கண்டனக் கூட்டங்களில் உரையாற்றவிருக்கிறார்கள். 
“சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் இந்த ஆட்சியில் இந்த ஆண்டுதான் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறோமா என்றால் இல்லை. அ.தி.மு.க. 2011இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே - 16-8-2011 அன்று கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று, அந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மேலும் கலந்து கொள்வது சரியாக இருக்காதென்று முடிவெடுக்கப் பட்டதோடு, 25-8-2011 அன்று சென்னையில் “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நானும், கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றினோம். 
அதுபோலவே 2012ஆம் ஆண்டிலும் சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அமைச்சர்களும், உறுப் பினர்களும் தி.மு. கழகத்தைப் பண்பாடற்ற முறையில் தாக்குவதையே தொடர்ந்து கடைப் பிடித்த காரணத்தால், அந்த ஆண்டும் 25-4-2012 அன்று “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பிலே சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கூட்டங்களை நடத்தி மக்கள் முன்னால் நம்முடைய கருத்துகளைத் தெரிவித்தோம். 
கடந்த 2013ஆம் ஆண்டில் பேரவைத் தலைவர் அவர்கள், இந்த ஆண்டைப்போலவே கழக உறுப்பினர்களைத் தொடர் கூட்டம் முழுவதிலும் கலந்து கொள்ள அனுமதி மறுத்த காரணத்தால், 24-4-2013 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் நானும், கழகப் பொதுச் செயலாளரும், பொருளாளரும், துணைப் பொதுச் செயலாளரும் கலந்து கொண்டோம். 
“சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பிலே நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, இந்த ஆண்டும் கழக உறுப்பினர்கள் எல்லாம் பேரவைத் தலைவரால் வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், இந்த ஆண்டும் நான்காவது முறையாக அதே தலைப்பில் கண்டனக் கூட்டங்களைக் கழகம் நடத்துகின்றது. ஜெயலலிதாவின் சாதனைப் பட்டியல்களில் ஒன்றாகக்கூட இதனைச் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து, சட்டமன்றத்தில் ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதையும், ஜனநாயகம் கேலிப் பொருளாக ஆக்கப்பட்டு வருகிறது என்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை. 
அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு. கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்ப தற்கு ஒரேயொரு உதாரணம் கூற வேண்டு மென்றால், எந்தவொரு சட்டப்பேரவை மன்றமாக இருந்தாலும், ஒரு கட்சி என்றால், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் ஒரே பகுதியில்தான் சட்டப்பேரவையில் சேர்ந்தாற் போல அமர வைக்கப்படுவார்கள். இதுதான் சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுக் காலமாகக் கடைப்பிடிக் கப்பட்டு வரும் மரபு. ஆனால் இந்தச் சட்டப் பேரவையிலேதான் தி.மு. கழக உறுப்பினர்கள் எல்லாம் ஒரே பகுதியில் அமர வைக்கப்படாமல், ஆங்காங்கு தனித்தனியே அமர வைக்கப்பட் டுள்ளார்கள்.
2011ஆம் ஆண்டில் இந்த ஆட்சி அமைந்தவுடனே இதுபற்றி பேரவைத் தலைவ ருக்கு கழகத்தின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டும், அதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கழக உறுப்பினர்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்தால், என்ன நேருமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

அதே வழியில்தான் தி.மு. கழக உறுப்பினர் களை எவ்வளவு சீக்கிரம் அவையை விட்டு வெளியே அனுப்ப முடியும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வெளியேற்றி விடுகிறார்கள். கழக உறுப்பினர்களைச் செயல்பட விடாமல் அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். 
வெளியேற்றுவதன் மூலம், கழகத்திற்கு வாக்களித்த இலட்சோப இலட்சம் மக்களைத்தான் அவமதிக்கிறார்கள். பரவாயில்லை, அது அவர்கள் பின்பற்றும் அக்கிரம வழி. நம்முடைய வழி அமைதி யான ஜனநாயக வழி. அண்ணா கற்றுக் கொடுத்த பண்பு வழியும், அன்பு வழியும் அதுதான். அந்த வழியில் தமிழகச் சட்ட மன்றத்திலே நம்முடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற போதிலும், மக்கள் மன்றத்திலே அங்கே ஜனநாயகத்திற்குப் புறம்பாக என்ன நடைபெறுகிறது என்பதையும் நாட்டு மக்களின் நலன் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குவோம். 
எந்தெந்த வகையில் எல்லாம் தி.மு. கழக உறுப்பினர்கள் சட்டமன்ற விதிகளுக் குப் புறம்பாக அங்கே நடத்தப்படுகிறார்கள் என்பதையும், அமைச்சர்கள் எவ்வாறு நாகரிகம் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் சட்டமன்ற மரபுகளையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டுப் பேசுகிறார்கள் என்பதையும் பொதுமக்கள் முன்னால் தெளிவாக்கிடுவதற்காகத்தான், இன்று சென்னை மாநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும், ஆகஸ்ட் 1, 2 ஆகிய நாட் களில் மாவட்டத் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங் களிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் என்ன பாடு படுகிறது என்பதை விளக்கவுரையாற்றவிருக் கிறோம். 
“ஜனநாயகம்” என்ற ஒன்று அங்கே இருந்தால்தானே, அது என்ன பாடு படுகிறது என்று பேசலாம். “ஜனநாயகமே” தமிழகச் சட்டமன்றத்தில் கேள்விக்குறியாகி விட்டது. கடந்த மூன்றாண்டு காலமாக இந்த “கோமா” நிலைதான் நீடித்து வருகிறது. அவர்களுக்கு உள்ள தைரியம் எல்லாம், “பணத்தைக் கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கிறோம். அந்தப் பணத்தை வைத்து நாடாளுமன்றத் தேர்தலிலே பெரு வெற்றி பெற்று விட்டோம். மக்கள் நம் பக்கம்தான் என்று பத்திரிகையாளர்களையும் நம்ப வைத்து விட்டோம். 
நாம் வைத்ததுதான் சட்டம். நாம் நடத்துவதுதான் சட்டமன்றம். நாம் எதைச் செய்தாலும் அதனை வரவேற்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிட தமிழ்நாட்டில் சில பத்திரிகைகள் சித்தமாய் இருக் கின்றன” என்று எண்ணுகிறார்கள். அதற்காக நாம் நம்முடைய ஜனநாயகக் கடமையிலிருந்து ஒதுங்கி விட முடியாதல்லவா? நம் கடன் பணி செய்து கிடப்பதே; மக்கள் உண்மையை உணராமலா போய் விடப் போகிறார்கள்? உணருகின்ற காலம் வெகு விரைவில் வந்தே தீரும். ’’

No comments:

Post a Comment


Labels