வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



01/03/2013


தாழ்த்தப்பட்ட, நலிவடைந்தோரை மையமாகக் கொண்ட பட்ஜெட்: கலைஞர் கருத்து
 

மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, தாழ்த்தப்பட்டோர், நலிவடைந்தோரை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய நிதியமைச்சர், நமது தமிழகத்தைச் சேர்ந்த, ப. சிதம்பரம் அவர்கள் எட்டாவது முறையாக நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் என்ற பெருமையோடு - 2013-2014ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையினை வழங்கியிருக்கிறார்.  இந்த நிதிநிலை அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக 97,134 கோடி ரூபாயும் - தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களின் முன்னேற்றத்திற்காக 41,561 கோடி ரூபாயும், சிறுபான்மையினருக்காக கடந்த ஆண்டினை விட 12 சத விகிதம் அதிகப்படுத்தி 3,511 கோடி ரூபாயும், மாற்றுத் திறனாளிகளுக்காக 110 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக 37,330 கோடி ரூபாயும், கல்வித் துறைக்காக 55,867 கோடி ரூபாயும், வேளாண்மைத் துறைக்காக 27,049 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியதாகும். விவசாயிகளுக்கு இந்த ஆண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கை கூறுகிறது.
பெரிதும் எதிர்பார்த்திருந்த, தனி நபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு பெரும்பாலோருக்கு ஓரளவு ஏமாற்றத்தை அளிக்கும். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைப் போல இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் ஆறு மருத்துவ நிறுவனங்கள் அமைக்க விருப்பதும், சென்னை - பெங்களூர் தொழில் நுட்பப் பாதை உருவாகவிருப்பதும், 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெண்களுக்கென தனி வங்கியை அமைக்கவிருப்பதும், 7,500 கோடி ரூபாய்ச் செலவில் தூத்துக்குடியில் புதிய துறைமுகம் ஏற்படுத்தப்படவிருப்பதும் மகிழ்ச்சியோடு வரவேற்கத் தக்க அறிவிப்புகளாகும். துhத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்தி, நவீனப்படுத்துதோடு, அதையொட்டிய சேது சமுத்திரம் திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டமும், நெசவாளர்களுக்கு 6 சதவிகித வட்டியில் கடன் திட்டமும் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் திட்டங்களாகும்.
 நிதியமைச்சர், இந்த நிதி நிலை அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள், ஏழையெளியோர் என சமுதாயத்தின் முக்கியமான பிரிவினருக்கென தனித்தனித் திட்டங்களை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய அறிவிப்புகளாகும்.  நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மானியங்கள் - குறிப்பாக பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், டீசல், சமையல் எரிவாயுவின் விலை சர்வ தேச சந்தை நிலவரங்களுக்கேற்ப உயர்த்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இந்தக் கருத்துகள் ஏற்கப்பட்டால், ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசிகள் மேலும் உயருவதற்கும், ஏழையெளிய, நடுத்தர மக்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் அவை அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.
 காய்கறிகளின் விலை 26 சதவிகிதமும், உணவு எண்ணெயின் விலை 15 சதவிகிதமும், இறைச்சி, மீன், முட்டை விலை 14 சதவிகிதமும், பருப்பு வகைகள் மற்றும் நவதானியங்களின் விலை 15 சதவிகிதமும், சர்க்கரை விலை 13 சதவிகிதமும் உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை எந்த அளவுக்கு விலைவாசிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செல்போன் உபயோகிப்போரின்எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில், அதற்கு 6 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒருசில குறைகள் இருந்த போதிலும்; பெண்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் நலிந்தோர் வாழ்வை மையமாகக் கொண்ட நிதி நிலை அறிக்கை இது என்றே கூறலாம்.

No comments:

Post a Comment


Labels