வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/02/2013

காவிரி தீர்ப்பு: ஜெ குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது- கருணாநிதி

சென்னை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளதன் மூலம் திமுக மீது முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு மாறானவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சனை தொடர்பாக பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றக் காலத்திலிருந்து தமிழகத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகும் கூட, தொடர்ந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 முதல் அமைச்சர்களோடும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்களோடும் பிரதமர்களோடும் அதிக முறை பேச்சுவார்த்தை நடத்தியவன் என்ற முறையிலும்;
17-2-1970 அன்று முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று, நான் முதல்வராக இருந்த போதுதான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியவன் என்ற முறையிலும்;
8-7-1971 அன்று நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்று தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து அதனை நிறைவேற்றச் செய்தவன் என்ற முறையிலும்;
27-7-1989 அன்று முதலமைச்சராக இருந்து நான் கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடுவர் மன்றம் அமைத்திடுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்;
24-4-1990 அன்று தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றம் தேவை என்று தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டதன் காரணமாக 2-6-1990 அன்று வி.பி. சிங் பிரதமராக இருந்த போது, நடுவர் மன்றம் மத்திய அரசினால் அமைக்கப்படப் பெரிதும் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்;
28-7-1990 அன்று கழக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் சார்பில் இடைக் காலத் தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்று கோரி மனு செய்ததையொட்டி 25-6-1991 அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை வழங்க பெரிதும் காரணமாக இருந்த தி.மு. கழக அரசின் முதலமைச்சர் என்ற முறையிலும்;
5-2-2007 அன்று கழகம் ஆட்சியிலே இருந்த போது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவரக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்;
அந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று பலமுறை வேண்டுகோள் விடுத்தவன் என்ற முறையிலும்;
உச்ச நீதிமன்றமே முன் வந்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து; இன்றைய தினம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், இதற்கு பெரிதும் காரணமாக இருந்த உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கு நன்றியையும் பெரு மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்வாயிலாக மத்திய அரசு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடாமல் வேண்டுமென்றே வைத்திருந்தது என்றும், அதற்கு தி.மு. கழகமும் துணை புரிந்தது என்றும் இன்னும் சொல்லப் போனால் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி இதனை வெளியிடாமல் செய்கிறார்கள் என்றும் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு மாறானவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment


Labels