வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

06/02/2013

சட்டசபையில் ஜெ.அன்பழகன் வெளியேற்றம்: திமுக எம்எல்ஏக்கள் 2வது முறையாக வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். இது அவரது கன்னிப் பேச்சாகும்.
அவர் பேசுகையில், ஒரே கையெழுத்தில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு கடனை திமுக தலைவர் கருணாநிதி தள்ளுபடி செய்தார். இந்த ஆட்சியில் மின்வெட்டு அதிகமாகி விட்டது. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இன்னும் அறிவிக்கவில்லை என்றார்.
அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் குறுக்கிட்டு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் குறுக்கிட்டு விளக்கம் அளிக்கையில், இந்த மின்வெட்டுக்கு 100 சதவீத காரணம் திமுக ஆட்சிதான். அவர்களது ஆட்சியில் 4,000 மெகாவாட் தேவைக்கு 206 மெகாவாட் மின்உற்பத்திதான் செய்தார்கள். மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள் என்பதால் அதை திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டார்களோ அல்லது குடும்ப பிரச்சனையை தீர்க்கவே நேரம் இல்லை என்பதால் இதை கவனிக்காமல் விட்டார்களோ என்று தெரியவில்லை என்றார்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்து குரல் கொடுத்தனர். அப்போது திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன் ஆகியோர் எழுந்து நின்று பேச அவர்களுக்கும் அதிமுக தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து செங்குட்டுவன், ஜெ.அன்பழகன சபாநாயகர் எச்சரித்தார். ஆனாலும் ஜெ.அன்பழகன் சபாநாயகரை பார்த்து கைநீட்டி விளக்கம் சொல்ல அனுமதி கேட்டார். பலமுறை தொடர்ந்து ஜெ.அன்பழகன் கைநீட்டி கேட்டதால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சபை காவலர்கள் அவரை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து 2வது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக டெசோ மாநாடு பற்றிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Labels