வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

23/02/2013

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுக: கருணாநிதி

சென்னை: நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. மேலும் சீர்காழியில் தமிழிசை மூவரின் நினைவாக அவர்களது முழு உருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினையும், விழுப்புரம் மாவட்டம் ஓமந்துhரில் ஓமந்துhரார் மார்பளவு சிலையுடன் கூடிய மணி மண்டபத்தினையும், திண்டுக்கல் மாவட்டத்தில் விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தையும் முதல் அமைச்சர் திறந்து வைத்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில்...
தமிழிசை மூவரான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோருக்கு சீர்காழியில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய்ச் செலவில் முழு உருவச் சிலைகளுடன் கூடிய மணி மண்டபம் கட்ட திமுக ஆட்சியில் திட்டமிட்டு, பணிகள் நிறைவேறி, அது முடிவுறும் கட்டத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சி மாறியது. அதற்குப் பின் இந்த 20 மாத காலமாக அந்த மணி மண்டபம் திறக்கப்படாமலேயே கிடந்தது. பின்னர் மணிமண்டபம் வீடியோ-2 கான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு செய்தி வெளியீட்டில் தி.மு.க ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம் என்பதைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
மணி மண்டபங்கள்
அதுபோலவே முதலமைச்சர் ஜெயலலிதா 20-2-2013 அன்று திறந்து வைத்த ஓமந்தூரார் மணி மண்டபமும், கோபால் நாயக்கர் மணி மண்டபமும் திமுக ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டன. அதாவது 2010-2011ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்த இரண்டு மணி மண்டபங்களும் அறிவிக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணிமண்டபங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மணிமண்டபங்களைத் தான் முதலமைச்சர் ஜெயலலிதா 20-2-2013 அன்று வழக்கம் போல வீடியோ-கான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்திருக்கிறார்.
நெம்மேலி திட்டம்
சென்னை மாநகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கிட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றைச் சென்னைக்கு அருகே அமைத்திட வேண்டுமென திமுக மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தது. 2004இல் மத்தியில் அமைந்த ஐ.மு. கூட்டணி அரசு, திமுகவின் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. அதன்பயனாக, 2004-2005ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர், "சென்னை மற்றும் கொரமண்டல் கடற்கரை நெடுகிலும் உள்ள நகரங்களுக்கு நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறனுடைய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அன்றைய அ.தி.மு.க. அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் இறுதிவரை அ.தி.மு.க. அரசு இருந்து விட்டது.
அந்நிலையில், 2006இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இதனைச் சுட்டிக்காட்டி, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தபிறகு, இந்த மாபெரும் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிப்படி, 2006இல் தமிழகத்தில் கழக அரசு அமைந்தபின், தென்சென்னை பகுதியில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து அந்த அறிக்கையை, 27.1.2008 அன்று மத்திய நிதியமைச்சரிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்திற்கான அனுமதியையும், நிதியுதவியையும் உடனே வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
டெல்லிக்கு ஸ்டாலின்
தொடர்ந்து இந்தத் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த ஸ்டாலினையும், அரசு அதிகாரிகளையும் டெல்லிக்கு அனுப்பி, இந்தத் திட்டம் பற்றி துரிதப்படுத்தியன் அடிப்படையில், இத்திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 908 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடப் பரிந்துரை செய்தது.அதன்மீது, மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் குழு 2.1.2009 அன்று இத்திட்டத்திற்கு 871 கோடியே 24 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்க ஒப்புதல் அளித்தது.
அத்துடன், 2009 மார்ச் திங்களில் இத்திட்டத்திற்குரிய நிதியில் மத்திய அரசு தமிழக அரசுக்கு முதல் தவணையாக 300 கோடி ரூபாயை வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்காக, திட்டப் பணிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து, 533 கோடியே 38 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி; 13 கோடியே 46 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைத்திடும் திட்ட மேலாண்மைக்கான கலந்தறிதற்குரியவரை நியமிக்கும் பணி ; 121 கோடியே 47 இலட்ச ரூபாய்ச் செலவில் நெம்மேலியிலிருந்து சென்னைக்குக் குடிநீரைக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன.அதன்பின்னர், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை 23.2.2010 அன்று துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனையடுத்து, இத்திட்டத்திற்காக நிலத்தை மேம்படுத்தும் பணிகளில் 60 விழுக்காடு பணிகளும், கட்டுமான தாங்கிகளை அமைப்பதில் 85 விழுக்காடு பணிகளும், மற்ற பணிகள் அனைத்தும் முழு வீச்சில் விரைவாக திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றன.
அதிமுக ஆட்சியில் தாமதம்
இத்திட்டத்தின்மூலம், கிடைக்கும் குடிநீரைக் கொண்டு செல்ல 66 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் வேலைகள் விரைவாக நடந்தன. இதே வேகத்தைக் கடைப்பிடித்து இத்திட்டத்திற்கான பணிகள் அனைத்தையும் 2011 டிசம்பருக்குள் நிறைவேற்றி முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2011 டிசம்பருக்குக்குள் முடிந்திருக்க வேண்டிய பணிகள் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக ஓராண்டுக்குப் பிறகு இப்போது தான் தொடக்க விழா நடைபெறுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நெம்மேலி திட்டம் மூலமாக சென்னை மாநகர மக்களுக்கு கூடுதலாக நாள்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அம்மையாரால் தற்போது தொடங்கி வைக்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை தான் என்பதற்கு இவைகளே தக்கச் சான்றுகளாகும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels