வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/02/2013

எனது மணிவிழாவை அறப்பணிகளுக்கு செலவிட்டு கொண்டாடுங்கள்.. ஸ்டாலின்

சென்னை: எனது 60வது பிறந்த நாளை சமூக நலப் பணிகள், அறப்பணிகளுக்கு செலவிட்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 1-3-2013 அன்று எனக்கு அறுபது வயது நிறைவடைகிறது. தனிமனித வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான கட்டம் என்பதால், சான்றோர் மணி விழா என்றழைப்பர்.
எனது பிறந்த நாளான மார்ச்-1 அன்று மிகுந்த அமைதி - அடக்கத்தோடு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்திட வேண்டுமென நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்.
எனது பிறந்தநாளன்று இளைஞரணியினரும், கழகத்தினரும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் வகையில் பேனர்கள், கட்-அவுட்கள் வைத்திட எண்ணியிருப்பீர்கள். ஆனால், அப்படிச் செய்வது எனக்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாகாது.
பத்திரிகைகளில் விளம்பரங்கள் தருவதும் - சுவரொட்டிகள் ஒட்டுவதும் - பேனர்கள், கட்அவுட்டுகள் வைப்பதும் - பிறந்தநாள் விழா என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்வதும் கட்டாயமாகவும் - கண்டிப்பாகவும் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று பலபடப் பாராட்டும் சுவர் எழுத்துக்கள் - வண்ண வண்ணச் சுவரொட்டிகள் - பேனர்கள் - ப்ளக்ஸ் போர்டுகள் - செய்தித்தாள் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் எனது பிறந்தநாளைக் கொண்டாட எண்ணிடாமல்; அவற்றிற்காகும் செலவுத் தொகையினை ஆங்காங்கே நலிந்த மக்களுக்கு நலன் பயக்கும் நலத்திட்ட உதவிகளெனச் செய்து எனக்குத் தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறேன்.
கழகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் சமூக நலப்பணிகளை மேற்கொள்வோர் எவ்வித ஆடம்பரமுமின்றி, ஆக்கப்பூர்வமான முறையில் அதனை நடத்திட வேண்டுகிறேன். இது என் கண்டிப்பான வேண்டுகோள்.
அதைப்போலவே, வழக்கம் போல, தமிழகம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் எனது பிறந்தநாளினை யொட்டி, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தி, திமுக கொள்கை விளக்கம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்வதுடன்; எனது பிறந்தநாளன்று வாழ்த்துச் சொல்ல சென்னை - ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வருவோர், சால்வைகள் - மாலைகள் அணிவிக்காமல், திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்துத் திரட்டிவரும் நாடாளுமன்றத் தேர்தல் நிதிக்கு ஒவ்வொருவரும் தமது பங்கினைச் செலுத்திடத் தயாராக வரவேண்டுமென்றும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனது பிறந்த நாள் - நலிந்தோர்க்கு நலம் பயக்கும் நாளாகவும்; நமது கழகத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும் நாளாகவும் நடந்தேறவும்; ஆரவார விளம்பரங்களுக்கு அணுவளவும் இடம்தராமல், அமைதியாக நடைபெறவும்; அனைவரும் எனது உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்டு, ஒத்துழைத்திட வேண்டுமென்றும் - என்மீது அன்பு கொண்டோர் இந்த வேண்டுகோளை கண்டிப்பான முறையில் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டுமென்று உரிமையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels