வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



11/02/2013

காவிரி பிரச்னையில் குறை கூறுவதா? :
ஜெ.,வுக்கு கலைஞர் பதில்



முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கலைஞர் பதிலளித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’கடந்த 8-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 17-2-1970-ல் திமுக ஆட்சியில் தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்காக 8-7-1971-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியின்போது 27-7-1989-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2-12-1989-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கிற்கு கடிதம் எழுதினேன்.
வி.பி. சிங் கேட்டுக் கொண்டதன்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி 24-4-1990-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாகவே 2-6-1990-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25-6-1991-ல் நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 
1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் இந்த இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. 7-8-1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணை யம் அமைப்பது என்றும் முடிவானது. இது திமுக ஆட்சியில்தான் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007-ல் திமுக ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தமிழகத் துக்கு பாதகமாக வந்துள்ளதாக அப்போது ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.ஆனால், இப்போது அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பாடுபட்டு வருவதாக சொல்லிக் கொள்கிறார்.

அதற்கு திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அதனை திமுக எம்.பி.க்கள் தடுத்தார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்.
இந்த வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகவே காவிரி பிரச்னையில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்’’ என  கூறியுள்ளார்.


No comments:

Post a Comment


Labels