வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/02/2013

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக சட்டம் கொண்டு வந்தது திமுக -ஸ்டாலின்

துபாய்: கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள், குறிப்பாக துபாய் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், திட்டங்கள் வகுத்து செயல்படுத்த ஏதுவாக தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டம் என்ற ஒரு சட்டத்தை 2011 தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றி, அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றோம். ஆனால் பின்னர் தேர்தல் வந்ததால் அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுப் போனது என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
துபாயில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது...
உலகின் அனைத்துப்பகுதிகளிலும் தமிழர்கள், தமது அறிவாற்றலினாலும், உழைப்புத் திறத்தாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

துபாய் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் நாடாகும். இந்த நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் இஸ்லாமியர், கிறித்துவர்கள், இந்துக்கள் பெருமளவில் உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடாக இருந்த போதும், இங்கு வசிக்கும் பிற மதத்தினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அனைத்து மதங்களின் மக்களும் மனிதநேயம் போற்றி, மத நல்லிணக்கத்தோடு கூடி வாழ்கின்றனர்.
பாரசீக நாடுகளுக்கும், தமிழகத்திற்கும் பல்லாண்டுகளாகத் தொடர்பு இருந்ததை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இந்தியா, இலங்கை, மலேசியாவுக்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவில் தமிழ் மக்கள் வசித்து வரும் பகுதியாக பாரசீக வளைகுடா திகழ்கிறது.
எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தமிழகத்தின்பால், தமிழ்ப் பண்பாட்டின்பால் நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பும், உறுதியும், பற்றும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. திமுக கூட எந்த ஒரு மதத்தோடும் நட்பு பாராட்டக்கூடியது.
மனிதநேயத்தையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், சகோதரத்துவத்தையும் எடுத்துக்கூறி, அதனை செயல்படுத்துகிற இயக்கம் திமுக இன்னும் சொல்லப்போனால், சிறுபான்மையினர் நலனுக்கு பாதுகாப்பு அரணாக, அவர்களுக்காக எங்கும் எப்போதும் குரல் கொடுத்து உறுதுணையாக இருந்து வரும் அமைப்புதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்நாட்டில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அதற்கு நமது கலாச்சாரம் மட்டும் அல்ல தந்தை பெரியார் அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையும், அறிஞர் அண்ணா தந்த கொள்கையும், தலைவர் கலைஞரின் இடைவிடா நடவடிக்கைகளும் காரணமல்லவா?
பொருளாதார வளர்ச்சியோடு, சமூக வளர்ச்சியும் கைகோர்த்து வளரவேண்டும் என்பது எங்கள் குறிக்கோளாகும். சிறுபான்மையினர் நலன், பெண்கள் முன்னேற்றம், சாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் போன்றவை எல்லாம் கழகம் என்றுமே தீவிரமாகச் செயல்படுத்தி வருபவை.

தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள், குறிப்பாக துபாய் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், திட்டங்கள் வகுத்து செயல்படுத்த ஏதுவாக தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டம் என்ற ஒரு சட்டத்தை 2011 தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றி, அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றோம்.
ஆனால், அதற்குப்பின்பு தேர்தல் நடைமுறை விதிகள் செயல்பாட்டுக்கு வந்ததால், அந்தச் சட்டத்தின்கீழ் விதிகளை உருவாக்கும் பணியையும் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் பணிகளையும் செய்ய இயலாமல் போயிற்று.
இந்தச் சட்டத்தின்படி இதுவரையிலும் எந்தவிதமான நலத்திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்பது இன்றைய நிலையாக உள்ளது. ஆயினும், நீங்கள் விரும்பும் வண்ணம், மீண்டும் கழகம் ஆட்சிக்கு வருமானால், உங்களுக்கெல்லாம் பயனளிக்கும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment


Labels