வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



11/02/2013

திமுக ஆட்சி மின் திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஜெயலலிதா: கருணாநிதி

சென்னை: திமுக ஆட்சியில் பெரு முயற்சி எடுத்துச் செயல்படுத்திய திட்டங்களைத் தான் முதல்வர் ஜெயலலிதா 19 மாதங்களில் அவர் செய்ததைப் போல சொல்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதிமுக ஆட்சியில் (2001-2006) கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள், திமுக ஆட்சியில் நிறைவேற்றாதது தான் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியுள்ளார். வடசென்னை அனல் மின் நிலையம் 2-ம் நிலைக்கு 26.6.2001-ல் 1-வது அலகு மூலமாக ரூ.2,475 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியை விட்டு இறங்கும்வரை அந்த மின் திட்டம் தொடர்பாக எந்தப் பணியையும் செய்யவில்லை. பிறகு, திமுக ஆட்சியில்தான் 18.2.2008 அன்று முதல் அதற்கான பணிகள் பி.எச்.இ.எல் நிறுவனத்தாருடன் பேசி, துரிதமாகச் செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த விவரத்தை முதல்வர் ஜெயலலிதா அப்படியே மறைத்துள்ளார். வடசென்னை அனல் மின் நிலையம் 2-ன் மூலமாக ரூ.2,175 கோடி மதிப்பீட்டில் 2-வது அலகு அமைக்க 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திமுக ஆட்சியில்தான் 2008 அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெறத் தொடங்கின. 2007-ல் மேட்டூர் அனல் மின் நிலையம் மூலமாக ரூ.3,100 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திமுக ஆட்சியில்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டம் தான் இப்போது மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. 2002-ல் அதிமுக ஆட்சியில் 1,000 மெகா வாட்டுக்கு தேசிய அனல் மின் கழகத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ஆனால் அதைத் தொடர்ந்து எந்தப் பணியும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் தான் இதனை 1,500 மெகாவாட் என்ற அளவுக்கு உயர்த்தி ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் வல்லூரில் அமைத்திட பி.எச்.இ.எல். நிறுவனத்தாரால் விரைவாகப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. அதைப்போல அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதிலும் எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை. பிறகு, திமுக ஆட்சியில் தான் ரூ.4,909 கோடி செலவில் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டி பி.எச்.இ.எல் நிறுவனத்தாரால் விரைவாகச் செயல்படுத்தப்பட்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்குதல் மூலம் ரூ.1,126 கோடி மதிப்பீட்டில் 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் பவானி கட்டளை தடுப்பணை புனல் மின் திட்டம்-3 என்ற திட்டம் ரூ.396.60 கோடி மதிப்பீட்டில் 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அரசாணை பிறப்பித்திருந்தாலும், அதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் விரைவாகச் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத மின் திட்டங்கள் அனைத்தும் விரைவாகச் செயல்படுத்தப்பட்டன. எனவே, திமுக ஆட்சியில் பெரு முயற்சி எடுத்துச் செயல்படுத்திய திட்டங்களைத் தான் முதல்வர் ஜெயலலிதா 19 மாதங்களில் அவர் செய்ததைப் போல சொல்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment


Labels